சிங்கப்பூர் முழுக்க அதிரடி சோதனை: ரூ.6000 கோடி, ஆடம்பர கார்கள், வீடுகளை கைப்பற்றிய காவல்துறை

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE
- எழுதியவர், அன்னபெல் லியாங்
- பதவி, வணிக செய்தியாளர்
சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க கட்டிகள், டிசைனர் கைப்பைகள், ஒயின் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணம் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE
குற்ற நடவடிக்கைகளில் கிடைத்த வருமானமா?
இந்த நடவடிக்கையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருந்தனர்.
உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த அளவிலான சோதனைகள் மிகவும் அரிதானவை.
சிங்கப்பூர் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.
பணக்காரப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் 94 வீடுகள், 50 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பணமோசடி மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளில் 31 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சீனா, கம்போடியா, துருக்கி மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE
குற்றவாளிகளை எச்சரித்த சிங்கப்பூர் காவல்துறை
தங்களது நாடுகளில் செய்த ஆன்லைன் மோசடி, சூதாட்டம் போன்ற குற்ற நடவடிக்கைகளில் கிடைத்த வருமானத்தை சிங்கப்பூரில் மாற்றுவதற்கு இந்தக் குழு முயற்சி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
"குற்றவாளிகள் தங்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக சிங்கப்பூரை பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்," என்று குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை பிரிவின் இயக்குநர் டேவிட் செவ் கூறினார்.
"இந்த குற்றவாளிகளுக்கு நாங்கள் கூறும் செய்தி ஒன்றுதான்; நாங்கள் உங்களைப் பிடித்தால், உங்களைக் கைது செய்வோம். உங்கள் முறைகேடான பணத்தைக் கண்டறிந்தால், நாங்கள் அவற்றைப் பறிமுதல் செய்வோம். எங்கள் சட்டங்களுக்கு உட்பட்டு உங்களை நடத்துவோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை
பிடிபட்ட 12 பேர் விசாரணைக்கு உதவி வருவதாகவும், மேலும் எட்டு பேர் தற்போது தேடப்படும் பட்டியலில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"மோசடி பண முதலீடு அடையாளம் காணப்பட்டுள்ள" நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணமோசடி ஒழிப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு எதிரான "உறுதியான நடவடிக்கை" எடுப்பதாகவும் அது கூறியுள்ளது.

பட மூலாதாரம், SINGAPORE POLICE FORCE
குற்றத்திற்கு என்ன தண்டனை ?

பட மூலாதாரம், SINGAPORE POLICE
கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எவ்வளவு அபராதம் மற்றும் தண்டணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவல்களையும் சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஊழல் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 54-ன் கீழ் தனி நபர்களுக்கு இடையே நடக்கும் பணமோசடி குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 500,00 சிங்கப்பூர் டாலர் (ரூ 3.6 கோடி) வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அதேபோல, குற்றவியல் சட்டத்தின் 468-ன் கீழ் ஏமாற்றும் நோக்கத்தில் மோசடி செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என காவல்துறையினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலி ஆவணத்தைப் பயன்படுத்துவதற்கான குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தை எதிர்க்கும் குற்றத்திற்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












