ராகுலின் 'பறக்கும் முத்தம்' விவகாரம்: உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற பின், நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை முதல் முறையாக உரையாற்றினார்.
பிரதமர் மோதி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் பேசினார்.
அப்போது, சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை தான் மேற்கொண்ட நடை பயண அனுபவங்கள் குறித்தும், மணிப்பூர் நிலவரம் பற்றியும் அவர் பேசினார்.
சர்ச்சையை கிளப்பிய பறக்கும் முத்தம் விவகாரம்
புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தால், தனது உரையை முடித்ததும் மக்களவையில் இருந்து ராகுல் புறப்பட்டார்.
அவையில் இருந்து புறப்பட்டு சென்ற போது, சபையில் இருந்தவர்களை நோக்கி அவர் பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராகுல் மீது கூறப்படும் இந்த குற்றச்சாட்டு அவையில் இருக்கும் கேமிராக்களில் பதிவாகவில்லை.
ஆனால் அவர் அவையை விட்டு வெளியேறியது, பறக்கும் முத்தம் குறித்த சர்ச்சை தொடங்கியது.
ராகுலை சாடிய ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை முன்வைத்து ராகுலை கடுமையாக விமர்சித்தனர். அவர் பெண்களுக்கு எதிரானவர் என்றும் சாடினர். ஆனால் அதேநேரம், பல பெண் எம்.பி.க்கள் இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான தனது உரையை முடித்துவிட்டு, ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறியதும், பாஜக எம்.பி.யான ஸ்மிருதி இரானி, இந்த விவகாரத்தை அவையில் எழுப்பினார்.
பறக்கும் முத்தம் விவகாரம் குறித்து அவர் மக்களவையில் பேசும்போது, “ அவையில் எனக்கு முன் பேச வாய்ப்பு பெற்றவர் (ராகுல் காந்தி), அவமரியாதையான நடத்தையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தனது உரையை முடித்த பின், அநாகரிகமாக நடந்து கொண்டார். பெண் எம்பிக்களும் அமர்ந்துள்ள நாடாளுமன்ற அவையில் அவர் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான ஒருவரால் தான் இப்படி நடந்து கொள்ள முடியும். ராகுலின் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையை நாடாளுமன்றம் இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று ஸ்மிருதி இரானி ராகுலை கடுமையாக சாடினார்.

பட மூலாதாரம், ANI
பாஜக எம்பி ஹேமா மாலினி சொன்னது என்ன?
ஸ்மிருதி இரானியின் உரையை தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த ஹேமா மாலினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண் எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கடிதம் அளித்தனர்.
அதில், ‘ ராகுல் காந்தியின் தகாத முறையிலான இச்செயல், பெண் எம்பிக்களின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த அவையின் மாண்பையும் குலைத்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததை தான் பார்க்கவில்லை என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஹேமா மாலினி கூறியிருந்தார். அதேநேரம், இந்த விவகாரத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் ராகுல்காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பெண் எம்.பி
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியபோது, “அவையில் ராகுல் காந்தி பேசிய போது, அவரது பேச்சுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டனர்.
அமைச்சர்களின் கூச்சலுக்கு இடையே ஒரு வழியாக தனது உரையை முடித்த ராகுல், பாசத்தின் வெளிப்பாடாக அவ்வாறு (பறக்கும் முத்தம்) செய்தார். இதில் உங்களுக்கு (பாஜகவினர்) என்ன பிரச்னை? அன்பின் வெளிப்பாட்டை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நீங்கள் வெறுப்புணர்வை வளர்த்து கொண்டுள்ளீர்கள்” என்று பாஜக எம்.பி.க்களை பிரியங்கா சதுர்வேதி விமர்சித்தார்.
மகளிர் ஆணைய தலைவரின் ஆதரவு
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிக்கும் இந்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ ராகுல் காந்தியின் பறக்கும் முத்தம் குறித்த விவகாரம் தற்போது அனலை கிளப்பி உள்ளது. ஆனால் இதே அவையில் அமர்ந்துள்ள பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மல்யுத்த வீராங்கனைகள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, உங்களுக்கு (பாஜக பெண் எம்பிக்கள்) அவர் மீது ஏன் கோபம் வரவில்லை? என்று ஸ்வாதி மாலிக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராகவும் உள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் சிலர், சில மாதங்களுக்கு முன் இவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், பாலியல் குற்றச்சாட்டு குறித்து போலீசாரின் குற்றப்பத்திரிகையிலும் சில தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

பட மூலாதாரம், ANI
ராகுல் ஃபோபியா
இதனிடையே, மணிப்பூர் நிலவரம் தொடர்பான விவாதத்தை தவிர்க்கவே ஆளுங்கட்சியினர் விரும்புவதாகவும், அதனால்தான் அவர்கள் ராகுல் காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
அக்கட்சியின் மக்களவை தலைமைக் கொறடா மாணிக்கம் தாகூர் கூறும்போது, “பாஜக எம்பி ஸ்மிருதி இரானி, ராகுல் ஃபோபியா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பாதிப்பில் இருந்து அவர் விரைவில் வெளியே வர வேண்டும்” என்றும் கிண்டலாக கூறியுள்ளார்.
