மாதவிடாய் மாத்திரைகள்: பெண்கள் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இல்லத்தரசிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அனகா ஃபாடக்
    • பதவி, பிபிசி மராத்தி

"ஆம், மாத்திரையைச் சாப்பிட வேண்டுமில்லையா! சத்யநாராயண பூஜை இருந்ததால் அன்றொரு நாள் கூட எடுத்துக்கொண்டோம்," என்கிறார் 27 வயதாகும் இல்லத்தரசி கல்யாணி.

கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள். அவருடைய மாமியார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். வீட்டில் திருமணமான பெண் வேறு யாரும் இல்லாததால், அனைத்து வேலைகளையும் கல்யாணி செய்தாக வேண்டும். அவருடைய மாதவிடாய் காலம் வந்தால் அது கடினமாக இருக்கும்.

அப்படிப்பட்ட நேரங்களில், அவருக்கு மாதவிடாய் வரும்போது குடும்பத்தினர் எரிச்சலடைவார்கள். அப்போது கல்யாணி ஏகப்பட்ட வெறுப்பூட்டக்கூடிய சொற்களைக் கேட்க வேண்டியிருக்கும்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாதவிடாயை தாமதப்படுத்தும் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தப் பிரச்னைகள் தீர்ந்தன.

"என் குடும்பம் மிகவும் கண்டிப்பானது. நான் வேலை பார்க்கும் வீடுகளின் பெண்கள் கூட கௌரி-கணபதி பூஜையின்போது மாதவிடாய் ஏற்படுவதில்லையா," என்று கேட்கிறார்கள்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அவர்கள் கேட்பது சரி தானே. கடவுளுக்காகச் செய்யும் விஷயத்தில் எப்படி பொய் சொல்ல முடியும். சிலநேரத்தில் அதற்குச் செலவழித்த பணம் கூட வீணாகிவிடும். அதைத் தவிர்க்க மாத்திரை சாப்பிடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது," என்று கேட்கிறார் கல்யாணி.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து பண்டிகைக் காலம் தொடங்குகிறது. பூக்கள், பூஜை பொருட்கள், தூபக் குச்சிகள், இனிப்புகளோடு மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளும் வாங்க வேண்டிய தேவை உள்ளது.

"கணபதி-மகாலட்சுமி பூஜையின்போது, இந்த மாத்திரைகளுக்கான தேவை அதிகரிக்கிறது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 10-15 அட்டைகள் மாதவிடாய் மாத்திரை விற்பனையாகிறது," என்கிறார் ராஜூ ஜோரே.

புல்தானியில் உள்ள டீல்கான் ராஜா என்ற இடத்தில் மருந்தகம் நடத்தி வருகிறார் ராஜூ ஜோரே. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் இந்த மாத்திரைகளின் பரவல் அதிகரித்துள்ளதை அவர் கூறியுள்ள தகவலின் மூலம் அறியமுடிகிறது.

ஏனென்றால், பண்டிகையின்போது வீட்டில் மாதவிடாய் இருக்கக்கூடாது என்ற மனநிலை உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.

மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. பல மாநிலங்களில் மாதவிடாய் காலகத்தில் பெண்கள் வீட்டிலிருந்து ஒதுங்கி, மாட்டுத் தொழுவம் போன்றவற்றில் குளிர் காற்றில் தூங்க வேண்டும். அவ்வாறான நிலையில் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது.

ஆனால், சமய செயல்பாடுகள், பண்டிகைகளின் அனைத்து பொறுப்பும் வீட்டுப் பெண்கள் மீது தான் விழும். அந்த நேரத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், பணிச்சுமையை யார் கையாள்வார்கள்? பெண் அதைச் சுதந்திரமாகச் செய்வதற்கு எந்த அறிவியலும் உதவவில்லை.

திருவிழாக்கள், வழிபாடுகளின் போது மாதவிடாய் 'தொந்தரவு' ஏற்படாமல் இருக்க, பெண்கள் இந்த மாத்திரைகளை அடிக்கடி, சில நேரங்களில் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்கிறார்கள்.

