காவிரி நீர் கிடைக்காததால் திமுகவுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவையும் மீறி,தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விடை தேட உச்சநீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பதிவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததும், கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
காவிரி நீர் விவகாரத்தில் மாநிலத்தில் ஒருமித்த கருத்து இல்லை. தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கிடைத்திருக்க வேண்டிய காவிரி நீரில், 37.9 டிஎம்சி நீர் கிடைக்காத நிலை நிலவியது. சுமார் 5 லட்சம் ஏக்கரில் தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் கிடைக்காவிட்டால் பயிர்கள் கருகும் நிலை உருவாகும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர் . நீர் திறக்கக் கோரி விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரில் 37.97 டி எம் சி நீர் கிடைக்கவில்லை. மேலும் பயிர்களை காப்பாற்ற 24 ஆயிரம் கன அடி நீர் ஆகஸ்ட் மாதத்தில் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறிய 15 ஆயிரம் கன அடி நீரை, காவிரி மேலாண்மை ஆணையம் 10 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது. ஆனால், அந்த 10 ஆயிரம் கன அடி நீர் கூட கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபிணி அணைகளிலிருந்து திறந்து விடப்படவில்லை.
உச்சநீதிமன்ற திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி பிலிகுண்டுலு அணைகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நீர் :
மாதம் டி எம் சி
ஜூன் 9.19
ஜூலை 31.24
ஆகஸ்ட் 45.95
செப்டம்பர் 36.76
அக்டோபர் 20.22
நவம்பர் 13.78
டிசம்பர் 7.35
ஜனவரி 2.76
மொத்தம் 167.25
தமிழ்நாட்டில் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் ஜூன் மாதம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9.19 டி எம் சி காவிரி நீரில் 2.8 டி எம் சி மட்டுமே கிடைத்தது. அடுத்தடுத்த மாதங்களில் உரிய நீர் கிடைக்காததால் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை 37.9 டி எம் சி நீர் பற்றாக்குறையாக உள்ளது. முதலில் குறுவை சாகுபடிக்காக 12 ஆயிரம் கன அடி திறந்து விட்ட தமிழகம், கர்நாடகாவிலிருந்து நீர் வராததால் 10 ஆயிரம் கன அடியாக குறைக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் அதை தமிழகத்துக்கு திறந்து விட மனமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கர்நாடகாவின் நான்கு முக்கிய அணைகளில் 67.4 டி எம் சி நீர் உள்ளது. இந்த அணைகளுக்கான நீர் வரத்து 30 ஆண்டுகால சராசரியில் 51% உள்ளது. இப்படி இருக்கையில், தமிழகத்துக்கு நீர் திறந்து விட வேண்டிய பிலுகுண்டுலு அணையில் நீர் வரத்து 13% மட்டுமே உள்ளது.
கர்நாடகா தன்னிடம் உள்ள அணைகளை எல்லாம் நிரப்பி விட்டு தான் பிலிகுடுலுவுக்கு நீர் திறக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகாவுக்கு விருப்பமில்லை என்பது தெரிகிறது” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை, குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு 24 ஆயிரம் கன அடி நீர் தினமும் திறக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளது தமிழ்நாடு.
மேலும் செப்டம்பர் மாதம் கிடைக்க வேண்டிய 36.76 டி எம் சி நீரை கர்நாடகா தர வேண்டும், ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை கிடைக்க வேண்டிய நீரில் ஏற்பட்ட பற்றாக்குறையான 28.8 டி எம் சி நீரை தர வேண்டும் என்று கூறியுள்ளது.
மாதந்தோறும் கர்நாடகா முறை நீர் வழங்குவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் அரசியல் பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடிலும் கர்நாடகாவிலும் காவிரி விவகாரம் ஒரு அரசியல் பிரச்னையாகவே நிலவி வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய பிறகும், இரு மாநிலங்கள் இடையே, காவிரி விவகாரம் முடிந்தபாடில்லை. இரு மாநிலங்களிலும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் மாநிலத்தை ஆண்ட போதும் இப்பிரச்னை நிலவியது.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
“காங்கிரஸ் மற்றும் திமுக அமர்ந்து பேசக் கூடாதா?”
தமிழ் நாடு அரசு இந்த விவகாரத்தை தீர்க்க, மத்திய அரசின் தலையீட்டை கோரும் நிலையில், ஒரே கூட்டணியில் இருக்கும் திமுகவும் காங்கிரஸ்-ம் ஏன் சுமூகமாக இதை பேசி முடித்துக் கொள்ளக் கூடாது என பாஜக கேள்வி எழுப்புகிறது.
