தடயமின்றி 10 கொலைகளை செய்த 'சீரியல் கில்லர்கள்' ஒரு குடிகாரரால் மாட்டியது எப்படி?

பட மூலாதாரம், CHINHA MAGAZINE
- எழுதியவர், அருந்ததி ரானடே-ஜோஷி
- பதவி, பிபிசி மராத்தி
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களை சங்கடப்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.
அது 1976ஆம் ஆண்டின் குளிர்காலம். புனேவில் கடுங்குளிர் மட்டுமில்லை, விவரிக்க முடியாத அச்சமும் நிலவியது.
ஒருபுறம் இந்திராகாந்தி நாடு முழுக்க அவசரநிலையைப் பிரகடனம் செய்திருந்தார். மறுபுறம், அந்த நான்கு பேரும் புனேவில் அறிவிக்கப்படாத அவசரநிலையைக் கொண்டு வந்திருந்தார்கள்.
புனேவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்குப் பிறகு புனேகர் குடும்பத்தினர் கடும் குளிரால் உறைந்து போயிருந்தனர்.
பாந்தர்கர் சாலை, சட்டக் கல்லூரி சாலை ஆகியவை இன்று போல் அன்றைய தினம் கூட்டம் நிறைந்தவையாக இருக்கவில்லை. அங்கிருந்த எஸ்டேட் பங்களாக்கள் இருள் கவிழ்ந்த பிறகு அமைதியின் மறுஉருவமாக மாறிவிடும். ஆங்காங்கே குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் வசித்த பகுதி அது.
பாந்தர்கர் கல்வி நிலையத்திற்கு அருகிலேயே சமஸ்கிருத பண்டிதர் காஷிநாத சாஸ்திரி அபியங்கார் வசித்து வந்தார். ஸ்மிரிதி பங்களாவின் கதவைத் தட்டிய 4 இளைஞர்கள், அந்த 88 வயது பண்டிதரிடம் சமஸ்கிருதத்தில் சந்தேகம் கேட்க வந்திருப்பதாகக் கூறினார்கள்.
பேரக்குழந்தைகள் இருவர், காஷிநாத் சாஸ்திரி, அவரது மனைவி இந்திரா ஆகிய நால்வர் மட்டுமே வீட்டில் வசித்தனர். சக்குபாய் வாக் என்பவர் அந்த வீட்டில் வேலை செய்து வந்தார்.
அவர்தான் கதவைத் திறந்தார். வேலையை முடித்துவிட்டு, தனது வீட்டிற்குப் புறப்பட எத்தனித்த அவரை ஒருவன் வளைத்துப் பிடித்து அவரிடம் இருந்து விவரங்களைக் கேட்டறிந்தான். கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்தவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டனர். இதே நிலைதான் வயது முதிர்ந்த இந்திராவுக்கும் நேரிட்டது.
கீழே நடந்த உரையாடல்களைக் கேட்ட காஷிநாத்தின் பேத்தி வெளியே வந்தார். அவருக்கும் அதே கதிதான் நேரிட்டது. காஷிநாத் வீட்டிற்கு வந்து நடந்ததைக் கண்டு அதிர்ந்து, கதறியபோது திருடர்கள் பாதுகாப்பான தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் பைகளில் நிரப்பப்பட்டிருந்தன. வீட்டில் இருந்த ஒவ்வொருவரின் தொண்டையும் நைலான் கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன.
கழுத்தை இறுக்கி 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பிறகு, திருடர்கள் சமையலறைக்குச் சென்று உணவை எடுத்து வந்து டைனிங் மேஜை மீது வைத்து சாப்பிட்டிருந்தனர். கொள்ளையடித்துவிட்டு வெளியேறும் முன் வீடு முழுவதும் ஒரு வித வாசனை திரவியத்தை தெளித்துவிட்டுச் சென்றிருந்தனர்.
இந்தக் கொலையாளிகளின் நோக்கம் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது மட்டுமே. அதற்காக, முன்பின் தெரியாத, எந்தப் பகையும் இல்லாத மக்களின் உயிரை அவர்கள் பறித்திருக்கிறார்கள்.
நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் இந்தக் கொடூரம் அரங்கேறியிருந்தது. நகர்ப்புற, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த நன்கு படித்த, கலையார்வம் மிக்க இளைஞர்கள் மற்றும் கல்லூரி பருவ மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக 10 கொலைகளைச் செய்வார்களா என்பது இப்போதும் ஆச்சர்யம் தருவதாகவே உள்ளது.
கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ராஜேந்திர ஜக்கல், திலிப் சுதர், ஷாந்தாராம் ஜக்டப், முனாவர், சுஹாஸ் சந்தக் ஆகியோர் ஒன்று சேர்ந்து 10 பேரைக் கொலை செய்தனர். இந்தக் கொலைகள் 1970களில் அமைதியான, கல்வி நிலையங்கள் நிரம்பிய, ஓய்வூதியதாரர்களின் சொர்க்கமாக, மிகவும் பாதுகாப்பான நகரமாகக் கருதப்பட்ட புனேவில் நிகழ்ந்தன.
மகாராஷ்டிராவை உலுக்கிய ஜோஷி-அபியங்கர் படுகொலை நிகழ்ந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் சில ஒப்பீடுகள் பொருந்தவில்லை. இதை ஒரு கொடூரமான கதையாக மட்டுமல்ல, இதன்மூலம் மனித உணர்ச்சிகளின் விசித்திரமான சிக்கலையும் காட்ட சில கலைப் படைப்புகள் முயற்சி செய்தன.
ஜக்கல் தூக்கிலிடப்பட்டு 40 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, இன்றைய தலைமுறை கலைஞர்கள் அவரது வாழ்க்கையில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க விரும்புகிறார்கள். நான் அதை ஒரு வெப் சீரிஸாக செய்ய விரும்புகிறேன்.
கடந்த 1976-77ஆம் ஆண்டில் ஜோஷி-அபியங்கர் படுகொலை என்று அழைக்கப்படும் அந்தக் கொடூரமான தொடர் கொலையில் 10 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். முதல் கொலைக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 4 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒரே நேரத்தில் 4 பேர் தூக்கிலிடப்பட்டது அதுவே முதல்முறை.
கல்லூரி இளைஞர்கள் எப்படி இந்த சதித் திட்டங்களை தீட்டினார்கள்? 10 கொலைகள் நடக்கும் வரை போலீசாரிடம் சிக்காமல் பதுங்கி இருந்தது எப்படி? போலீசை ஏமாற்றிய அவர்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் உண்மைக் கதை மிகக் கொடூரமானது. வெட்கப்பட வேண்டிய கிரைம் த்ரில்லர்.
புனேவில் 1976ஆம் ஆண்டு குளிர்காலம், கடுங்குளிராக மட்டுமல்ல, அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அந்தி சாய்ந்த பிறகு, மெத்தப் படித்த இந்தக் கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிடும்.
வீட்டில் இருந்த அனைவரையுமே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதால் அவர்களை அடையாளம் காண யாரும் இருக்கவில்லை. இந்தக் படுகொலைகள், அன்றைய சிறிய நகரமான புனேவில் மிகவும் அச்சத்தைப் பரப்பியது. இதனால், எப்போதும் பிசியாக இருக்கும் துளசிபாக், லக்ஷ்மி ரஸ்தா பகுதிகள்கூட மாலையில் இருட்டியவுடன் அமைதியாகி விடுவது வழக்கமாகிவிட்டது.
ஒருபுறம் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அரசியல் சூழல் கடுமையாக இருந்தது. அதேநேரத்தில் புனேவில் இந்தக் கொலைகாரர்கள் தங்களது கொடூர செயல்களால் அறிவிக்கப்படாத அவசர நிலையைக் கொண்டு வந்திருந்தனர்.

பட மூலாதாரம், CHINHA MAGAZINE
நெருங்கிய நண்பர்தான் முதல் கொலை
புனேவின் மத்திய திலக் சாலையில் உள்ள அபினவ் கலா மகாவித்யாலயா என்ற புகழ்பெற்ற கல்லூரியில் ஒரு குழு படித்துக்கொண்டிருந்தது. அந்தக் கால கல்லூரி இளைஞரைப் போலவே, அவர்களுக்கும் தளங்கள் அல்லது கூடும் இடங்கள் இருந்தன.
அந்தக் கல்லூரிக்கு அருகில் சரஸ்பாக் சாலையில் உள்ள 'ஹோட்டல் விஷ்வா'வின் கட்டாவும் ஒன்று. இந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் 'அபினவ்' ஒரு மாணவர்.