"இந்த மாத்திரைகளை வாங்க பெண்கள் எங்களிடம் வரும்போது மருத்துவர் அளிக்கும் மருந்துச் சீட்டு எதையும் கொண்டு வருவதில்லை. பொதுவாக மருத்துவரிடம் கேட்பதில்லை. வீட்டில் ஏதாவது வேலை இருந்தால் மாத்திரையைச் சாப்பிடுவார்கள். வழக்கமாக மூன்று மாத்திரைகள் போதும். ஆனால், இப்போது ஒரு நாளில் ஆறு முதல் ஏழு மாத்திரைகளை எடுக்கிறார்கள்" என்கிறார் ராஜூ.

மாதவிடாய் தாமதப்படுத்தும் மாத்திரைகளால் பக்க விளைவுகள் உண்டா?

நாசிக்கில் உள்ள சஹ்யாத்ரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான கௌரி பிம்ரால்கர், "இந்த மாத்திரைகள் மகளிர் நல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை," என்கிறார்.

மேலும், "பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்கள், மாதவிடாய் சுழற்சிக்கு அடிப்படையானவை. மாதவிடாய் தாமதமாக இந்த ஹார்மோன்களை எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் தாமதமாகிறது. ஒருவிதத்தில் இந்த மாத்திரைகள் இந்த ஹார்மோன்களின் சுழற்சியை பாதிக்கின்றன," என்றார்.

மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

பட மூலாதாரம், BSIP/Getty Images

அதோடு, "இது இயற்கையாக நிகழும் மாதவிடாய் சுழற்சி மீது பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த ஹார்மோன்களை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், மூளை வாதம், பக்கவாதம், வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். மாதவிடாய் நீடிக்க பெண்கள் இந்த மாத்திரைகளை 10-15 நாட்களுக்கு, அதுவும் அதிகளவில் உட்கொள்கின்றனர். அதன் விளைவுகள் பயங்கரமானவை," என்று கூறினார்.

இந்த மாத்திரைகளை யார் சாப்பிடக்கூடாது?

மருத்துவர் கௌரியின் கூற்றுப்படி, பெண்கள் இந்த மாத்திரைகளை எடுப்பதற்கு முன்பாக எந்த மருத்துவரையும் அணுகி ஆலோசனை கேட்பதில்லை. இந்த மாத்திரைகள் மருந்தகங்களில் எளிதாகக் கிடைக்கின்றன என்கிறார் அவர்.

மாத்திரைகளை வழங்குவதற்கு முன்பாக அதை எடுத்துக் கொள்பவரின் மருத்துவ வரலாறு முக்கியமானது. தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், இதற்கு முன்பு எப்போதாவது பக்கவாதம் ஏற்பட்டிருந்தால், அதிகம் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால், அதிக எடையுடன் இருந்தால், பெண்களுக்கு இந்த மாத்திரைகள் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.

இது விளையாட்டு வீராங்கனைகளுக்கு பிரச்னையாக உள்ளதா?

பல பெண் விளையாட்டு வீராங்கனைகள் போட்டிகளின்போது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அது அவர்களைத் தொந்தரவு செய்யாதா என்பது குறித்து மருத்துவர் கௌரியிடம் கேட்டபோது, "விளையாட்டு வீராங்கனைகளின் கதை வேறு. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வலிமையான உடல், உடற்பயிற்சி ஆகியவை இருப்பதால், அவர்களுக்கு இந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

பட மூலாதாரம், Getty Images

விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதல்ல. ஆனால், மதரீதியான காரணங்களால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மத நடவடிக்கைகளில் கலந்து கொள்வது தடுக்கப்படுகிறது. ஆகையால் தான் ஏராளமான குடும்பப் பெண்கள் அதை அதிகளவில் தொடர்ச்சியாகத் எடுக்கிறார்கள்.

