'என்னை வளர்த்த யானையும், அதற்கு நான் பட்ட கடனும்' - இலங்கை வாலிபரின் உணர்ச்சிபூர்வ வாழ்க்கை கதை

பட மூலாதாரம், SUNETH PERERA
- எழுதியவர், சுனேத் பெரேரா
- பதவி, பிபிசி உலக செய்திகள்
"நான் குழந்தை பருவத்தில் இருந்தபோது பூனைகளோ, நாய்களோ எனக்கு செல்லப்பிராணிகளாக இருந்ததில்லை. மாறாக யானைகள் தான் என் பிரியமான பிராணிகளாக இருந்தன", இப்படி யானைகளுடன் சிறுவயதில் இருந்து தொடர்ந்து வந்த பந்தத்தை சிலாகித்துக் கூறுகிறார் இலங்கையைச் சேர்ந்த சுனேத் பெரேரா.
"ஓநாய்களால் வளர்க்கப்பட்ட ரூட்யார்ட் கிப்லிங்கின் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற கற்பனைக் கதாபாத்திரமான மோக்லியைப் போலவே விலங்குகள், என் குழந்தைப் பருவத்தில் ஈடு செய்ய முடியாத இடத்தை பெற்றிருந்தன."
"யானைகளைக் கட்டிப்பிடித்து, அவற்றுடன் உரையாடி, அவற்றின் பழங்களைப் பகிர்ந்துகொண்டு, இந்த ராட்சத விலங்குகளைப் பற்றிக் கற்றுக்கொண்டே வளர்ந்தேன்." என்கிறார் அவர்.
புனைக்கதை ஒன்றில் வரும் மெளக்லி எனும் கதாபாத்திரம், பாகீரா என்ற கருஞ்சிறுத்தை அல்லது பலூ எனும் கரடியின் மீது சவாரி செய்வது போல், பெரேரா தனது ஏழு வயதில், தினமும் ஆற்றில் யானைகளை குளிப்பாட்டிய பின், சூரிய அஸ்தமன நேரத்தில் அவற்றின் மீது சவாரி செய்த படி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
“மற்ற விலங்குகளை போல யானைகளும் ஒரு விலங்கு என்பதை தாண்டி, எங்களுக்குள் ஒரு பந்தம் இருந்தது” என்கிறார் பெரேரா.
தென் இலங்கை பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமான இரத்தினபுரியில், எனது தாத்தா வீட்டில் நான் வளர்ந்தேன். 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் யானைகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் சில குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று.