அவர் இந்த குழுவில் இருந்தார். அவர் பெயர் பிரகாஷ் ஹெக்டே. அந்த கும்பலின் தலைவன் ராஜேந்திர ஜக்கல், "விரைவில் பணக்காரர் ஆக, நீங்கள் சில சூதாட்டங்களை செய்ய வேண்டும்," என்று கூறினார்.
பிரகாஷ் ஹெக்டேவை கடத்தி, அந்த ஹோட்டல் உரிமையாளரான பிரகாஷின் தந்தையிடமிருந்து பெரும் பணத்தைப் பறிக்க அவர் திட்டம் தீட்டினார்.
சுந்தரண்ண ஹெக்டே அதாவது பிரகாஷின் தந்தையை முறைப்படி கடிதம் எழுதி மிரட்டி 25 ஆயிரம் ரூபாய் தருமாறு அவர் கேட்டுள்ளார்.
பிரகாஷ் காணாமல் போனாலும், அவனுடன் ஒரே குழுவில் இருந்த இவர்கள் டீ குடிக்கவும், காலை உணவு சாப்பிடவும் ஹோட்டலுக்கு வந்துகொண்டே இருந்துள்ளனர். விஷ்வா ஹோட்டலில் டேபிளுக்கு அடியில் எப்படி, எங்கு பணம் செலுத்த வேண்டும் என்ற குறிப்பும் ஒட்டப்பட்டிருந்தது.
சரஸ்பாக்- பேஷ்வா பார்க் பகுதியில் உள்ள மரத்தில் பணயத்தொகையுடன் பையை வைக்கச் சொன்னார். ஆனால் அவர்களின் அச்சுறுத்தலையும் மீறி சுந்தரண்ண ஹெக்டே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். இதைத் தெரிந்துகொண்ட அந்த கும்பல் உஷாராகிவிட்டது. பணத்தை எடுப்பதில் உள்ள ஆபத்தை உணர்ந்துகொண்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஜக்கல் கும்பல் தங்கள் நண்பரான பிரகாஷையே கொலை செய்யத் திட்டம் தீட்டியது. அவர் கோத்ருட்டின் தப்ரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நேரத்தில் சொற்ப எண்ணிக்கையிலேயே மக்கள் வசித்த அந்தப் பகுதியே இந்தக் கும்பலின் மறைவிடமாகவும் இருந்தது.
அங்கிருந்து சரஸ்பாக் பகுதிக்கு பிரகாஷ் ஹெக்டே அழைத்து வரப்பட்டார். 1976ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, குளிர் இரவில், ஜக்கால், சுதார், ஜக்தாப் மற்றும் சந்தக் ஆகியோர் ஹெக்டேவை மது விருந்து என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அதிக அளவில் மது குடிக்கச் செய்தனர். பின்னர் நைலான் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏரிக்குள் உடலை வீசிய கும்பல்
ஏர்வி பேஷ்வா பூங்காவிற்கு வரும் குழந்தைகளுக்கு அங்கு படகு சவாரி செய்வது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால் அதே குளத்தில் ஜக்கல் கும்பல் முன்னரே திட்டமிட்டபடி ஹெக்டேவின் உடலை மர பீப்பாயில் போட்டுவிட்டுச் சென்றது.
அந்த ஏரி சரிவர பராமரிக்கப்படாததால், வண்டல் மண் படிந்து இருந்ததை அந்தக் கும்பல் தெரிந்து வைத்திருந்தது. மர பீப்பாயில் இருந்த துளைகள் வழியே மீன்கள் சென்று அந்த உடலைத் தின்று காலி செய்து விடும் என்று அவர்கள் எண்ணியுள்ளனர். உண்மையில், பிரகாஷ் ஹெக்டேவின் உடல் கிட்டத்தட்ட ஓராண்டாக கிடைக்கவே இல்லை.
கும்பலில் ஒருவர் வெளியேற, மற்றொருவர் நுழைந்தார்
நண்பன் தன் கண்முன்னே மூச்சுத் திணறி இறந்ததைக் கண்டு, இந்த நால்வர் அணியில் இருந்த சுஹாஸ் சந்தக் சற்று அதிர்ந்தார். அந்தக் கொலையை கும்பலின் தலைவன் ஜக்கல் அவ்வளவு எளிதில் ஜீரணித்துக் கொண்டதைப் பார்த்து மற்றவர்களின் நம்பிக்கை அதிகரித்தது.
விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இதில் சந்தக் மட்டும் கும்பலிடம் இருந்து விலகி, பின்னர் வழக்கில் சாட்சியாக வந்தார்.
இதன் காரணமாக மற்ற நால்வரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தக் விலகியிருந்தாலும், ஜக்கலின் வேறொரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த முனாவர் ஷா என்ற நண்பன் அந்தக் கும்பலில் சேர்ந்துகொண்டான். நால்வரும் சேர்ந்து கோலாப்பூரில் உள்ள அரவிந்த் காஷித் என்ற தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.
கோலாப்பூரில் கொள்ளை முயற்சி தோல்வி
காஷித் வீட்டில் இல்லாததைக் கண்டு, அவரது மனைவிடம் பேரம் பேசுவதற்காக ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு அவரது வீட்டிற்கு நால்வரும் சென்றனர். ஆனால் காஷித்தின் மனைவி இவர்கள் நால்வரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
இதனால், மறுநாள் இரவு மீண்டும் காஷித் வீட்டிற்கு அவர்கள் சென்றனர். அப்போது, காஷித் வீட்டிற்கு வருவதைப் பார்த்த அவரது மனைவி, 4 பேரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
ஆம். உண்மைதான், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள், ஆனால் அவர்களின் திட்டம் பலிக்கவில்லை. ஏனெனில், அரவிந்த் காஷித் உடல்ரீதியாக வலிமையானவர். இதனால் ஆபத்தை உணர்ந்த நால்வரும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து நழுவி நேராக புனே திரும்பினர்.

பட மூலாதாரம், Getty Images
ஜோஷி-அபிங்கரின் கொடூரமான கொலை
புனே வந்தவுடன், முன்கூட்டியே விவரங்களை அறிந்து கொள்ளாமல் எதையும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர். திலகர் சாலையை ஒட்டிய அமைதியான காலனியான விஜயநகர் காலனியில் உள்ள ஜோஷ்யாவின் பங்களாவை அவர்கள் உளவு பார்த்தனர்.
ஐம்பது வயதுடைய தம்பதிகளைத் தவிர ஒரே ஒரு சிறுவன் மட்டுமே வீட்டில் இருப்பதை உணர்ந்த அவர்கள், 1976ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இரவு ஜோஷியின் வீட்டு வாசலுக்குச் சென்று சிறுவன் எப்போது வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டனர். வீட்டில் கணவன்-மனைவி மட்டுமே இருந்தனர். கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களைக் கட்டியுள்ளனர். அவர்களின் வாயில் பந்துகளை வைத்தனர்.
வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துவிட்டு வெளியே செல்லும்போது சிறுவன் ஆனந்த், வீட்டிற்கு வந்திருந்தான். இதையடுத்து, தாங்கள் கொண்டு வந்த நைலான் கயிற்றால் ஜோஷி தம்பதியின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். சிறுவன் ஆனந்த் கதையையும் அவ்வாறே முடித்தனர்.
வீட்டில் இருந்து கிளம்பும் முன் அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் அழித்துவிட்டனர். கடுமையான வாசனை திரவியத்தை வீடெங்கும் தெளித்தனர், இல்லை இல்லை ஊற்றினர். அதனால் போலீஸ் நாயால் தடயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
இதுவரை செய்த நான்கு கொலைகளிலும் சிக்காதது அவர்களுக்கு அதிக தைரியத்தைக் கொடுத்தது. மறுபுறம், புனேவின் நடுப்பகுதியில் ஒரே வீட்டில் மூன்று பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதால், காவல்துறை வேக வேகமாக வேலை செய்யத் தொடங்கியது.
ஆனால், காணாமல் போன பிரகாஷ் ஹெக்டேவின் உடல் கிடைக்காததால், இரண்டையும் எந்த வகையிலும் தொடர்புபடுத்த முடியவில்லை. விஜயநகர் காலனியின் ஜோஷி படுகொலைக்கான குற்றவாளிகள் யார் என்ற சராய் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது.
மறுபுறம், கலைக் கல்லூரியில் படித்த இளைஞர்கள் புதிய குற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் ஷங்கர்ஷேத் சாலையில் ஒரு மாதத்திற்குள் அடுத்த வீட்டை உளவு பார்த்தனர்.
அந்த அமைதியான காலனியின் ஒரு முனையில் தொழிலதிபர் பாஃப்னாவின் விசாலமான திரிஷாலா பங்களா இருந்தது. அப்போது சங்கர்சேத் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.
ஜக்கல், சுதார், ஜக்தாப், முனாவர் ஆகிய நால்வரும் கதவைத் தட்டியபோது பாஃப்னா வீட்டில் இல்லை. மனைவி யஷோமதி மட்டும் தனியாக இருந்தார். அவருடன் வழக்கம் போல் ராஜு ஜெயின் என்ற உறவினர் தங்கியிருந்தார். ஃபாரூக் ஹக்கீம் என்ற வயதான வேலைக்காரரும் வீட்டில் இருந்தார்.
வேலைக்காரர் கதவைத் திறந்தவுடன் வாயை அழுத்தி கை கால்களைக் கட்டிவிட்டார்கள். அப்போது இறங்கி வந்த யஷோமதி பாஃப்னா கத்த ஆரம்பித்தாள். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, விலையுயர்ந்த பொருட்கள் எங்கே என்று கேட்டுள்ளார்கள். இருவரையும் ஒரே அறையில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை தங்களது பைகளில் நிரப்ப ஆரம்பித்தனர்.
அப்போது யஷோமதியின் உறவினரான ராஜூ வந்தார். அங்கிருந்த நிலைமையை பார்த்தவுடன் புரிந்து சுதாரித்துக்கொண்ட ராஜூ, குளியலறைக்குள் சென்று கதவை உள்புறம் பூட்டிக் கொண்டார். பின்னர், ஜன்னலில் வழியே திருடன், திருடன் எனக் கத்த ஆரம்பித்தார்.
இதைக் கேட்டு மேலே சென்ற திருடன் கீழே இறங்கி வந்தான். யஷோமதி தனது கையில் கிடைத்த கண்ணாடிக் குடுவையை எறிந்தார். அவரும் கூக்குரல் எழுப்பினார். மக்கள் திரண்டால் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்து நால்வரும் தப்பி ஓடிவிட்டனர்.
தோற்றத்தை மாற்றிக் கொண்டு புனே திரும்பினர்
தங்களைப் பார்த்த 3 பேரும் உயிருடன் இருப்பதை உணர்ந்த ஜக்கல் கும்பல், சில நாட்களுக்கு புனேவை விட்டு வெளியே செல்ல முடிவு செய்தது. சிறிது காலம் கடந்த பின்னர், தோற்றத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டு ஜக்கல் புனே திரும்பினார்.
அபியங்கரின் வீட்டில் 5 கொலைகள்
பின்னர், பண்டார்கர் சாலை- சட்டக் கல்லூரி சாலையில் உள்ள ஆடம்பர பங்களாக்கள் நிறைந்த அமைதியான பகுதிக்கு அவர்கள் சென்றனர். தங்க இடம் தேடுவதாகச் சொல்லி பங்களா கதவுகளைத் தட்டுவது அவர்களது வழக்கம்.
அதைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது, பண்டார்கர் கல்வி நிலையம் அருகே உள்ள ஸ்மிருதி பங்களாவில் இருந்து ஒரு கார் புறப்படுவதை அவர்கள் கண்டனர்.
கஜானன்ராவ் அபியங்கரும் அவரது மனைவியும் 'லேட் ஆகிவிடும், சாப்பிடுங்கள்' என்று சத்தம் போட்ட படி வெளியே வந்ததை அந்தக் கும்பல் பார்த்தது. டிசம்பர் 1ஆம் தேதி இரவு அங்கே கொள்ளையடிப்பது என்று தீர்மானித்தது. அன்றைய தினம் அபியங்கரின் வீட்டில் 5 கொலைகள் நடந்தன.
அதீத நம்பிக்கையால் சிக்கிய சீரியல் கில்லர்கள்
ஜோஷிக்கு பிறகு, அபியங்கரின் பங்களாவும் அதே முறையில் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சீரியல் கில்லர்களின் தொடர் கொலை, கொள்ளைகளால் போலீஸ் கமிஷனர் முதல், அனைத்து போலீஸ் நிலையங்கள் வரையிலும் ஊடகங்களின் அழுத்தம் அதிகரித்தது.
குற்றவாளி கண்டுபிடிக்கப்படாவிட்டால், கமிஷனர்கூட விடுமுறையில் செல்லத் தயாராக இருந்தார் என்று அப்போதைய பத்திரிகையாளர் கூறுகிறார். ஆனால் இறுதியாக இந்தக் குற்றவாளிகள் தாங்களாகவே காவல் நிலையம் வரை நடந்து சென்றனர். அவர்களது கழுத்தில் கடைசி முடிச்சு போடப்பட்டது.