"மாதவிடாயின்போது என்னை வணங்காதீர்கள், மதப் பணிகளில் ஈடுபடாதீர்கள் என்று கடவுள் கூறவில்லை. எனவே தவறான நம்பிக்கைகளால் உங்கள் உடல்நலத்துடன் விளையாடாதீர்கள்," என்கிறார் மருத்துவர் கௌரி.

கோவில் நுழைவு இயக்கத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பூமாதா பிரிவைச் சேர்ந்த திரிப்தி தேசாயும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்.

"மாதவிடாய் என்பது அசுத்தமானதல்ல. இது இயற்கை அளித்தது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குச் செல்வதில்லை. பண்டிகை காலங்களில் மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை சாப்பிடுவது முற்றிலும் தவறு.

விநாயகரின் பல ஆரத்திகளுக்கு நான் மாதவிடாய் நேரத்திலேயே சென்றுள்ளேன். மாதவிடாயாக இருந்தாலும் நான் செல்வென். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் வரமுடியாது என்று என்னால் சொல்லமுடியாது. இத்தகைய தீண்டாமை செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்," என்கிறார் திரிப்தி தேசாய்.

மாதவிடாய் மாத்திரைகள்

பட மூலாதாரம், Getty Images

கடவுள் கோபப்படுவதில்லை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமயப் பணி செய்யக்கூடாது என்று எந்த இறையச்சமும் இல்லை என்று பஞ்சாங்கம் தயாரிப்பவரான டி.கே.சோமன் வலியுறுத்துகிறார்.

"முன்பெல்லாம் பெண்கள் வசதியாக உணரவும் சுத்தத்தைப் பேணவும் ஒதுங்கியிருக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அது தேவையில்லை. வீட்டில் ஒரு பெண் மட்டும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய மாதவிடாய் சுழற்சி வந்தால் அவர் சமைக்க வேண்டாமா? கடவுளுக்கான பிரசாதத்தை அவர்தானே சமைத்தாக வேண்டும்" என்கிறார்.

மேலும், "பிரசாதம் கொடுக்கும்போது துளசி இலையைப் போட்டு புனிதப்படுத்தி கடவுளுக்குப் படைப்போம். ஆகவே கோவிலில் பிரசாதத்தைக் கொடுப்பதால் பிரச்னையில்லை. அதேபோல், கடவுளை வழிபடுவதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை," என்கிறார்.

"பெண்கள் மாதவிடாய் நீடிக்க மாத்திரை சாப்பிடுகிறார்கள் என்றால், அது முற்றிலும் தவறு. கடவுள் கோபப்படுவதில்லை. அவர் மன்னிப்பவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதவாதிகள் மக்களை, குறிப்பாக பெண்களை பயமுறுத்துகிறார்கள். கடவுள் அவர்களைத் தடுத்து நிறுத்துவார். உங்கள் உடல்நிலைக்கு தீங்கு விளைவித்துக் கொள்ளாதீர்கள்," என்றும் அவர் கூறினார்.

மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

பட மூலாதாரம், Getty Images

"மாத்திரைகளைச் சாப்பிடுகிறேன், ஆனால் எனக்குக் கவலையில்லை"

தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றும் மேகா, இதுபோன்ற வீட்டு வேலைகளின்போது இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் ஆனால் தனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்.

"வழிபாட்டின்போது செய்யக்கூடாத காரியங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், என் மாமியாருக்கு உண்டு. நான் அவருடைய திருப்திக்காக மாத்திரைகளைச் சாப்பிடுகிறேன். எங்கள் குலதெய்வத்தைப் பார்க்கச் சென்றபோது, என் மாமியார் ஆலோசனையின் பேரில் நான் எடுத்துக் கொண்டேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்றார்.

இந்த மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதில் வல்லுநர்கள் வேறுபடும் அதேவேளையில், நாள்பட்ட, தவறான பழக்கங்களுக்காக பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பணயம் வைக்கத் தயாராக உள்ளார்களா என்ற கேள்வியும் உள்ளது.

Banner
காணொளிக் குறிப்பு, சி.பி.ஆர் செய்து உயிரைக் காப்பாற்றிய சி.ஐ.எஸ்.எஃப் வீரர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: