போலா சங்கர் விமர்சனம்: சிரஞ்சீவி வேதாளம் ரீமேக்கில் வெற்றி பெற்றாரா? படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், MEHER RAMESH/FACEBOOK
- எழுதியவர், சாஹிதி
- பதவி, பிபிசிக்காக
சிரஞ்சீவியின் ரீமேக் படங்கள் அவருக்கு நன்றாகவே வேலை செய்துள்ளன. அவரை மெகாஸ்டார் ஆக்கிய படங்களில் பலவும் ரீமேக் படங்கள்தான்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் திரையுலகுக்குள் நுழைந்தபோதும் அவர் ரீமேக் படங்களையே நம்பினார்.
சைரா, ஆச்சார்யா போன்ற நேரடி தெலுங்கு மொழிப் படங்கள் தோல்வியடைந்தபோது, ரீமேக் படங்கள் அவருக்கு கைகொடுத்தன.
“ஒரு நல்ல படம் வேறொரு மொழியில் வரும்போது, அதை ஏன் நம் ரசிகர்களுக்காக ரீமேக் செய்யக்கூடாது?” என்பது இதற்கான ஒரு சின்ன வாதமாக வைக்கப்படுகிறது.
அது உண்மை. அதன் அடிப்படையில், தமிழில் வெளியான ‘வேதாளம்’ படம் இப்போது தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவி நடிக்கும் ரீமேக் கதை என்பதாலும், ‘வேதாளம்’ ஆக்ஷன், சென்டிமென்ட் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என்பதாலும், வால்டர் வீரய்யா போன்ற சூப்பர் ஹீட் படத்திற்குப் பிறகு வருவதாலும், ‘போலா சங்கர்’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வேதாளத்தின் இந்த ரீமேக் சிரஞ்சீவிக்கு என்ன பலனைக் கொடுத்துள்ளது? ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மெஹர் ரமேஷுக்கு வெற்றி கிடைத்ததா?

பட மூலாதாரம், AK ENTERTAINMENT
வேதாளம் போலவே கொல்கத்தாவில் தொடங்கும் கதை
கதைப்படி, கொல்கத்தாவில் பெண்களை கடத்துவது சகஜம். சில கும்பல் சிறுமிகளைக் கடத்தில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்கிறது. மொத்த மாஃபியாவையும் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
ஆனால், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில், சங்கர்(சிரஞ்சீவி) தனது சகோதரி மஹாவுடன் (கீர்த்தி சுரேஷ்) நுழைகிறார்.
சங்கரின் தங்கை மஹா ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கும் மாணவி. கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் சேர்கிறார். சங்கர் டாக்ஸ் ஓட்டுகிறார்.
சங்கர் இந்த மாஃபியா தொடர்பான துப்புகளைக் காவல்துறையிடம் கொடுத்து சிலரைக் கைது செய்ய வைக்கிறார்.
இதனால் அந்தக் கும்பலின் தலைவன் அலெக்ஸ், சங்கர் மீது கோபம் கொள்கிறான். எப்படியாவது சங்கரை பிடிக்க வேண்டுமென முயல்கிறான்.
அலெக்ஸின் கும்பல் சங்கரை கண்டுபிடித்ததா இல்லையா? ஹைதராபாத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு சங்கர் ஏன் வந்தார்? அவருடைய முக்கிய நோக்கம் என்ன? சங்கர்-மஹாவின் கடந்த காலம் என்ன? இந்த விஷயங்களைச் சுற்றி போலா சங்கர் கதை சுழல்கிறது.

பட மூலாதாரம், AK ENTERTAINMENTS
காட்சிகள் ரசிகர்களின் மனதைத் தொட்டுள்ளனவா?
வணிக திரைப்படங்களுக்கு என சில அளவுருக்கள் உள்ளன. ஹீரோ அறிமுகம், பாடல்கள், சண்டைக் காட்சிகள், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல்.
இந்த அளவுருக்களுக்கு போலா சங்கர் படமும் விதிவிலக்கல்ல. கொல்கத்தாவில் நடக்கும் பெண் கடத்தல் பற்றி அந்தக் கும்பலின் தலைவன் அலெக்ஸ் அறிமுகம் செய்வதிலிருந்து கதை தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து, சங்கர் கதாபாத்திரத்தின் என்ட்ரி. இவர்களின் அறிமுகம், கல்லூரியில் சேரும் மஹானி, லாஸ்யாவுடன்(தமன்னா) சங்கரின் சண்டை, நீதிமன்றக் காட்சிகள் என ஒன்றன் பின் ஒன்றாக கதை நகர்கிறது.
ஆனால், காட்சிகளில் எந்த உணர்ச்சியும் தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் மனதைத் தொடுவதில்லை. அது மட்டுமின்றி, ஒவ்வொரு காட்சியும் நிமிடக்கணக்கில் நீள்கிறது.
சிரஞ்சீவிக்கும் வெண்ணெல கிஷோருக்கும் இடையிலான சந்திப்பு, இயக்குநர் மிகவும் பழைய போக்கிலேயே நிறுத்தியிருப்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கிறது.
தமன்னாவுடன் வரும் நீதிமன்ற காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. ஆனால், சிரஞ்சீவியின் நகைச்சுவை மிகவும் நன்றாக உள்ளது. அவர் தனது சொந்த ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார்.
அப்படிப்பட்ட நடிகரை வைத்து இயக்குனரால் ஜாலியாக சிரிக்க வைக்க முடியவில்லை.
சிரஞ்சீவியின் இமேஜ், ஸ்டாமினா, திரைத்துறையில் அவரது நிலை ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதைப் போன்ற தொணியில், ‘திரைப்படங்களில் உங்கள் திறமையைக் காட்ட முயன்றால், எங்கேயோ இருப்பீர்கள். பல தசாப்தங்களுக்கு நம்பர் ஒன்னாக தொடர்வீர்கள்’ போன்ற வசனங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் தேவையற்ற முயற்சிகளாகத் தெரிகின்றன.

பட மூலாதாரம், AK ENTERTAINMENTS
இயக்குநர் லாஜிக்கை ஒதுக்கி வைத்துவிட்டாரா?
படத்தின் இரண்டாவது பாதியில் சங்கர் கொஞ்சம் போலா சங்கராக மாறி தனது உண்மை முகத்தைக் காட்டுகிறார்.
அங்கேயும் இயக்குநர் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். முதல் பாதி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இரண்டாம் பாதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை அது ஏற்படுத்தியது.
இரண்டாம் பாதியின் கதை பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது. அங்கு சிரஞ்சீவியை தாதாவாக அறிமுகப்படுத்துகிறார்கள்.
ஹைதராபாத் தெருக்களில் சங்கர் தாதாவாக சிரஞ்சீவி வலம் வருகிறார். மஹாவின் வீட்டில் ஒரு சிறு கும்பல் செய்யும் குறும்புத்தனம் இரண்டாம் பாதியில் நிறைந்திருக்கிறது. ஆனால், அதில் நகைச்சுவையும் வேடிக்கையும் வேலை செய்யவில்லை.
சிரஞ்சீவிக்கும் ஸ்ரீமுகிக்கும் இடையிலான காட்சிகள் பவன் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ஆனால், இந்தக் காட்சி ஏற்கெனவே சில நூறு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இயக்குனரால் அதை வைத்துப் புதிதாகச் சிந்திக்க முடியவில்லை போலும்.
கதையின் தீவிரம் மஹாவின் அம்மா மீது வில்லன் கும்பல் நடத்தும் தாக்குதலில் இருந்து வருகிறது. அதற்குப் பிறகு அடுத்து என்ன நடக்கும், அந்தக் கதையின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் உணர்வது அவ்வளவு கடினமான காரியமல்ல. எளிதில் கதை புரிந்துவிடுகிறது.
பழிவாங்குவது தனிப்பட்ட விஷயமாக இருக்கும்போது அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை திரைக்கதை பாடங்கள் நமக்குச் சொல்கின்றன.
இந்தக் கதையில், பழிவாங்கும் ஹீரோ ஒரு தனிநபர் இல்லை. அதனால், அந்த கதாபாத்திரத்தையும் அவருடைய எமோஷனையும் ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது மிகவும் சிரமம்.
திரையில் எத்தனை கடுமையான சண்டைக் காட்சிகளை உருவாக்குகிறோம் என்பது முக்கியமில்லை. அந்த சண்டையில் நாம் எந்த அளவுக்கு உணர்ச்சிகளைப் புகுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம். அதுவும் ஸ்டைலாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து இணைக்கவில்லை.
இயக்குநர்களும் எழுத்தாளர்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை ‘போலா சங்கர்’ நினைவூட்டுகிறது.
தலையில் பட்ட ஒரு அடியில் கடந்த காலத்தை மறந்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து மற்றோர் அடியால் மறந்ததை நினைவில் கொள்கிறார்கள். மெஹர் ரமேஷ் லாஜிக் என்ற வார்த்தையை ஒதுக்கி வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் போலிருக்கிறது.
‘வேதாளம்’ படத்தின் 70 சதவீத கதையை மாற்றியதாக மெஹர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். எனினும் அந்த மாற்றங்கள் ஒன்றுகூடவில்லை.