பட மூலாதாரம், SUNETH PERERA
இளமை ததும்பிய பெண் யானை
என் தாத்தா மூன்று ஆண் யானைகள் மற்றும் இரண்டு பெண் யானைகள் என மொத்தம் ஐந்து யானைகளை வீட்டில் வளர்த்து வந்தார். அவற்றில் ‘ஏகதந்தா’ என்ற ஒற்றை தந்தம் கொண்ட யானை, ஐந்து யானைகள் கொண்ட கூட்டத்தின் பெருமையாக திகழ்ந்தது.
ஏனெனில் தெற்காசியாவில் யானை தந்தங்கள் மிகவும் மதிப்புமிக்கவை மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
அனைத்து ஆண் ஆசிய யானைகளுக்கும் தந்தங்கள் இல்லாத நிலையில், தந்தங்கள் உள்ள யானைகளில் 2 சதவீதம் மட்டுமே இலங்கையில் உள்ளன என்ற வனத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே தந்தங்கள் கொண்ட யானைகள் கொண்டாடப்படுவதற்கு காரணம்.
அதேசமயம், ஆப்ரிக்காவில் ஆண் மற்றும் பெண் யானைகள் தந்தங்களை கொண்டுள்ளன. ஆசியாவில் ‘ஏகதந்தா’ போல, பெண் யானைகள் மிகவும் அரிதாக தந்தங்களை பெற்றுள்ளன.
ஆனால், தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்ட ஏகதந்தா எனும் யானையால் நான் ஈர்க்கப்படவில்லை. மாறாக அந்த குழுவில் இருந்த ‘மாணிக்கே’ எனும் பெண் யானையால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இளமை ததும்பிய அந்த யானையின் முதுகில் ஏறி சவாரி செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது.
“மாணிக்கே” என்ற வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய அல்லது மதிப்புமிக்க பெண்ணை குறிக்கிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES
யானை குளியல்
என் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் யானைகள் தினமும் மதியம் குளிப்பதற்கு செல்லும். அவற்றைப் பார்க்க என் தாத்தா என்னை அழைத்துச் செல்வார். நான் சிறுவனாக வளர்ந்தபோது யானைகளைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல; ‘மஹவுட்’கள் என்று அழைக்கப்படும் அவற்றின் பாகன்களை கண்காணிக்கவும் ஆற்றுக்குச் செல்வேன்.
கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் யானைகளை காயப்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள இந்த கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
மாணிக்கே ஆற்றில் படுத்து கொள்ள, அதன் பாகன் பிரேமரத்னா, அதன் உடம்பில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தேங்காய் மட்டையால் உடம்பைத் தேய்ப்பார். யானைகள் மீது தண்ணீரை தெளிப்பதற்கு முன், அவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவற்றின் பாகன் இரு கரங்களையும் கூப்பி வணங்குவார்.
குட்டையான, நடுத்தர வயதுடைய மீசை வைத்த வாலிபர் பிரேமரத்னாவின் முன்வரிசை பல், மாணிக்கே தற்செயலாக எட்டி உதைத்ததால் காணாமல் போயிருந்தது.
பாகனிடம் யானை சேட்டை
மாணிக்கேவை பிரேமரத்னா குளிப்பாட்டுவதையும், அப்போது அது செய்யும் சேட்டைகளையும் ஆற்றங்கரையில் ஒரு பாறையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது.
ஆற்றில் தூங்கும் நிலையில் இருந்து எழுந்திருக்க வைக்கவோ, அதை நடக்க செய்யவோ பிரேமரத்னா தினமும் பாடாதப்பாடு படுவார். இருப்பினும் அவர் அனேகமாக ஒருபோதும் மாணிக்கேவை தன் வழிக்கு கொண்டு வர கையில் வைத்திருக்கும் ஆயுதத்தை பயன்படுத்தியதில்லை.
ஆனால், ரத்னேவின் பொறுமையையும், அன்பையும் மாணிக்கே அறியாததால், அதன் மீது ரத்னே, சில நேரம் கொஞ்சம் அதிகம் அதிகாரம் செலுத்த வேண்டியதானது. அப்போதும் அவர் தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் ஓங்கி அடிப்பது போல் பாவனை காட்டுவாரே தவிர, யானையை அடிக்கமாட்டார்.
ஆனால் அப்போதும் பிரேமரத்னாவின் சொல் பேச்சைக் கேட்காமல், மாணிக்கே போக்கு காட்டும் போது, பொறுமை இழக்கும் ரத்னா, ‘கடவுளே இந்த யானை செவிடாகி விட்டதா?’ என்று சப்தமாக கேட்டார். ஆனாலும் அவர் என் கண்முன் மாணிக்கேவை தண்டிக்கமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்திருந்தேன்.
யானை சவாரி
இப்படி தினமும் 10 -15 நிமிடங்கள் போக்கு காட்டிய பின், பாகனின் கூச்சலுக்கு செவிமடுக்கும் மாணிக்கே, ஒரு வழியாக குளித்து முடித்து வீடு திரும்ப தயாராகும்.
அப்போது நான் “மாணிக்கே கை கொடு” என்று பணிவாக கேட்பேன். உடனே அது தன் முன்னங்காலை மெதுவாக உயர்த்தி, அதன் முதுகில் அமர்ந்து கொள்ள என்னை அனுமதிக்கும்.
ஆற்றில் குளித்த உடனே யானையின் மீது சவாரி செய்யும் போது, அதன் உடல் ஈரம் பட்டு எனது ஆடைகள் ஈரமாகிவிடும். ஆனால் நான் வீடு திரும்புவதற்குள் ஈரமான ஆடைகள் உலர்ந்துவிடும்.
ஆனால், ஆற்றங்கரையில் யானை சவாரி செய்து வீடு திரும்பும்போது, எனது ஆடைக்குள் நுழையும் அதன் முடிகள் சில சமயம் ஊசி போன்று குத்துவதையும் உணர்ந்துள்ளேன்.
இந்தப் பயணத்தின் போது எதிர்படுபவர்கள், ஒரு சிறுவன் யானை சவாரி செய்கிறானே என்று என்னை வியப்புடன் பார்ப்பார்கள். நாங்கள் வீட்டை அடைந்ததும். எதுவும் சொல்லாமலேயே, நான் இறங்குவதற்கு வசதியாக மாணிக்கே தன் முன்னங்காலை மீண்டும் தூக்கும்.

