கர்நாடகாவில் தடை நீக்கம்: ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள்

- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
சில ஆசிரியர்களால் பூணூல் (தென்னிந்தியாவில் ஜனிவாரம் என்று அழைக்கப்படும் புனித நூல்) அணிவது தடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது நிம்மதியை அளித்துள்ளது.
மாண்டியாவில் உள்ள தனது கல்லூரியில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக "அல்லாஹு அக்பர்" என்று முழக்கமிட்டு, அதன் மூலம் "ஹிஜாப் பெண்" என்ற புனைப்பெயரைப் பெற்ற முஸ்கான் கான், தற்போது தனது படிப்பை மீண்டும் தொடரத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், தனது மகன் ஆனந்த் எஸ். தீர்த்தா தற்போது சந்தித்து வரும் அதே கொடுமையை மற்ற மாணவர்கள் சந்திக்க நேரிடக்கூடாது என சுவர்ணா தீர்த்தா விரும்புகிறார்.
மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன்பு, அவர் தனது பூணூலைக் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
"பூணூலை கழற்றக் கூடாது என்று தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன. ஆனால் அது கடந்த ஆண்டும் நடந்தது, இந்த ஆண்டும் நடந்துள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் தான் சிறப்பாகச் செய்திருக்கிறோமா இல்லையா என்பது குறித்து உறுதியாகத் தெரியாததால் அவர் இன்னும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்" என்று சுவர்ணா தீர்த்தா பெங்களூருவில் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார்.
"அவன் பியூசி தேர்வில் (PUC board exam) 94 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ஒரு நல்ல கல்லூரியில் சேர்வதற்கு, பியூசி தேர்வின் 50 சதவிகித மதிப்பெண்களும், சிஇடி தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன."
கர்நாடக அரசு இந்த வார தொடக்கத்தில், 2022 இல் பாஜக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை ரத்து செய்து புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
அந்தப் புதிய உத்தரவில், "மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆடையுடன் சேர்த்து, குறிப்பிட்ட அளவிலான பாரம்பரிய மற்றும் கலாசார அடிப்படையிலான சின்னங்களை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, "இத்தகைய ஏற்றுக்கொள்ளத்தக்க சமூக மற்றும் பாரம்பரியச் சின்னங்களில் தலையில் கட்டும் பாகை (turban), புனித நூல் (sacred thread), சிவமாலை, ருத்ராட்சம், ஹிஜாப் அல்லது மாணவர்கள் பொதுவாக அணியும் பிற சமூக மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் அடங்கலாம். ஆனால், அவை மாணவரின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் அடையாளத்தை பாதிக்கக் கூடாது"என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்கான் கானின் அனுபவம்
முஸ்கான் கான் பிப்ரவரி 8, 2022 அன்று நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார், அப்போது அவர் தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்குச் சென்றார்.
கல்லூரி வாயிலில் சில மாணவர்களும் அடையாளம் தெரியாத சில நபர்களும் இருந்தனர். அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தியவுடன், வெளியில் இருந்து வந்த ஒரு குழுவினர் அவர் ஹிஜாபை கழற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதுகுறித்து பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அவர், "அப்போதுதான் நான் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கத்தை எழுப்பினேன். பிறகு, 'ஏன் இந்த முழக்கத்தை எழுப்பினீர்கள்? வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பியிருக்கலாமே' என்று என்னிடம் கேட்கப்பட்டது," எனக் கூறினார்.
"ஆனால் மகாத்மா காந்தி சுடப்பட்ட போது, அவர் 'ஹே ராம்' என்று சொன்னார். அதேபோல், எந்தவொரு நபரும் தான் நம்பும் ஒருவரைத்தான் அழைப்பார்" என்றார்.
தனக்கு உதவி செய்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்ற விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு முஸ்கான் கான் நன்றி தெரிவித்தார்.
"அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள்" என்று அவர் கூறுகிறார்.
அவருடன் உறுதியாக நின்ற தோழிகள், இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். "ஏனென்றால், பல ஆண்டுகளாக நான் ஹிஜாப் அணிவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்" என்கிறார் முஸ்கான் கான் .