“வாரிசு அரசியல் செய்யும் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பதாலேயே ஒன்றிணைந்துள்ளனர். இந்த ஜோக்கர்கள் தங்கள் பிரச்னைகளையே தீர்த்துக் கொள்ள முடியவில்லை, மக்களின் பிரச்னைகளை தீர்ப்பார்கள் என மக்கள் நம்ப வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்” என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'இந்தியா' கூட்டணியில் இடம் பெறும் முன்பு ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மோசதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. அதே போன்று, காவிரி நீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் நிபந்தனை விதிக்கவில்லை என முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“பெங்களூரூவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரை இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் சந்தித்த போது, இந்த விவகாரம் குறித்து பேசியிருக்க வேண்டும். முதல்வர் அப்படியொரு நிபந்தனை விதித்திருந்தால் இந்நேரம் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்திருக்கும்” எனவும் அவர் கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை: திமுக

பட மூலாதாரம், Getty Images
காவிரி விவாகரம் குறித்து பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை வேண்டும் என கூறுபவர்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“1967 முதல் 1990 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எந்த முடிவுக்கும் வர முடியாததால் தான் காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு நியமித்தது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றம் சென்று சில திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது, நான் ஏன் கர்நாடகாவிடம் போய் பேச வேண்டும். கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை என்ற நிலை இல்லை, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு இல்லை. காவிரி குறித்த வரலாறு தெரிந்தவர்களுக்கு இது புதிதல்ல என்பது தெரியும். காவிரி பிரச்னையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை” என்றார்.
காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் என்ன நடந்தது ?
இந்நிலையில், டெல்லியில், இரண்டு நாட்கள் முன் நடைபெற்ற காவிரி நீர் பங்கீடு குறித்த கூட்டத்திலும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காவிரியிலிருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழகம் கோரியது.
அந்தக் கூட்டத்தில் கர்நாடகாவின் ஒப்புதலோடு காவிரியிலிருந்து 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அடுத்த நாள் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக அதிகாரிகள், கர்நாடக மக்களுக்கு காவிரி நீர் போதவில்லை என்றும் இந்த நிலைமையில் தமிழகத்துக்கு எப்படி நீர் தர முடியும் என தெரிவித்தனர்.
ஆனால், காவிரியில் 85% தண்ணீர் இருப்பதாகவும் அதனால் தமிழகத்துக்கு தாராளமாக நீர் தரலாம் என்றும் தமிழக அதிகாரிகள் கூறினர். ஆனால் கர்நாடகா ஒப்புக் கொள்ளாததால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
“உச்சநீதிமன்றம் செல்வது தான் தீர்வு”
காவிரி மேலாண்மையால் இந்த விவகாரத்தை தீர்க்க முடியாததாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்தாததாலும் தமிழகத்து உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என தமிழ் நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு இது வரை 15.73 டி எம் டி நீர் கிடைத்துள்ளது. மேலும், 37.9 டி எம் சி கிடைக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு கேட்பது 15ஆயிரம் கன அடி, ஆனால் 8 ஆயிரம் கன அடி மட்டுமே திறக்க முடியும், அதுவும் ஆகஸ்ட் 22ம் தேதி தான் கொடுப்போம் என்கிறது கர்நாடகா.
காவிரி மேலாண்மை ஆணையம் தான் இதை தீர்த்து வைக்க வேண்டும். வறட்சிக் காலத்தில் ப்ரோ ரோடா அடிப்படையில் தண்ணீரை பங்கிட்டு கொடுக்க வேண்டும். அதை பங்கிட்டு கொடுப்பதற்கான அதிகாரத்தை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. காவிரிமேலாண்மை தன் வேலையை செய்யவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும்” என்றார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என நினைத்தாலும் முடியாது ஏனென்றால் கர்நாடகத்தின் தேவைகளுக்கே நீர் இல்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதம் முன், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் -ஐ பார்த்து விட்டு இதனை தெரிவித்தார். பெங்களூரூ நகரின் குடிநீர் தேவைகளும் காவிரியை நம்பி இருப்பதால் தண்னீரை திறந்துவிட முடியாது என கூறினார்.
அவர் இப்படி கூறியது தமிழகத்தில் குறுவை சாகுபடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரமாகும். மேலும், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா தராததால், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இரண்டு நாட்களுக்கு முன் மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த போது, நீர் பற்றாக்குறையை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
“போதிய மழை இல்லாததால், காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் நீர் வரத்து குறைவாக உள்ளது. எங்கள் பயிர்களின் நிலையையும் நாங்கள் கருத வேண்டும். எப்போதெல்லாம் கூடுதலாக நீர் இருந்ததோ அப்போது எல்லாம் தமிழகத்துக்கு நீர் கொடுத்துள்ளோம். நீர் பற்றாக்குறையை இரு மாநிலங்களுமே சேர்ந்து தான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்”என்றார்.
“நீதிமன்றம் செல்வதே சரி”
காவிரி விவகாரத்தை பேசி தீர்க்க முடியாது, நீதிமன்றத்துக்கு செல்வது தான் சரியான முடிவு என ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவிக்கிறார்.
“காவிரி நீரை கூடுதலாக வழங்க ஒப்புக் கொண்டால், கர்நாடகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கியை இழக்கும் . அதே போல் நீரை குறைவாக பெறுவதற்கு ஒப்புக் கொண்டால் தமிழகத்தில் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படும். இரு கட்சிகளும் தங்கள் மாநிலத்தின் நலனை முன்னிறுத்தியே பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் கூட நீதிமன்றம் தான் தலையிட வேண்டியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு செல்வது தான் சரி.” என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