பட மூலாதாரம், SUNETH PERERA
அந்தஸ்தின் அடையாளம்
இலங்கையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்த சீமான்களின் அந்தஸ்தின் ஓர் அடையாளமாக யானைகள் திகழ்ந்து வந்தன.
அவை தங்களின் உரிமையாளர்களுக்கு கெளரவத்தை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அவர்களின் பல்வேறு பணிகளுக்கும், புத்தமத சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
1970 இல் மேற்கொள்ளப்பட்ட யானைகளின் தேசிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 378 உரிமையாளர்களால், 532 யானைகள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று அங்கு 47 பேருக்கு சொந்தமான 97 வளர்ப்பு யானைகள் மட்டுமே இருப்பதாக, சிறைபிடிக்கப்பட்ட யானைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பல சிறுவர்களைப் போலவே நானும் எனக்குப் பிடித்தமான ஏப்ரல் மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மாதத்தில் தான் சிங்கள இந்து புத்தாண்டு கொண்டாடப்படுகிறது மற்றும் பள்ளிகளுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை விடப்படும்.

பட மூலாதாரம், SUNETH PERERA
யானைகளின் வருகை
அப்போது என் வயதை ஒத்த சிறுவர்கள் புத்தாடை மற்றும் புத்தாண்டு பரிசுகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் எங்கள் தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்ட அன்புக்குரிய யானைகள், மரம் வெட்டும் இடங்களில் இருந்து பணிமுடித்து வீடு திரும்புவதை பார்ப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
சிங்கள இந்து புத்தாண்டு பண்டிகையின்போது மரம் வெட்டும் இடங்கள் தற்காலிகமாக மூடப்படும். அதன் காரணமாக, பண்டிகை நாட்களில் யானைகள் அடிக்கடி தங்களது உரிமையாளர்களின் இல்லங்களுக்கு திரும்பும். சில நேரங்களில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து அவை வீடு திரும்ப சில வாரங்கள்கூட ஆகும்.
யானைகளின் கணுக்கால்களை சுற்றி பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிகள் மற்றும் அவற்றின் கழுத்தில் தொங்கும் மணிகளில் இருந்து எழும் ஓசை, யானைகளின் வருகையை நமக்கு உணர்த்தும். உரிமையாளர்களின் வீட்டை யானைகள் நெருங்க, நெருங்க அவற்றின் மணியோசை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் கழித்து வீடு திரும்பும் யானைகளுக்கு வாழைப்பழம், கரும்பு, கடல் உப்பு அல்லது புளி அளிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும். தங்களது தும்பிக்கையை வைத்தே வீட்டுக்குள் இருக்கும் நபர்களை யானைகள் மோப்பம் பிடிக்கும்.
மாணிக்கேவின் பார்வை எப்போதும் என் பக்கமே இருக்கும். அதற்கு நான் பரிசுகளை கொடுக்கும் போது, மெதுவாக காதுகளை அசைத்து அது தன் பாசத்தை வெளிப்படுத்தும்.
யானையின் சாணம் மற்றும் அதன் சிறுநீர் வாசம் என் விடுமுறையின் துவக்கத்தைக் குறிக்கும் அடையாளங்களாக இருந்தன.

பட மூலாதாரம், GETTY IMAGES
தோட்டத்தில் இளைப்பாறும் யானைகள்
பண்டிகை காலம் முடிந்து யானைகள் மீண்டும் பணிக்காக மரங்கள் வெட்டும் இடங்களுக்கு திரும்பும் முன், சில வாரங்கள் அவை வீட்டு கொல்லைப்புற தொழுவத்தில் ஓய்வெடுக்கும். அப்போது மிகவும் பாதுகாப்பாக உணரும் யானைகள், மணிக்கணக்கில் குறட்டை விட்டு தூங்கும்.
குறட்டை சப்தத்துடன் கூடிய யானைகளின் ஆழ்ந்த உறக்கத்தின் போது, அவற்றின் பெரிய காதுகளின் மென்மையான படபடப்புடன் ஆழமான, தாளத்தை கேட்பேன். வீட்டில் வளர்க்கப்படும் யானைகளும் பாதத்தில் உள்ள விரல்களால் உணவுப் பொருட்களை நகர்த்தும் போது எப்போதாவது மெல்லிய ஓசை எழுப்புவதையும் கேட்பேன்.
குறிப்பாக, நிலவொளி கசியும் இரவுகளில், இருள் சூழ்ந்த பொழுதுகளில் யானைகள் எழுப்பும் ஓசையில் சிம்பொனி இசை போன்ற ஓசையை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

பட மூலாதாரம், GETTY IMAGES
சங்கிலியில் பூட்டப்பட்ட வாழ்க்கை
வீட்டு யானைகள் பெரும்பாலும் தங்களது முழு வாழ்க்கையையும் சங்கிலியால் பூட்டப்பட்ட பாதத்துடன் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
யானைகள் தங்களின் கடந்த கால வாழ்க்கையில் மனிதர்களாக இருந்ததாகவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த கடனை அவை, தற்போது தங்களது எஜமானர்களுக்கு வேலை செய்து கொடுப்பதன் மூலம் அடைக்க வேண்டும்.
கடந்த 1990 களின் முற்பகுதியில் இலங்கையில் மரம் வெட்டும் தொழில் பெரிய அளவில் முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக, இந்தத் தொழிலை மையமாக கொண்டு, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த யானைகளால் அவற்றின் உரிமையாளர்களுக்கு கிடைத்து வந்த லாபம் தடைப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே, நாங்கள் வளர்த்து வந்த மூன்று யானைகள் அவற்றின் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயின.
ஏகதந்தா யானையின் மரணம்
எனக்கு அப்போது ஐந்து வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஏகதந்தா யானை இறந்த நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
நோய்வாய்ப்பட்ட அந்த யானைக்கு பல மாதங்கள் சிகிச்சை அளித்தும் எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. அதை எங்கள் வீட்டு தோட்டத்திலேயே அடக்கம் செய்தோம்.

பட மூலாதாரம், GETTY IMAGES
சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட யானைகள்
இலங்கையில் மரம் வெட்டும் தொழில் முடிவுக்கு வந்ததை அடுத்து, 1990 களின் பிற்பகுதியில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சவாரிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டன.
எனது வீட்டில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில், வட இலங்கை பகுதியில் அமைந்திருந்த ஹபரனை என்ற ரிசார்ட் நகருக்கு மாணிக்கே அனுப்பப்பட்ட போது நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.
அதற்கு முன் மாணிக்கே தன் வாழ்நாளில் லாரியில் பயணித்ததே இல்லை. லாரியில் ஏறும் படி வழக்கம்போல் பிரேமரத்னா சத்தம் போட்டார். ஆனால் இந்த முறை அவர் சொல்வதைக் கேட்காததைப் போன்று மாணிக்கே பாசாங்கு செய்யவில்லை. உண்மையில் அது லாரியில் ஏற பயந்தது. மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தது. மன அழுத்தத்திற்கு ஆளானது.
யானையின் பிரிவு
பிரேமரத்னாவின் தொடர் கட்டளையை கேட்டு, வேறு வழியில்லாமல் தனது முன்னங்கால்களை லாரியில் எடுத்து வைத்த மாணிக்கே, பின்னங்கால்களை தரையில் வைத்து, லாரியில் ஏற மறுத்தது.
பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கடைசியாக அது லாரியில் ஏறியது. அதற்குள் சாலையோரத்தில் ஏராளமானோர் அந்த காட்சியைக் காண திரண்டனர்.
சிறு வயதில் இருந்து நான் ஆசை ஆசையாய் பார்த்து வளர்ந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு தொலைதூரத்துக்கு பயணிக்க தொடங்கியது.
என் பார்வையில் இருந்து முற்றிலும் மறையும் வரை நான் தூரத்தில் இருந்து அதை பார்த்துக் கொண்டிருந்தேன், கலங்கிய கண்களுடன் இருந்த அதை, வெகு தூரம் அழைத்துச் சென்றனர். “விரைவில் சந்திப்போம் மாணிக்கே” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்

