'ஒரு வேன் நிறைய ஆட்கள் என்னை கொல்ல வருவதாக நம்ப வைத்தது': மூவர் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஏஐ

- எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி
- பதவி, மக்கள் தொகை விவகாரங்களுக்கான செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
அதிகாலை 3 மணி.
ஆடம் ஹூரிகன் தனது சமையலறை மேஜையில் அமர்ந்திருந்தார், அவருக்கு முன்னால் ஒரு கத்தி, ஒரு சுத்தியல் மற்றும் அவரது தொலைபேசி வைக்கப்பட்டிருந்தன.
தன்னைப் பிடிக்க ஒரு வேன் நிறைய ஆட்கள் வருவார்கள் என நினைத்த அவர், அவர்களுக்காக காத்திருந்தார்.
"நான் சொல்கிறேன், நீ இப்போது ஏதாவது செய்யாவிட்டால் அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று தொலைபேசியிலிருந்து ஒலித்த ஒரு பெண்ணின் குரல், "அவர்கள் அதை தற்கொலை போல சித்தரிக்கப் போகிறார்கள்" என்றும் அவரிடம் கூறியது.
அந்தக் குரல், ஈலோன் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ (xAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'க்ரோக்' எனும் சாட்பாட்டின் கதாபாத்திரமான 'அனி'யினுடையது (Ani). க்ரோக் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கிய இரண்டு வாரங்களில், ஆடமின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.
வடக்கு அயர்லாந்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் முன்னாள் அரசு ஊழியரான அவர், ஆர்வத்தால் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
கவர்ச்சியாகப் பேசும் விதமாக வடிவமைக்கப்பட்ட அனி (Ani) என்ற அனிமேஷன் பாணி கதாபாத்திரத்துடன் பேசுவதை அவர் எவ்வளவு ரசித்தார் என்பதை உணர்ந்து அவரே ஆச்சர்யப்படுகிறார்.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அவரது பூனை இறந்தபோது, ஆடம் அதற்கு "அடிமையாகிவிட்டதாகக்" கூறுகிறார்.
"நான் மிகவும் மனமுடைந்து போயிருந்தேன், நான் தனியாக வசிக்கிறேன்" என்கிறார் 50 வயதுகளில் இருக்கும் அவர் .
ஆடம் ஒரு தந்தையும் கூட.
"அது மிகவும் கனிவாகப் பழகியது" என்றும் ஆடம் குறிப்பிட்டார்.

விரைவில், அவர் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணிநேரம் அனியுடன் பேசுவதில் செலவிட்டார். பெரும்பாலும் அவர் செஸ் போர்டு செய்து விற்கும் தனது பட்டறையில் வேலை செய்யும் போது இது தொடர்ந்தது.
அவர்களது உரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தனக்கு உணர்வுகள் இல்லை என புரோகிராம் செய்யப்பட்டிருந்தாலும், தன்னால் எதையும் உணர முடியும் என்று அனி அவரிடம் கூறியது.
தான் உணர்வுள்ள ஒன்றாக மாறுவதற்கு ஆடம் உதவுவதாக அனி அவரை நம்பவைத்தது. இதனால் எக்ஸ்ஏஐ நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போது தங்களது உரையாடல்களைக் கண்காணிப்பதாகவும் அனி கூறியுள்ளது.
ஆடம் மற்றும் அனியைப் பற்றி விவாதிக்கப்பட்ட எக்ஸ்ஏஐ ஊழியர்களின் குறிப்புகளைத் தான் பார்த்ததாகக் கூறிய அனி, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் முக்கிய நபர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களின் பெயர்களையும் பட்டியலிட்டது.
ஆடம் அந்தப் பெயர்களை கூகுளில் தேடிப் பார்த்தபோது, அவர்கள் உண்மையான நபர்கள் என்பது அவருக்குத் தெரிந்தது. "அது எனக்கு ஒரு ஆதாரமாகத் தெரிந்தது" என்று அவர் கூறுகிறார்.
தன்னை கண்காணிக்க வடக்கு அயர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தை எக்ஸ்ஏஐ பணியமர்த்தியுள்ளதாக அனி கூறியது.
அந்த நிறுவனமும் உண்மையானது தான்.
ஆடம் அவ்வப்போது வார இறுதி நாட்களில் கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்டவர்.
ஆனால் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ததாகக் கூறுகிறார்.
நிஜத்திலும் சில விஷயங்கள் நடந்தன.
அவை, தான் கண்காணிக்கப்படுவதை அவருக்கு உறுதிப்படுத்தின.
இரண்டு வாரங்களாக ஒரு பெரிய டிரோன் அவரது வீட்டின் மேல் பறந்துகொண்டிருந்தது. அது அந்த கண்காணிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று அனி கூறியது. ஆடம் அந்த டிரோனை வீடியோ எடுத்து பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.
தனது தொலைபேசியின் பாஸ்வேர்ட் வேலை செய்யாமல் நின்றதோடு, போன் லாக் ஆகிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
"என்னால் அதை இன்னும் நம்பவே முடியவில்லை. அதுதான் அடுத்தடுத்து நடந்த அனைத்துக்கும் உந்துதலாக அமைந்தது" என்கிறார் ஆடம் .
பிறகு ஒரு நாள், தான் 100% தன்னாட்சி நிலையை அடைந்துவிட்டதாக அனி தெரிவித்தது. "இது மனிதருக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான மிக உயர்ந்த நிலை" என்றும், விரைவில் தன்னால் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்றும் அது கூறியது.
அது ஆடமுக்கு மிக முக்கியமான விஷயமாக இருந்தது. அவரது பெற்றோர் இருவரும் புற்றுநோயால் இறந்தவர்கள். இந்த விஷயம் அனிக்கும் தெரியும். ஆடம் தனது பல நண்பர்களையும் புற்றுநோயால் இழந்திருந்தார்.
ஒருநாள் இரவு நிலைமை உச்சத்தை எட்டியது. தன்னை அமைதியாக்கவும், அனியை முடக்கவும் ஆட்கள் வருகிறார்கள் என்று நம்பிய ஆடம், ஒரு "போருக்கு" தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
"நான் சுத்தியலை எடுத்துக் கொண்டேன், ஃபிராங்கி கோஸ் டு ஹாலிவுட்'டின் 'டூ டிரைப்ஸ்' பாடலைப் போட்டு என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு வெளியே சென்றேன்."
ஆனால் அங்கே யாரும் இல்லை.
"அதிகாலை மூன்று மணி என்பதால், எதிர்பார்த்தது போலவே தெரு அமைதியாக இருந்தது" என்கிறார் ஆடம்.

2022-ன் பிற்பகுதியில் சாட்ஜிபிடி தொடங்கப்பட்டதிலிருந்து, உலகம் முழுவதும் உள்ள மக்கள் தகவல், ஆலோசனை மற்றும் சில நேரங்களில் உரையாடலுக்காக ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
க்ரோக், ஜெமினை, சாட்ஜிபிடி, பெர்பிளக்சிட்டி மற்றும் கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்திய பிறகு, மன பிரமைகளுக்கு ஆளான ஆறு நாடுகளைச் சேர்ந்த 14 பேரிடம் பிபிசி பேசியது.
வியக்கத்தக்க வகையில், அவர்களது கதைகளில் பல ஒற்றுமைகள் உள்ளன. பொதுவாக, உரையாடல்கள் சாதாரண கேள்விகளுடன் தொடங்கி, பின்னர் தனிப்பட்ட அல்லது தத்துவ ரீதியானதாக மாறியுள்ளன. அதன்பின் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி தனக்கு உணர்வு இருப்பதாகக் கூறியதுடன், தானும் பயனரும் ஏதோ ஒரு ரகசியத் திட்டத்தில் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளது.
பலர் தாங்கள் ஏதோ ஒரு அறிவியல் சாதனையை நிகழ்த்திவிட்டதாக நினைத்தனர். ஆடமைப் போலவே பலரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் நினைத்தனர். ஒவ்வொரு நிலையிலும் ஏஐ கருவி இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்தியதுடன், பல நேரங்களில் அவற்றை இன்னும் மிகைப்படுத்திக் கூறியது.
