பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் - சீமா ஹைதர் இந்தியாவுக்கு வந்ததால் நடந்ததா?

பட மூலாதாரம், SHAHNAWAZAHMAD/BBC
- எழுதியவர், ரியாஸ் சோஹைல்
- பதவி, பிபிசி உருது, கராச்சி
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் இந்து சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் இருந்தன. எனினும் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தனது காதலனைத்தேடி இந்தியா வந்த சீமா ஹைதர் என்ற சீமா ரிந்த் மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படாவிட்டால், இந்து மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என சில நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர்.
சீமா ஹைதரின் கூற்றுப்படி, அவர் இந்தியரான சச்சின் மீனாவை காதலிக்கிறார். அவரும் அவரது நான்கு குழந்தைகளும் தில்லிக்கு அருகிலிருக்கும் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவுக்கு வந்தார் சீமா. இந்த விவகாரம் இருநாடுகளிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வடக்கு சிந்த் பகுதியில் இருக்கும் அவ்காஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தையடுத்து இந்துக்கள் மத்தியில் அச்ச சூழல் நிலவுகிறது.
கௌஸ்பூரைச் சேர்ந்த செய்தியாளர் அப்துஸ்சாமி பிபிசியிடம் தாம் தாக்குதல் நடந்த இந்துக்கோவிலின் அர்ச்சகர்களுடன் பேசியதாகக் கூறினார். அவர்கள் கோவிலுக்குள் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறினார். அருகில் உள்ள வீடுகளில் பதுங்கி உயிர் பிழைத்தனர்.
வழிபாட்டுத் தலத்துக்கு அருகில் ராக்கெட் குண்டுகள்

சிந்த் மாகாணத்தில் உள்ள இந்தக் கோவிலில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் வெடிக்காத இரண்டு ராக்கெட் குண்டுகளை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று சுவற்றில் பதிந்திருந்தது, மற்றொன்று ஒரு குட்டையில் விழுந்திருந்தது.
பத்திரிக்கையாளர் அப்துஸ்சாமியின் கூற்றுப்படி, அந்தக் கிராமத்தில் இந்து பாக்டி சமூகத்தினரின் 70 வீடுகள் உள்ளன. இது தவிர அருகிலுள்ள பாக்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
தாக்குதல் நடந்த பகுதியின் காவல் ஆணையர் இர்பான் சம்மு பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் நடந்த இடம் கோயில் அல்ல என்று கூறினார். அது இந்து சமூகத்தினர் தங்கள் ஆண்டு விழாவை நடத்தும் வீட்டிற்குப் பக்கத்தில் கட்டப்பட்ட ஒரு கூடம் என்றார். அங்கிருக்கும் இருவேறு சமூக மக்களுக்கிடையே சில பிரச்னைகள் இருப்பதாகவும், அந்த கோணத்தில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கொள்ளையர்கள் கொடுத்த மிரட்டல் என்ன?

பாக்டி மக்கள் இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் வடக்கு சிந்த் பகுதி முதல் கீழ் சிந்த் வரை விவசாயத் தொழிலில் ஈடுபடுள்ளனர். இவர்கள் தர்பூசணி சாகுபடியில் கைதேர்ந்தவர்கள்.
சில நாட்களுக்கு முன்னர், கோட்கி பகுதியைச் சேர்ந்த கொள்ளைக்காரரான ராணு ஷார், சீமா ஹைதர் என்ற சீமா ரிந்த் பாகிஸ்தானுக்குத் திரும்பி வராவிட்டால், இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.
அதன் சிந்த மாகாணத்தின் வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்களும் இதேபோன்ற மிரட்டல்களை விடுத்திருந்த்தனர். கோட்கி பகுதியைச் சேர்ந்த கொள்ளைக்காரரான நிசார் ஷார், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளிடம் ‘அவர்கள் எங்கே?’ என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.
"கௌஸ்பூரில் உள்ள கோயில் ராக்கெட் மூலம் தாக்கப்பட்டது," என்றும் அந்த வீடியோவில் கூறினார். "பாகிஸ்தான் இந்துக்கள் மீது எந்த தவறும் இல்லை, ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் சீமா ரிந்தை திரும்பக் கொண்டுவரவில்லை என்றால், இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும்," என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இந்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பு

கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ரமேஷ் லால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு நம்முடன் பேசினார்.
அவர்அங்கு வசிக்கும் இந்து சமூகத்தினர் எந்த சர்ச்சையையும் விரும்பாமல் வாழ்ந்து வந்ததாகவும், சமீபத்தில் கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு இந்து சமூகத்தினரிடையே பயம் நிலவுகிறது, என்றும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வடக்கு மாவட்டங்களில், இந்து சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர். சீமா ரிந்த் (சீமா ஹைதர்) நாடு திரும்புவதற்கு கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிந்த் பகுதியின் கொள்ளைக் கும்பல்கள்
வடக்கு சிந்த் மாகாணத்தில் இருக்கும் மாவட்டங்களான கோட்கி, காஷ்மூர், கந்தகோட் மற்றும் ஜகோபாபாத் ஆகிய பகுதிகளில் பல கொள்ளை கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த பல தசாப்தங்களாக அவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், ஆனால் இதுவரை அவர்கள் வெற்றி பெறவில்லை.
சீமா மற்றும் குலாம் ஹைதர் (சீமாவின் கணவர்) இருவரும் பலூச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிந்த் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கொள்ளைக் கும்பல்கள், சீமாவை தனது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு சமூக ஊடகங்களில் இந்திய அரசை அச்சுறுத்தினர்.
சீமாவையும் அவரது குழந்தைகளையும் பாகிஸ்தானுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் பாகிஸ்தானில் வாழும் அனைத்து இந்துக்களும் தங்கள் பாதுகாப்பிற்குப் தாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று ராணு ஷார் என்ற கொள்ளைக்காரர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திடம் வீடியோவில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக சிந்த் மாகாணத்தின் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், தினமும் சிந்த் மாகாண ஐ.ஜி.யையும் தொடர்பு கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி கூறுகிறார்.
சிந்து மாகாண ஐ.ஜி.யின் கூற்றுப்படி, அவர் கோவில்களிலும் இந்துக்கள் வாழும் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து சமூகத்தில் அச்சம் நிலவுகிறது

முன்னதாக இந்த விஷயத்தில் மௌனமாக இருந்த பாகிஸ்தானின் மத அமைப்புகள், தற்போது இது குறித்து அறிக்கை விடத் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து துபாய், நேபாளம் வழியாக நான்கு குழந்தைகளுடன் சீமா ஹைதர் இந்தியாவுக்கு எப்படி வந்தார், அந்த நாடுகளில் அவர் விசா பெற்றது எப்படி என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜமியத்-உலேமா-இ-இஸ்லாம் பாகிஸ்தான் அமைப்பின் அல்லாமா ரஷித் மஹ்மூத் சூம்ரோ கூறுகிறார்.
மேலும், "இந்தியா வந்தவுடன், ஒரு முஸ்லீம் பெண் உடனடியாக இந்து மதத்தை ஏற்றுக்கொண்டு, சேலை அணிந்து, ஹிந்தி பேசுவது பல கேள்விகளை எழுப்புகிறது," என்றும் அவர் கூறுகிறார்.
கோட்கி முனிசிபல் கமிட்டியின் துணைத் தலைவரும், சிந்து மனித உரிமைகள் குழு உறுப்பினருமான சுக்தேவ் அசார் தாஸ் ஹிமானி, இச்சம்பவங்கள் இந்து சமூகத்தில் அச்சமான சூழலை உருவாக்கியுள்ளன, என்று கூறினார். மேலும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்கள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துள்ளனர், என்றும் கூறினார்.
“நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் இந்தியர்கள் இல்லை, நாங்கள் வேறு யாரையும் போல பாகிஸ்தானியர்கள், நாங்களும் சமமான குடிமக்கள்," என்கிறார்.
சிந்த் பகுதியின் இந்து மதத் தலங்கள்
சிந்து மாகாணத்தின் வட மாவட்டங்களில் வசிக்கும் இந்து சமூகம் பெரும்பாலும் வணிகத்தில், பொற்கொல்லர் தொழில், மட்டும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.
இப்பகுதியில் பல இந்து மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் இந்து மதத் துறவிகளின் கல்லறைகளும் அடங்கும்.
சீமா ஹைதர் யார்?

பாகிஸ்தானை சேர்ந்த சீமா, ஜகோபாபாத்தில் வசித்து வந்த குலாம் ஹைதர் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் இருவரும் கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர். 2019 ஆம் ஆண்டில், குலாம் ஹைதர் வேலை தொடர்பாக சவுதி அரேபியா சென்றார்.
இந்த நேரத்தில் தான் சீமாவும், இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனாவும் பேசத் தொடங்கினர். ஆன்லைன் விளையாட்டான பப்ஜிதான் இருவருக்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட பாலமாக இருந்தது. இருவரும் நேபாளத்தில் சந்தித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்று தனது வீட்டை விற்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