பட மூலாதாரம், GETTY IMAGES
ஓடிய வருடங்களும்; யானையின் மரணமும்
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் சவாரி பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணிக்கேவை, நாங்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சென்று சந்தித்து வந்தோம்.
அது ஏற்கனவே லாரியில் பயணிக்க பழக்கப்பட்டிருந்ததால், ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் சில வாரங்கள் எங்கள் வீட்டுக்கு வரும். ஒருமுறை அப்படி வீட்டுக்கு வந்தபோது அது தனது 60 களின் பிற்பகுதியில் இருந்தது. ஆனால் யானைகளுக்கு பொதுவாக ஓய்வு என்பது கிடையாது. அவை தங்களது வாழ்வில் கடைசி நாள் வரை வேலை மற்றும் கலாசார பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
ஆனால், ஒருகட்டத்தில் மாணிக்கேவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர என் தந்தை இறுதியாக முடிவெடுத்தார். அதற்கான பராமரிப்பு செலவு அதிகமானாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த முடிவை அவர் எடுத்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இறுதியில், எங்கள் வீட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த தென்னந்தோப்புக்கு மாணிக்கே அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அதற்கு நிறைய உணவுகள் இருந்தன. ஆனால் அதுவே அதன் கடைசி பயணமாக இருக்கும் என்று மாணிக்கேவுக்கோ, எங்களுக்கோ தெரியவில்லை.
தென்னந்தோப்புக்கு சென்ற சில நாட்களிலேயே யானை நோய்வாய்ப்பட்டது. அதற்கு வேண்டிய சிகிச்சைகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நாங்கள் உடனே மாணிக்கேவின் இருப்பிடத்திற்கு சென்றோம்.
பிள்ளைப் பருவத்தில் எனது செல்லப்பிராணியாக இருந்த அந்த யானை, தோட்டத்தில் எழுந்திருக்க சக்தி இல்லாமல் கிடந்ததைப் பார்த்தபோது எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆனால் தனக்கு அரவணைப்பு வேண்டும் என்பதுபோல் அது தன் தும்பிக்கையை எங்களின் திசையை நோக்கி லேசாக அசைத்தது. உடனே நான் அதன் நெற்றியைத் தொட்டு வாஞ்சையாக தடவிக் கொடுத்தேன்.
மாணிக்கே விரைவில் குணமடைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அன்றிரவு நாங்கள் வீடு திரும்பினோம். ஆனால், யானை இறந்துவிட்டதாக மறுநாள் காலை தொலைப்பேசியில் துயரச் செய்தி கிடைத்தது.
உடனே தென்னந்தோப்புக்கு விரைந்து. அதன் இறுதி சடங்கில் நான் தனியாக பங்கேற்று மாணிக்கேவுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.
தென்னந்தோப்புக்கு நடுவே யானையின் முகம் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட நிலையில், அது தனிமையில் மீண்டும் எழ முடியாதபடி நிரந்தரமாக உறங்கியிருக்க, அதற்கு இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள புத்த பிச்சுகள் அழைக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், GETTY IMAGES
ஒரு சகாப்தத்தின் முடிவு
மாணிக்கே என் வாழ்நாள் துணையாக இருந்தது. பெற்றோர் என்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்திருந்தாலும், அதற்கான பணம், மாணிக்கே யானை கடுமையாக உழைத்ததன் மூலம் தான் எங்களுக்கு கிடைத்தது.
எனக்கு யானையின் ரத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வகையில் நான் யானையால் வளர்க்கப்பட்டதாகவே உணர்கிறேன்.
இந்த பூமியில் இனி நான் மாணிக்கேவை சந்திக்க முடியாது. ஆனால் லண்டனில் பிபிசி அலுவலகம் அமைந்துள்ள பரபரப்பான வீதி வழியே செல்லும் போதெல்லாம், எனது கிராமப்புற குழந்தை பருவ நினைவுகள் என்னை அடிக்கடி அலைக்கழிக்கின்றன.

பட மூலாதாரம், SUNETH PERERA
யானையின் இறப்பும், வாலிபரின் தவிப்பும்
மாணிக்கேவின் முகம் என் மனதை நிரப்ப, ஆழ்மனதில் இருந்து தவிர்க்க முடியாதபடி அதன் நினைவுகள் என்னை தூண்டுகின்றன. விவரிக்க முடியாத குற்ற உணர்வு மற்றும் சோகத்தால் என் இதயம் நிரம்புகிறது.
நான் மாணிக்கேவை மிகவும் ஆழமாக நேசித்தேன் என்றால், பிறகு ஏன் அதை சங்கிலியால் பூட்டி வைத்தேன். மாணிக்கேவுடன் 20 வருடங்கள் கழித்திருந்தபோதிலும், அதனுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது.
மாணிக்கேவை இழப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. நான் அதை மீண்டும் பார்க்க முடிந்தால், அதனுடன் புகைப்படம் மட்டும் எடுத்து கொள்ள மாட்டேன். கூடவே அதன் காலில் பூட்டப்பட்டிருக்கும் சங்கிலியை கழற்றிவிட்டு அதை சுதந்திரமாக வாழ அனுமதிப்பேன். கடைசியாக ஒருமுறை அதன் கண்களை பார்த்து நன்றி சொல்வேன்.
மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்குமேயானால், நான் அதற்கு செலுத்த வேண்டிய பெருங்கடனை அடைப்பேன். குட்பை மாணிக்கே!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












