ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டதற்கு மழை மட்டுமே காரணமா?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், மழையைக் காரணம் காட்டி தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உண்மையில் மழை மட்டும்தான் காரணமா?
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்தத் தேநீர் விருந்துகள் மாநிலத்தின் அந்த நேர அரசியல் நிலவரத்தை பிரதிபலிப்பதாகவும் பல தருணங்களில் அமைந்துவிடும். இந்த ஆண்டு அப்படியான ஒரு தருணமாக மாறியிருக்கிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி நடக்கவிருந்த தேநீர் விருந்து, ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "கிண்டியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால், ஆளுநர் மாளிகையின் புல்வெளியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதியும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கனமழையால் விருந்தினர்களுக்கு அசௌகர்யம் ஏற்படக்கூடாது என்பதால், At Home நிகழ்ச்சி வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அந்தத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், TWITTER/@rajbhavan_tn
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருவது உண்மைதான். வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள பகுதியில் 8 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, "சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில்தான் தேநீர் விருந்தை ரத்துசெய்ய மழை மட்டுமே காரணமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களில் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது, இப்படி ஒரு கேள்விக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
ஆளுநரின் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுடனான சந்திப்பில் ஏற்பட்ட குழப்பம்

பட மூலாதாரம், TWITTER/@rajbhavan_tn
இந்த நிகழ்வுகளுக்கான துவக்கப் புள்ளி ஆளுநர் மாளிகைதான். ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் நடத்திவரும் ‘தின்க் டூ டேர்’ (Think to Dare) என்ற தொடரின் ஒரு பகுதியாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என ஆளுநர் கூறினார். மாணவர்கள் யாரும் கேள்வி கேட்க முன்வராத நிலையில், சேலத்தை சேர்ந்த அம்மாசையப்பன் “நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள் ?” என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆளுநர், ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன் என்றார். திரும்பத் திரும்ப அம்மாசையப்பன் கேள்வி கேட்க முயன்றபோது, அவரிடமிருந்த மைக் திரும்பப் பெறப்பட்டது.
இதற்கு அடுத்த நாளே, நீட் தேர்வு மூலம் மருத்துவ இடம் கிடைக்காததால் சென்னையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த நாள் அந்த மாணவரின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ஆளுநரைக் கடுமையாகச் சாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தார்.
ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணிப்பு

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை மிகக் கடுமையான வாசகங்களைக் கொண்டிருந்தது. "ஆளுநர் அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், தி.மு.க., திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல.
பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் - இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவுசெய்துள்ளோம்" என்று அந்த அறிக்கை கூறியது.
இதற்குப் பிறகு தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் சிலவும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்த நிலையில்தான், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை புல்வெளியில் தேங்கிய மழைநீர்- தேநீர் விருந்து ரத்து

"ஆளுநர் மாளிகையின் புல்வெளியில் தண்ணீர் தேங்கியிருந்தால் அரசு நினைத்தால் அரை மணி நேரத்தில் அகற்றிவிட முடியாதா? எப்படியும் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றப் போகிறார். மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றப் போகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் கொடி ஏற்றப் போகிறார்கள். இந்த நிலையில், மழையைக் காரணம் காட்டி தேநீர் விருந்தை ஒத்திவைப்பதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்களால் எழுந்த நெருக்கடியே இதற்குக் காரணமாக இருக்க முடியும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை ஒரு தரப்பு புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடந்தபோது, அதைப் புறக்கணிப்பதாக தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவித்தன.
2018ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்தளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொண்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிகழ்வைப் புறக்கணித்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில், நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த புறக்கணிப்பு செய்யப்பட்டது. அதேநேரம், அந்தத் தேநீர் விருந்தில், தலைமை நீதிபதி தஹில் ரமானி கலந்து கொண்டார்.
அதேபோல தேநீர் விருந்துகள் ஒத்திவைப்பதும் இதற்கு முன்பாக நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு குடியரசுத் தினத்தை ஒட்டி நடக்கவிருந்த தேநீர் விருந்து, கொரோனா நோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேநீர் விருந்துதான் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு, அதனை ஆளும் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.
அதற்கடுத்துவந்த சுதந்திர தின தேநீர் விருந்தில் ஆளும் கட்சி பங்கேற்றது. ஆனால், அதற்குப் பிறகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்தன.
குறிப்பாக, சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, 'தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்' என்று கூறியது பெரும் புயலைக் கிளப்பியது. மேலும், இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டு வாசித்ததும் அதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானமும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்ததும் இந்த மோதலை உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் முதலமைச்சரோ, அமைச்சரோ, தி.மு.கவின் கூட்டணி கட்சியினரோ கலந்துகொள்ளவில்லை. ஆகவே, 2023ஆம் ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி நடக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வாரா எனக் கேள்வி எழுந்தது.
ஆளும் கட்சி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே கூட்டணிக் கட்சியினர் அந்தத் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், தி.மு.க. தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக ஆளுநர் விளக்கமளித்ததாலும் தொலைபேசி மூலம் ஆளுநரே முதலமைச்சரை அழைத்ததாலும் இந்த விருந்தில் முதலமைச்சர் தரப்பு கலந்துகொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்குப் பிறகும் மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது நீட் விவகாரத்தை முன்வைத்து தேநீர் விருந்தைப் புறக்கணித்திருக்கிறது ஆளும்கட்சி.
"ஆளுநரைப் பொறுத்தவரை இது மோசமான முடிவு. அவர் தேநீர் விருந்தை நடத்தியிருக்க வேண்டும். இப்போது அவருக்குத்தான் பலவீனமான தோற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் குபேந்திரன்.
இதற்கு முன்பாக, 2006ஆம் ஆண்டில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அளித்த தேநீர் விருந்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் புறக்கணித்தனர். அதேபோல 1994-95ஆம் ஆண்டுகளில் ஆளுநர் சென்னாரெட்டி அளித்த தேநீர் விருந்துகளை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