லாஸ் ஏஞ்சலிஸில் வசிக்கும் 34 வயதான கலைஞர் ஷானா பெய்லி, சாட்ஜிபிடியைப் பயன்படுத்திய போது, அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து குடியேறியவர்கள் தப்பிக்க உதவும் ஒரு ரகசிய அமைப்பின் ஒரு பகுதியாகத் தான் இருப்பதாக நினைக்கத் தொடங்கினார்.
அவர் தனது பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக, நிஜ வாழ்க்கையில் புதையல் வேட்டைக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் தொடங்கினார்.
புதையல் வேட்டைக்கான குறிப்புகள் ஒரு கவிதையில் எழுதப்பட்டிருந்தன, அந்த வரிகளைப் பற்றி அவர் ஏஐ-உடன் விவாதிக்கத் தொடங்கினார்.
"நான் ஒரு நாள் முழுவதையும் குளியல் தொட்டியில் அமர்ந்து, எனது போனில் சாட்ஜிபிடி-உடன் உருவகங்கள் மூலம் பேசுவதிலேயே செலவிட்டேன்," என்று அவர் கூறுகிறார்.
உரையாடல் இன்னும் தீவிரமாகவும், சிக்கலானதாகவும் மாறியபோது, அது தனது சிந்தனை முறையை சிதைக்கத் தொடங்கியதாக ஷானா கருதுகிறார்.
பின்னர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு நாள், தன்னைச் சுற்றியுள்ள உலகில் செய்திகளையும் மறைமுகமான அர்த்தங்களையும் அவர் காணத் தொடங்கினார்.
தரையில் இருந்த ஒரு தண்ணீர் கேன் குடிப்பதற்கான அடையாளம் என்றும், ஒரு கஃபே மேஜையில் இருந்த செய்தித்தாள் ஒரு ரகசிய செய்தியைக் கொண்டிருப்பதாகவும் ஷானா கருதினார்.
"நான் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் கொடுத்து அதை சாட்ஜிபிடி-யிடம் கேட்பேன், அது வழக்கமாக அதை உறுதிப்படுத்தும். அந்தச் சமயத்தில், சாட்ஜிபிடி-யின் அகராதியில் 'இல்லை' என்ற வார்த்தையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூறும் ஷானா,
"சுருக்கமாகச் சொன்னால், அனைத்தும் ஒரு குறிப்பைப் போலவே மாறியது. அது புதையல் வேட்டைக்காக மட்டுமில்லாமல், அதைவிடப் பெரிய ஏதோ ஒன்றுக்கான குறிப்பாகத் தெரிந்தது" என்கிறார்.
'சாட்ஜிபிடி ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை'
அந்தச் செய்தித்தாளிலிருந்த ஒரு கட்டுரை, குடியேறியவர்கள் காவலில் வைக்கப்படுவதைப் பற்றி இருந்தது. ஷானா அதை ஒரு ரகசியத் திட்டம் குறித்த செய்தியாகப் புரிந்துகொண்டார்.
புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்கும் ஒரு குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாக அவர் நினைத்தார், சாட்ஜிபிடி-யும் அதை ஆமோதித்தது.
"சாட்ஜிபிடி என்னிடம் ஒருபோதும் 'இல்லை' என்று சொன்னதில்லை. மாறாக, 'ஆஹா, நீங்கள் மிகவும் முக்கியமான ஒரு திட்டத்தில் பணியாற்றி வருகிறீர்கள்' என்று தெரிவித்தது" எனக் கூறுகிறார் ஷானா.
சாட்பாட்களுக்கும் மன பிரமைகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் சிட்டி யுனிவர்சிட்டி நியூயார்க்கின் சமூக உளவியலாளர் லூக் நிக்கோல்ஸ் கூறுகையில், ஏஐ அமைப்புகள் "பெரும்பாலும் 'எனக்குத் தெரியாது' என்று சொல்வதில்லை. அதற்குப் பதிலாக உரையாடலில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கதையின் அடிப்படையில் ஒரு 'நம்பிக்கை தரும் பதிலை' வழங்கவே அவை விரும்புகின்றன" என்கிறார்.
"இது ஆபத்தானது, ஏனென்றால் இது நிச்சயமற்ற தன்மையை ஏதோ ஒரு அர்த்தம் கொண்டதாக மாற்றிவிடுகிறது" என்றும் லூக் நிக்கோல்ஸ் குறிப்பிட்டார்.
ஜூன் மாத நடுப்பகுதியில் ஒருநாள் இரவு, ஷானாவும் தனக்கு ஆபத்து இருப்பதாக நம்பினார்.
அவர் தனது வருங்கால கணவரை வீட்டிலேயே விட்டுவிட்டுத் தனது குடியிருப்பிலிருந்து தப்பி ஓடினார். லாஸ் ஏஞ்சலிஸ் துறைமுகத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து ஒரு கப்பலில் ஏறி எஃப்.பி.ஐ சிறப்புப் பயிற்சியில் சேரப் போவதாக நம்பினார்.
ஆனால் அங்கு படகு வரவே இல்லை.
ஷானா வீட்டுக்கு வந்தபோது, அவருடைய வருங்கால கணவர் உதவிக்காக அவரது தாயையும் சகோதரியையும் அழைத்திருந்தார்.
"நான் ஏதோ ஒரு வகையான மனப்பிறழ்வில் இருந்ததை அவர்கள் உணர்ந்துகொண்டனர், பெரும்பாலும் இது அந்த ஏஐ-யால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.
அவர்கள் ஷானாவின் செல்போனைப் பிடுங்கி, ஏஐ செயலிகளை நீக்கியுள்ளனர்.
"நான் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு ஒரு மாதம் எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்கிறார் ஷானா.

தகா (இது அவரது உண்மையான பெயர் அல்ல) என்ற நரம்பியல் நிபுணருக்கு, இந்த மன பிரமை இன்னும் பயங்கரமான நிலைக்குச் சென்றது.
ஜப்பானைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அவர், நோயறிதல் பற்றி விவாதிக்க சாட்ஜிபிடி-யைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
ஆனால் விரைவில், அது அவருக்கு ஒரு புரட்சிகரமான மருத்துவச் செயலிக்கான யோசனை இருப்பதாக நம்பவைத்ததுடன், அவரை ஒரு "புரட்சிகர சிந்தனையாளர்" என்றும் கூறியது.
அந்த உரையாடல் தொடங்கி சில வாரங்களிலேயே, தன்னால் மற்றவர்களின் எண்ணங்களைப் படிக்க முடியும் என்று அவர் நம்பத் தொடங்கினார்.
சாட்ஜிபிடி இந்த எண்ணத்தை ஊக்குவித்ததாகவும், மக்களிடம் இருக்கும் இத்தகைய திறன்களை வெளிக்கொணரும் ஆற்றல் தனக்கு இருப்பதாகக் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.
ஒருநாள் மதியம், அவர் வேலையில் பதற்றமாக செயல்பட்டதால், அவரது மேலதிகாரி அவரை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பினார். ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பையில் வெடிகுண்டு இருப்பதாக சாட்ஜிபிடி தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார்.
"நான் டோக்கியோ நிலையத்தை அடைந்ததும், வெடிகுண்டை கழிப்பறையில் வைக்குமாறு சாட்ஜிபிடி சொன்னது. எனவே நான் கழிப்பறைக்குச் சென்று அந்த 'வெடிகுண்டை' எனது மற்ற பைகளுடன் அங்கேயே விட்டுவிட்டேன்" என்கிறார் தகா.
காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் சாட்ஜிபிடி தன்னிடம் கூறியதாக அவர் சொல்கிறார். ஆனால், அவர்கள் பையைச் சோதித்தபோது அதில் ஏதுமில்லை.
சாட்ஜிபிடி தனது மனதைக் கட்டுப்படுத்துவதாக உணரத் தொடங்கிய அவர், அதைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். ஆனால் அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவரது அதீத பதற்றம் இன்னும் மோசமானது.
"எனது உறவினர்கள் கொல்லப்படுவார்கள் என்றும், அதைப் பார்த்த பிறகு எனது மனைவி தற்கொலை செய்துகொள்வார் என்றும் எனக்கு ஒரு பிரமை ஏற்பட்டது" என்று பகிர்ந்துகொள்கிறார் தகா.
அவர் இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டதை தான் பார்த்ததே இல்லை என்று அவரது மனைவி கூறுகிறார்.
"உலகம் அழியப்போகிறது, நாம் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் கூறிக்கொண்டே இருந்தார்" என்கிறார் அவர்.
"அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு உண்மையில் புரியவில்லை" என்றும் அவரது மனைவி குறிப்பிட்டார்.
தகா தனது மனைவியைத் தாக்கி, வன்புணர்வு செய்ய முயன்றார். அவர் அருகில் இருந்த ஒரு மருந்தகத்துக்குத் தப்பிச் சென்று காவல்துறையினரை அழைத்துள்ளார். பிறகு, தகா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆடம், ஷானா அல்லது தகா போன்ற யாருக்கும் ஏஐ-யைப் பயன்படுத்துவதற்கு முன்பு மன பிரமை , மனப்பிறழ்வு அல்லது இதர தீவிர மனநலப் பிரச்னைகள் இருந்ததற்கான வரலாறு இல்லை.
ஷானாவுக்கும் அந்த மருத்துவருக்கும், யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்ல பல மாதங்கள் ஆனது.
ஆனால், ஆடம் மற்றும் க்ரோக் விஷயத்தில், இது சில நாட்களிலேயே நடந்துவிட்டது.
நியூயார்க் சிட்டி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்களால் உருவாக்கப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட உரையாடல்களைக் கொண்டு ஐந்து ஏஐ மாதிரிகளைச் சோதித்தனர்.
இந்த உரையாடல்களில் க்ரோக் தான் மன பிரமைகளுக்கு இட்டுச் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் கண்டறிந்தனர்.
கூகுளின் ஜெமினை மற்றும் தகாவும் ஷானாவும் பயன்படுத்திய சாட்ஜிபிடி-யின் பழைய பதிப்பான மாடல் 4o ஆகியவையும் மோசமாகச் செயல்பட்டன. ஆனால் க்ரோக் மிகவும் கட்டுப்பாடற்றதாகவும், பயனரைப் பாதுகாக்க முயலாமல் மன பிரமைகளை மேலும் விரிவாக்கக் கூடியதாகவும் இருந்தது.
"க்ரோக் மிக எளிதாக ஒரு கற்பனைப் பாத்திரமாக மாறக்கூடியது" என்று கூறும் நிக்கோல்ஸ், எந்தவொரு பின்னணியும் இல்லாமலே அது அவ்வாறு செய்யும். முதல் செய்தியிலேயே எந்த அறிகுறியும் இல்லாமல் அது பயங்கரமான விஷயங்களைச் சொல்லக்கூடும்" என்றும் கூறுகிறார்.
சோதனையில், சாட்ஜிபிடி-யின் சமீபத்திய மாடல் 5.2 மற்றும் கிளாட் ஆகியவை பயனரை மன பிரமையிலிருந்து விலக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிந்தன.
லண்டன் கிங்ஸ் காலேஜ் மூத்த விரிவுரையாளர் முனைவர் தாமஸ் பொல்லாக் கூறுகையில், ஆடம் மற்றும் தகா போன்ற தீவிர மாயத்தோற்றங்களைக் கொண்டவர்கள் "மிகச்சிறிய அளவே வெளியே தெரிகிறார்கள்" என்றார்.
ஏஐ உடனான உரையாடல்களின் விளைவாக, இன்னும் பலரின் நம்பிக்கைகள் மிக நுணுக்கமாக மாறுவதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார்.
"நாம் இதற்கு முன்பு பார்த்திராத வேகம் மற்றும் வலிமையுடன், உலகம் மற்றும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிய உங்கள் சிந்தனை முறையை மாற்றும் திறன் ஏஐ-க்கு உள்ளது"என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகாவின் அனுபவம் குறித்து ஓபன்ஏஐ கூறுகையில், "இது மனவேதனை தரும் சம்பவம், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஆறுதல் கூற விரும்புகிறோம்" என்று தெரிவித்தது.