ராகுல் பேசியபோதும் டிவியில் சபாநாயகரின் முகத்தை காட்டியது ஏன்?
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி பேசியதில் பெரும்பாலான பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது .
இது தொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறும்போது, “ மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 9) ராகுல் காந்தி கிட்டத்தட்ட 16 நிமிடங்களுக்கு மேல் பேசினார். ஆனால், அவர் பேசிக்கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற தொலைக்காட்சியில் 11 நிமிடங்கள் 8 வினாடிகள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முகமே காட்டப்பட்டு கொண்டிருந்தது.
அதாவது, சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ராகுலின் முகம் கேமிராவில் காட்டப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்? இதன் மூலம் அவர்கள் (பாஜகவினர்) எதை மறைக்க பார்க்கின்றனர்?” என்று சுப்ரியா கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுல் காட்டிய மூன்று புகைப்படங்கள்
அத்துடன், “தனது உரையின் போது அவையில் ராகுல் காந்தி காட்டிய மூன்று புகைப்படங்களும் நாடாளுமன்ற தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை” என்று சுப்ரியா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
அதானியின் கப்பலில் மோதி வெளிநாடு சென்றது, விமானத்தில் அதானியுடன் மோதி அமர்ந்திருப்பது மற்றும் கடந்த ஆண்டுகளில் அதானியின் வர்த்தகம் நாடு முழுவதும் எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக மூன்று புகைப்படங்களை மக்களவையில் ராகுல் காட்டினார் என்றும் சுப்ரியா கூறியுள்ளார்.
“சர்வாதிகாரத்தின் பயம் காரணமாக அவர்கள் ராகுலின் பேச்சை இருட்டடிப்பு செய்கின்றனர். இது தொலைக்காட்சி அல்ல; நாடாளுமன்றம் என்பதை ஸ்மிருதி இரானி மறந்துவிட்டார். தனது பயனற்ற நடிப்பையும், பொய்யான கோபத்தையும் அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
மணிப்பூரில் 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே இந்தியா என்று பேசுபவர்கள் இரண்டு மணிப்பூரை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, அவரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறார்” என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் பாஜகவையும், அக்கட்சியின் எம்பியுமான ஸ்மிருதி இரானியையும் விமர்சித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்தி பேசியது என்ன?
மோதி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி சுமார் 37 நிமிடங்கள் பேசினார்.
தமது இந்த உரையில், தான் சில மாதங்களுக்கு முன் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்தும், அதில் தான் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் சில நிமிடங்கள் அவையில் பகிர்ந்து கொண்டார்.
அதன்பின் சுமார் 16 நிமிடங்களுக்கு மேல் அவர், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர், “ சில தினங்களுக்கு முன் நான் மணிப்பூருக்கு சென்றேன். ஆனால் பிரதமர் மோதி இன்று வரை அங்கு செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூரை அவர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூர் இன்று இரண்டு பகுதிகளாக பிளவுப்பட்டுள்ளது” என்று ராகுல் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
மணிப்பூர் பயணத்தின் போது தான் சந்தித்த ஓர் அனுபவம் குறித்தும் தனது உரையில் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
“கலவரத்தில் தனது மகன் கொல்லப்பட்டதாகவும், இறந்த தனது மகனின் உடலுடன் ஒரு நாள் இரவு முழுவதும் கழித்ததாகவும் ஒரு பெண் தன்னிடம் கூறினார்” என்று ராகுல் தெரிவித்தார்.
அத்துடன், இறந்த தனது மகனின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி முகாமுக்கு வந்துவிட்டதாக தன்னிடம் அப்பெண் தெரிவித்தாகவும் ராகுல் காந்தி கூறினார்.
“மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்ட ராகுல், “நான் இன்னொரு பெண்ணை சந்தித்தேன். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்ட உடனே, அவர் நடுங்கியபடி மயங்கி விழுந்தார்.
இங்கு நான் இரண்டு உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்டி உள்ளேன். மணிப்பூரை மட்டுமல்ல; இந்தியாவையும் கொன்றுவிட்டீர்கள்” என்று ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.
அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த எம்.பி. ஒருவர், ‘பாரத் மாதா’ என்ற வார்த்தையை சுட்டிக்காட்டினார்.
அவர் சுட்டிக்காட்டியதை புரிந்துக்கொண்ட ராகுல் காந்தி, “ மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம், நீங்கள் இந்திய அன்னையைக் கொன்றுள்ளீர்கள். இந்த துரோகத்தின் காரணமாகவே, பிரதமர் மோதி மணிப்பூருக்கு செல்லவில்லை” என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