மீண்டும் ஒரு நண்பன் கொலை
ஜெயந்த் கோகலே என்பவர் ஜக்கலின் நண்பர். அதே அபினவ் கல்லூரியின் மாணவர். இந்த ஜக்கல் கும்பலைச் சேர்ந்த சீனியர். கோகலே, ஜக்கலுக்கு நிறைய உதவிகளைச் செய்தார். கோகலேவின் தந்தை அல்கா டாக்கீஸுடன் திரைப்பட விநியோகத்திற்காக தொடர்புடையவர் என்பதை ஜக்கால் அறிந்திருந்தார்.
எதிர்காலத்தை உளவு பார்ப்பதற்காக கோகலே குடும்பத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்பினார். அவர்கள் கோகலே வீட்டுக்குச் சென்றபோது ஜெயந்த் வீட்டில் இல்லை. பின்னர் வருவதாகக் கூறியதால் ஜக்கல் புறப்பட்டார். அப்போது அண்ணன் அனில் கோகாய் வீட்டில் இருந்தார். இந்த நால்வருடனும் அவருக்குப் பரிச்சயம் உண்டு. அவர் ஜக்கல் கும்பலுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இந்த கொலையாளிகள் அனில் கோகலேவை நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை அப்புறப்படுத்துவதற்காக பண்டாகார்டனுக்கு கொண்டு சென்றனர். அங்கு அனிலின் சடலம் ஏணியில் கட்டி இரவில் ஆற்றில் விடப்பட்டது. அவர் ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார் என்று அந்த குமபல் கணித்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
மார்ச் 23, 1977 அன்று, அனில் கோகலேவின் சடலம் பண்டாகார்டன் அருகே கண்டெடுக்கப்பட்டது. ஜோஷி-அபியங்கராவை போலவே, அவரும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருந்தார். அவரது உடலை 4 பேரும் அப்புறப்படுத்தியதைக் கண்ட குடிகாரர் ஒருவர் மூலம் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
நால்வரும் சென்ற பிறகு, அவர்கள் தண்ணீருக்குள் எதை விட்டனர் என்று தெரிந்து கொள்வதற்காக அவர் வலையைத் தூக்கியுள்ளார். உள்ளே சடலம் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் அவர் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். பின்னர் சுதாரித்து எழுந்த அவர், நேரே பண்டகார்டன் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததை போலீசாரிடம் கூற ஆரம்பித்தார்.
ஆனால் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்த அவர், அதிகம் மது குடித்திருந்ததால் சரிவரப் பேச முடியவில்லை. அதைப் பார்த்த போலீசார் அவரை லாக்கப்பில் அடைத்தனர்.
அனில் கோகாய் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் மறுநாள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தங்களது திட்டம் வெற்றியடைந்ததா என்பதை அறிந்துகொள்ள, உதவி செய்கிறேன் என்ற போலி காரணத்தின் பேரில், ஜக்கல் தனது நண்பர்களுடன் நேராக பண்டாகார்டன் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
"எங்களுடைய நண்பன் காணாமல் போய்விட்டான், நீங்கள் அவரை தேடாமல் என்ன செய்கிறீர்கள்" என்று காவல்துறையிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படிச் செய்வதால் தங்கள் மீது சந்தேகம் வராது என்று அவர்கள் நம்பினர். ஆனால் லாக்கப்பில் இருந்த குடிகாரன் அந்தக் கும்பலை அடையாளம் கண்டுகொண்டான்.
அவர் போலீசிடம் தகவலைச் சொல்ல ஆரம்பித்தவுடன், காவல்துறையும் இந்த வழக்கை கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டது. பண்டாகார்டனிலேயே அனிலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டு ஜக்கல் கும்பலை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவரது நண்பர்களில் ஒருவர் சதீஷ் கோர். அவர் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றாலும், இந்த நால்வரும் என்ன செய்தார்கள் என்று அவருக்கு யோசனை இருந்தது. காவல்துறை விசாரணையில் கோர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினார். அதன் மூலம் அந்த சீரியல் கில்லர் கும்பலுக்கு முடிவு நெருங்கியது.
காவல் உதவி ஆணையர் மதுசூதன் ஹுல்யால்கர் தலைமையில் காவல் துறையினர், அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டி வழக்கை வலுப்படுத்தினர்.

