நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உமாங் பாடர்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கும் முக்கியச் சட்டம் ஒன்று, அரசுகளின் வெளிப்படைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தனிநபர்களின் தனிப்பட்ட விவரங்கள் எப்படி பெறப்படுகின்றன, எப்படி நிர்வகிப்படுகின்றன அல்லது எப்படி கையாளப்படுகின்றன என்பது பற்றி கடந்த வாரம் வரை இந்தியாவில் எந்தச் சட்டமும் வரையறுக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டிஜிட்டல் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் சட்டம், இந்த நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது.
ஆனால் தனிநபர்களின் தனியுரிமைக் கொள்கைகளுக்காகப் போராடிவரும் பலர், இந்தச் சட்டத்தின் மூலம் தனிப்பட்ட விவரங்களை மத்திய அரசு கையாள்வதில் பெரும் அதிகாரங்களை அளிக்கும் என கவலை தெரிவிக்கின்றனர்.
இதில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தான். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் அரசிடம் இருந்து ஏராளமான தகவல்களை பொதுமக்கள் பெற்றுவருகின்றனர். 2005-ம் ஆண்டு அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஏராளமான கேள்விகளுக்கான பதில்களை அரசு, அரசுத் துறைகள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளனர்.
ஆனால், தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் பெரும்பாலான தகவல்களை இனிமேல் பொதுமக்கள் பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது.
"ஊழல் உள்ளிட்ட தவறுகளுக்கு எதிராகப் போராடும் நோக்கில் பொதுமக்கள் இதுவரை பெற்றுவந்த தகவல்கள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் தனிப்பட்ட தகவல்களாகவே பார்க்கப்படும்," என்கிறார் மக்களின் தகவல் அறியும் உரிமைக்காகப் போராடிவரும் தேசிய விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த அஞ்சலி பர்த்வாஜ். தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான மதன் லோகுர் இதுபற்றிக் கூறுகையில், தற்போதைய புதிய சட்டம் "தகவல் உரிமைச்சட்டத்தை பெருமளவில் செயலிழக்கச் செய்யும்," என்கிறார்.
ஏற்கெனவே தகவல் அறியும் உரிமைச்சட்டம் இதுவரை மிகச்சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற நிலையில் - வெகு சாதாரண காரணங்களின் அடிப்படையில் இதுவரை ஏராளமான தகவல்கள் மறுக்கப்பட்டுள்ளன- தற்போதைய சட்டம் குறித்து கவலை தெரிவிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், இனிமேல் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எந்த உறுப்படியான தகவலையும் பெறமுடியாது என்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெரும் எண்ணிக்கையிலான அரசு அலுவலகங்கள், அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் இருந்து தகவல்களைப் பெறமுடியும். அரசின் நிதி உதவியின் கீழ் நேரடியாகவோ அல்லது அதன் எல்லைக்குள்ளோ செயல்படும் அலுவலகங்களில் இருந்து கூட தகவல்களைப் பெறும் உரிமையை இச்சட்டம் பொதுமக்களுக்கு அளிக்கிறது.
தேசிய பாதுகாப்பு போன்ற தகவல்களைத் தவிர அரசின் பிற அனைத்துத் தகவல்களும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் போது தெரிவிக்கப்படவேண்டும் என்றே அச்சட்டம் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சட்டத்தின் ஒரு விதி என்ன சொல்கிறது என்றால், ஒருவரால் அரசு அலுவலகங்களில் கேட்கப்படும் தகவல், ஒரு நபரின் தனிப்பட்ட விவகாரம் தொடர்பானது என்றாலோ, பொதுச் செயல்பாட்டுக்கும் அந்தத் தனிப்பட்ட விவகாரத்திற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லாதபோது அதை வழங்கமுடியாது என்பதுடன், எந்த ஒருவரின் தனியுரிமைக்குள் தேவையின்றி நுழைவதைத் தடுக்கிறது. மேலும், அது போன்ற தகவல்கள் பெரிய அளவில் பொது நன்மைக்காகத் தேவைப்பட்டால் அன்றி, அந்தத் தகவலை வெளியிடமுடியாது என்றும் கூறுகிறது.
2012ம் ஆண்டு நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், எந்த ஒரு நபரின் தனியுரிமைக்குள்ளும் யாரும் நுழையக்கூடாது என்று கூறியது.
புதிய சட்டத்தின் மூலம் என்ன மாற்றம் வரும்?
புதிய தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் இந்த ஷரத்தைப் பாதிக்கிறது. அது குறிப்பாக, தனிநபர் தொடர்புடைய எந்தத் தகவலையும் யாருக்கும் அளிக்கக்கூடாது எனக்கூறுகிறது. இதனால், தனிநபர் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன என்றாலே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில் பெறமுடியாத நிலை ஏற்படும்.
"ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் அலுவலக ரீதியிலான நடவடிக்கைகளுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இருக்கக்கூடாது என முன்பு இருந்தது," என்கிறார் முன்னாள் மத்திய தகவல் ஆணையர் ஷைலேஸ் காந்தி. இவர் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழும் புகார்களின் மீது முடிவெடுக்ககூடியவதாக இருந்தார்.
ஆனால், வேறு சில காரணங்களுக்காகத் தெரிவிக்கப்படும் அது போன்ற தகவல்களை தனி மனிதர்களுக்கும் அளிக்கும் விதத்தில் இருக்கவேண்டும் என்கிறார் காந்தி.
ஆனால் இப்போது தனிநபர் குறித்த தகவல்களை அளிக்கவே முடியாத அளவுக்கு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது தான் பிரச்னை என்கிறார் காந்தி. "நீங்கள் எந்த ஒரு தகவலையும் தனியுரிமையுடம் தொடர்புபடுத்தமுடியும்."
தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்படாமல் ஏதாவது ஒரு அரசு அலுவலர் செயல்பட்டால் 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தனி நபர்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும் அதிகாரிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.
"குறைவான ஒரு தொகையை அபராதமாக விதித்தாலும், தகவல் அளிக்கும் அதிகாரி எதற்கு அபராதம் கட்டுமளவுக்குச் செயல்படப்போகிறார்?" என்று கேட்கிறார் காந்தி.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது குறித்துப் பேசிய போது, 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்தப் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்கள் சட்டத்துக்கு உட்பட்டு, சரியான தகவல்களை மட்டும் தேவைக்கு ஏற்ப அளிக்கலாம் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், அதே அடிப்படையில் இப்போதும் தகவல்கள் அளிக்கப்படும் என்பதால் அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் விளைவாக என்ன நடக்கும்?
அடிப்படை உரிமைகளைப் பெறும் வகையிலும், ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையிலும் இதுவரை பெற்று வந்த தகவல்களை இனிமேல் பெற முடியாது என செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"உதாரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, ஒருவருக்கு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கவேண்டிய பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படும்போது, அங்கே ஊழல் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக, குறிப்பிட்ட நாளில் விற்பனையாளராக யார் இருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியாது," என பர்த்வாஜ் கூறுகிறார். அரசு வழங்கும் பொருட்கள் மக்களுக்குச் சரியாகச் சென்றடைகின்றனவா அல்லது திருடப்படுகின்றனவா என்பதைக் கூட இனிமேல் தெரிந்துகொள்ளமுடியாது என்கிறார் அவர்.
இதே போல், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை ஒரு கல்வி நிறுவனம் அனுமதிக்கத் தயாராக இல்லாத போது, அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டனவா, யாருக்கெல்லாம் இடங்கள் அளிக்கப்பட்டன என்பதைக் கூட அறிந்துகொள்ளமுடியாது என்கிறார் அவர்.
இந்தத் தகவல்களை நாம் பெறமுடியாத போது, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போதுமான வெளிப்படைத்தன்மையை நாம் எதிர்பார்க்க முடியாது," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், அவர் தமது பதவிக்காலத்தில், அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட சம்பவத்தை நினைவுகூர்கிறார். "அந்தச் சான்றிதழ்களைப் பெற்று சரிபார்த்தபோது, பல மருத்துவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்தது," என்று காந்தி கூறுகிறார்.
புதிய சட்டத்தின் காரணமாக, இது போன்ற தகவல்களை, அவற்றில் தனிநபர்களின் தனிப்பட்ட விவரங்கள் இருப்பதால், அவற்றைப் பெறமுடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போதும் கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு, தனியுரிமையைக் காரணம் காட்டி தகவல்கள் மறுக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இது போன்ற மறுப்புக்கள் இனிமேல் அதிகரிக்கும் என அவர் கருதுகிறார்.
விதிவிலக்குகள் எவையாவது உள்ளனவா?
புதிய சட்டத்தின் வருகைக்குப் பின்னரும் கூட, தனியுரிமையின் கீழ் அளிக்கப்படமுடியாத தகவல்களை அளிக்கும் கட்டாயத் தேவை ஏற்படும் போது அவற்றைக் கேட்பவருக்கு அளிக்கவேண்டும் என்ற நடைமுறைக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால், சாதாரண நேரத்தில் இது போன்ற தகவல்களைப் பெறுவதில் சிக்கல்கள் எழலாம்.
ஆனால், இது போன்ற நிலைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும்.
"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஒரு தகவல் தேவைப்பட்டால், அவருக்கு அந்த தகவல் ஏன் தேவைப்படுகிறது என்பதைத் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நான் ஒரு கேள்வியைக் கேட்டால், அதில் கேட்கப்படும் தகவல்கள் பொதுநலத்திற்கானவை என்பதை நிரூபிக்கும் தேவையும் எனக்கு எழுந்துள்ளது. இது என்மீது திணிக்கப்படும் இன்னொரு சுமை," என்கிறார் பர்த்வாஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