பட மூலாதாரம், Video Grab
அந்த சம்பவத்துக்கு பிறகு என்ன நடந்தது?
பி.காம் படிப்பின் மூன்றாவது செமஸ்டர் தேர்வுக்கு சற்று முன்பு தான் அந்த சம்பவம் நடந்திருந்ததால், அவரால் தேர்வு எழுத முடியவில்லை.
"நாங்கள் பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். என் அம்மா என்னை வெளியே விடவில்லை. அதனால்தான் நான் ஒரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதேபோல், வேறு பல பெண்கள் தேர்வு எழுதாமலேயே சேர்க்கை பெற்றனர். ஹிஜாப் அதற்கு முன்பு ஒருபோதும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "படிக்க விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு சமூகங்களின் மரபுகளை மனதில் கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது"என்று கூறுகிறார்.
தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில், சிஇடி தேர்வு மையத்தில் பல மாணவர்கள் தங்களின் பூணூலை கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தொடர்பாக அவர் வருத்தப்படுகிறார்.
எதிர்காலத்தில், அவர் தனது முதுகலைப் படிப்பை முடித்த பிறகு சட்டம் படிக்க விரும்புகிறார்.
"கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், இந்தியா முன்னேற உதவவும் நான் என் சமூகத்துக்கு சேவை செய்வேன். நான் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விரும்புகிறேன், பெண்கள் தங்களின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டே கல்வியைத் தொடர முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவ விரும்புகிறேன். அறிவைப் பெறுவதற்கு இஸ்லாம் நமக்கு வழிவகை செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.
ஆனந்த தீர்த்தரின் கதை

பட மூலாதாரம், Umesh Marpally/BBC
ஆனந்தின் தாய் சுவர்ணா தீர்த்தா, தனது மகன் 12-ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், பொறியியல் கல்லூரியில் சேர மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் கூறினார்.
"தேர்வுக்குப் பிறகு, அவன் சிஇடி (பொது நுழைவுத் தேர்வு) தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினான். ஏப்ரல் 24 அன்று, என் கணவர் அவனை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். பெற்றோர் நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர்" என்று அவர் கூறுகிறார்.
"பரிசோதனை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் சோதித்து, சங்கிலிகள், கடிகாரங்கள் போன்றவற்றை கழற்றுமாறு சொன்னார்கள். அவர்கள் ஜனிவாராவை (பூணூல்) பார்த்துவிட்டு, அதை கழற்றுமாறு அவனிடம் கூறினர். அவன் 10 ஆண்டுகளாக அதை அணிந்திருந்தான். ஜனிவாரா அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவன் தேர்வு மையத்துக்கு வெளியே இருந்த தன் தந்தையை அழைத்தான்."
பியூசி படிப்பில் ஆனந்த் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சுவர்ணா தீர்த்தா தெரிவித்தார்.
"சிஇடி தேர்வில், 50 சதவிகித மதிப்பெண்கள் பியூசி தேர்வு முடிவுகளில் இருந்தும், 50 சதவிகித மதிப்பெண்கள் சிஇடி தேர்விலிருந்தும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாங்கள் மதிய வேளையில் கல்லூரி முதல்வரையும் சந்தித்தோம். (ஜனிவாரா அணிய அனுமதிக்க வேண்டும் என) தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரும் இது ஏன் நடந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. கடந்த ஆண்டும் அரசு வழிமுறைகளை வெளியிட்டிருந்தது, ஆனால் அந்த வழிமுறைகளையும் மீறி இது நடந்துள்ளது" என்று கூறிய அவர்,
"அவன் (ஆனந்த் தீர்த்தா) மிகவும் மனமுடைந்துள்ளான். நாங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதேபோன்ற நடவடிக்கையால் மேலும் நான்கு-ஐந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களின் எதிர்காலம் சிஇடி மதிப்பெண்களைப் பொறுத்தே அமைந்துள்ளது" என்றார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 299 (எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளையோ அல்லது அதன் மதத்தையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் திட்டமிட்ட மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 302 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரிப்பது அல்லது சைகை செய்வது) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சுவர்ணா தீர்த்தா கூறுகையில், " தேர்வு எழுதும் வேறு எந்த நபருக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இந்த புகாரை அளித்தோம்" என்றார்.
அவரது கணவர் சுதீந்திர தீர்த்தா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "அவன் ஒட்டுமொத்தமாக 97 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றால், நன்கொடைக் கட்டணம் செலுத்தாமல் சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற வாய்ப்பு உள்ளது. எங்களால் நன்கொடை செலுத்த முடியாது" என்றார்.
தேர்வில் முறைகேடு செய்வதற்கு பூணூல் எவ்வாறு பயன்படுத்தப்பட முடியும் என்று ஆனந்த் தீர்த்தாவின் பெற்றோர் (சுவர்ணா மற்றும் சுதீந்திரா) கேள்வி எழுப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