பட மூலாதாரம், KESARI
4 பேருக்கும் மரண தண்டனை
மே 15, 1978இல், முதல் கொலை நடந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜக்கல், சந்தக், ஜக்தாப், சுதர் மற்றும் முனாவர் ஆகிய 5 பேர் மீது மொத்தம் 10 கொலைகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டன. சதீஷ் கோர் சாட்சியாக இருந்தாலும், அவர் நேரில் கண்ட சாட்சியாக இல்லை. அப்போது முதல் கொலையில் தொடர்புடைய சுஹாஸ் சந்தக் மன்னிக்கப்பட்டார்.
ஜக்கல் கும்பலின் கொள்ளை முயற்சியில் தப்பிய பாஃப்னா குடும்ப உறுப்பினர்கள் நேரில் பார்த்தவர்கள். ஆனால் சந்தக்கின் சாட்சியத்தையே ஏற்று, ஜக்கல், சுதர், ஜக்தாப் மற்றும் முனாவர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலை செய்யும் எண்ணம் எங்கிருந்து வந்தது?
ராஜேந்திர யல்லப்பா ஜக்கல் (வயது 25), திலீப் ஞானோபா சுதார் (வயது 21), சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் (வயது 23), முனாவர் ஹாரூன் ஷா (வயது 21) ஆகியோர் நவம்பர் 27, 1983 அன்று எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
ஜோஷி-அபியங்கர் கொலை வழக்கை உள்ளடக்கிய அப்போதைய பத்திரிக்கையாளர்கள் அறிக்கையின்படி, "விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அனைத்து கொலைகளின் பின்னணியில் உள்ள மர்மமும் படிப்படியாக அவிழ்ந்தது.
கொலை நடந்து கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு பிரகாஷ் ஹெக்டேவின் உடல் மீட்கப்பட்டது. நான்கு பேரில், சதித்திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் ஜக்கல் எனத் தெரியவந்தது. மற்றவர்கள் அனைவரும் அவனுக்கு கட்டுப்பட்டவர்கள்.
கோர்ட்டில் சாட்சியம் அளிக்கும்போதுகூட ஜக்கல் கொலையாளி போலவே காட்சியளித்தார். போலிஸுடன் சண்டையிடுவதும் அவரது வழக்கமாக இருந்தது.
ஜக்கலின் தந்தை, லட்சுமி தெருவில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். நல்ல வசதியான குடும்பமாக இருந்தபோதிலும், ஜக்கல் தனது குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார். அதுவே அவரது மனம் கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று சில பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

மரண தண்டனைக்கு முன் சுயசரிதை
முனாவர் ஷா சிறையில் இருந்தபோது தனது சுயசரிதையை எழுதினார். அது 'ஆம் நான் குற்றவாளி' என்ற பெயரில் வெளியானது. இதனூடாக ஜக்கலின் வக்கிரமான தாக்கத்தில் முனாவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை விளக்கமாக எழுதியுள்ளார். அவர் பிடிபட்டதில் இருந்து, தேவ தர்மத்தை முனாவர் கடைபிடிக்க ஆரம்பித்தார்.
அவர் குர்ஆனை மொழிபெயர்க்க விரும்பினார். அவர் எப்படி அப்பாவி மக்களைக் கொல்ல வந்தார் என்பதை அவரது புத்தகம் கொஞ்சம் வெளிப்படுத்துகிறது. ஜக்கல் பற்றிய அவரது விவரிப்பு ஜக்கல் மனதின் திரிபுநிலை குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது.
'ஒரு முறை காயம்பட்ட கோழி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. அந்த மயான அமைதியை அவன் 'ரசித்து' கொண்டிருந்தான்.'
'ஒருமுறை அவன் தடியின் கூர்மையான அடிப்பாகத்தைக் கொண்டு அவள் தலைக்கு அருகில் அடித்தான். அவள் சத்தமிடுவதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.'
இந்தக் கதைகள் அனைத்தும் ஜக்கல் குறித்து அவனது நண்பர்கள் தெரிவித்தவை.
வெறும் ஆடம்பரத்துக்காக ஈவிரக்கமின்றி கொன்று குவித்த 20 வயது இளைஞர்கள், அதிலும் வக்கிர பாணியைப் பின்பற்றியது ஏன்? இதற்கான விடை இன்னமும் தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