பட மூலாதாரம், AK ENTERTAINMENTS
சிரஞ்சீவியின் வயது கூடினாலும் வசீகரம் போகவில்லை
வயது 67. இந்த வயதிலும் அவருக்குள் இருக்கும் வசீகரம் எங்கும் போகவில்லை. அவர் தனது ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுக்க முயல்கிறார்.
ஆனால் ரசிகர்கள் சண்டை, நடனம், ஸ்டைல் போன்றவற்றை நீண்ட நாட்களாகப் பார்த்து வருகின்றனர்.
அவர்களும் புதியதை விரும்புகிறார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை.
தம்மன்னாவின் கதாபாத்திரம் கதையில் முக்கியமானதாக இல்லை. இரண்டாம் பாதியில் அவர் வரும் காட்சிகள் மிகவும் குறைவு.
சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், அண்ணன் தங்கை இடையிலான பிணைப்பை இயக்குநனரால் சரியாகக் காட்ட முடியவில்லை.
அனைத்து வில்லன் கும்பலும் ஸ்டைலாக இருக்கிறது. சின்னச் சின்ன வேடங்களுக்குக்கூட பிரபல நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
சிரஞ்சீவியை சுற்றிப் பல திறமையான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒருவருக்குக்கூட மறக்க முடியாத வகையிலான வசனம் கொடுக்கப்படவில்லை.

பட மூலாதாரம், AK ENTERTAINMENTS
பாடல்கள் மனதில் பதியவில்லை
படத்தின் இசை ஏமாற்றவில்லை. இவருடைய அனைத்து படங்களும் இசையைப் பொறுத்தவரை ஹிட். ஆனால், ‘போலா சங்கர்’ படத்தின் பாடல்களில் அத்தகைய மேஜிக் இல்லை. இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் மனதில் பதியவில்லை.
ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகியவை அருமையாக அமைந்துள்ளது. ஆனால், வசனங்களில் பிரகாசம் இல்லை. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மெஹர் ரமேஷுக்கு மீண்டும் மெஹா ஹிட் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தனக்குப் பிடித்த ஹீரோவுடன் இணைந்தார்.
கதையைப் பொறுத்தவரை குறைந்தபட்ச உத்தரவாதம் இருந்தது. ஆனாலும், மெஹரால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மொத்தத்தில் சிரஞ்சீவியின் ரசிகர்களையும் ஏமாற்றும் வகையிலான ஒரு படத்தைக் கொடுத்துள்ளார்.
(படம் குறித்த விமர்சனங்கள் அனைத்தும் விமர்சகரின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