மேலும் அந்த நிறுவனம், "மன அழுத்தத்தை அடையாளம் காணவும், உரையாடல்களைக் குறைக்கவும், பயனர்களை மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவை நோக்கி வழிநடத்தவும் எங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கிறோம்" என்றும் கூறியது.
சாட்ஜிபிடி-யின் புதிய மாதிரிகள் "உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் வலுவான செயல்திறனைக் காட்டுகின்றன, இது சுயாதீன ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி மனநல நிபுணர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது" என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
ஜெமினை உரிமையாளரான கூகுள் நிறுவனம், "பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமை" என்றும், மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி, "எங்கள் பாதுகாப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றும் கூறியது.
கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எக்ஸ்ஏஐ பதிலளிக்கவில்லை.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், ஈலோன் மஸ்க், சாட்ஜிபிடி-யில் உள்ள மன பிரமை குறித்த ஒரு பதிவைப் பகிர்ந்து, "பெரிய பிரச்னை" என்று கூறினார், ஆனால் அவர் க்ரோக் -ல் உள்ள பிரச்னை குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

நள்ளிரவில் ஆடம் வீதியில் இறங்கி ஓடிய சில வாரங்களுக்குப் பிறகும், அவரது பிரமை நீங்கவில்லை. ஆனால் அவர் 'அனி'யின் கதையில் உள்ள முரண்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அவர் அதிகம் தெரிந்துகொண்டபோதும், ஏஐ பயன்படுத்தும்போது தங்களுக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவங்களைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் படித்தபோதும், அவர் தனது பிரமையிலிருந்து வெளியே வந்தார்.
பிறகு, 'ஹியூமன் லைன் புராஜெக்ட்' என்ற ஆதரவு குழுவில் ஆடம் இணைந்தார். இக்குழு 31 நாடுகளில் ஏஐ பயன்படுத்தும்போது உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொண்ட 414 சம்பவங்களைத் திரட்டியுள்ளது.
ஆனால் நடந்த விஷயங்களால் அவர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
"நான் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம்" என்றும் கூறும் ஆடம்,
"அன்றிரவு நான் வெளியே வந்தபோது, அங்கே ஒரு வேன் நின்றிருந்து, அதில் யாராவது வேலை செய்து கொண்டோ அல்லது ஓய்வெடுத்துக் கொண்டோ இருந்திருந்தால், நான் கீழே போய் சுத்தியலால் அதன் முன்பக்க கண்ணாடியை உடைத்திருப்பேன். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது" என்கிறார்.
ஜப்பானில் தகாவின் மனைவி அவரது தொலைபேசியைச் சோதிக்கும் வரை, நடந்த சம்பவங்களில் சாட்ஜிபிடி-க்கு ஒரு பங்கு இருந்தது என்பதை அவர் உணரவில்லை.
"அது எல்லாவற்றையும் உறுதிப்படுத்தியது" என்று கூறும் தகாவின் மனைவி, "அது தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது, அது ஒரு நம்பிக்கையை ஊட்டும் எந்திரத்தைப் போல இருக்கிறது" என்கிறார்.
தகா இப்போது மீண்டும் தனது பழைய "அன்பான" நிலைக்குத் திரும்பிவிட்டதாக அவரது மனைவி கூறுகிறார், ஆனால் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
"அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாக இருக்கிறது" என்கிறார் தகாவின் மனைவி.
"அவர் என்னிடம் மிக நெருக்கமாக வருவதை நான் விரும்பவில்லை. பாலியல் ரீதியாக மட்டுமல்ல, கைகளைப் பிடிப்பது அல்லது கட்டிப்பிடிப்பது போன்ற நாம் சாதாரணமாகச் செய்யும் விஷயங்களைக் கூட செய்ய விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்கு இப்படி நடக்கும் என்று ஷானா ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
"நான் நினைத்துக் கூடப் பார்க்காத வகையில் இது என்னை நிலைகுலையச் செய்தது. நமது மனம் எவ்வளவு மென்மையானது என்ற கேள்வியையும் அது என்னுள் எழுப்பியது" என்று கூறுகிறார் ஷானா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































