நீட் தேர்வு: சென்னையில் மகன் - தந்தை இருவரையும் தற்கொலைக்கு தள்ளியது எது? கள ஆய்வு

தந்தை-மகன் தற்கொலை ஏன்?
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், முதல் முறையாக அப்படி இறந்த மாணவனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாநிலத்தை அதிர வைத்திருக்கிறது.

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் புகைப்படக் கலைஞரான செல்வசேகரின் நண்பர்கள் திகைத்துப்போய் கண்ணீருடன் நிற்கிறார்கள். சனிக்கிழமையன்று நண்பரின் மகன் தற்கொலை செய்துகொண்டபோது, அதிர்ந்துபோய் செல்வசேகருக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள் இப்போது யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

காரணம், ஒரு குடும்பமே அழிந்துபோய்விட்டது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த செல்வசேகர், தன் ஒரே மகனே உலகமென்று வாழ்ந்துவந்தார். இவரது மகன் ஜெகதீஸ்வரன் பல்லாவரத்தில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்பை முடித்தார். 12ஆம் வகுப்பில் 424 மதிப்பெண்களையும் பெற்றார்.

மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் எழுதியும் அரசுக் கல்லூரியில் சேரும் அளவுக்கு அவரால் மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை. இது தந்தைக்கும் மகனுக்கும் பெரும் வருத்ததை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் தேர்வை எழுத, நீட் பயிற்சி மையத்தில் சேர்வதற்கு பணம் கட்டியிருந்தனர்.

இந்த நிலையில்தான், அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார் ஜெகதீஸ்வரன். இது தந்தை செல்வசேகருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தந்தை-மகன் தற்கொலை ஏன்?

ஞாயிற்றுக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய அவர், நீட் தீர்வை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். "நீட்டை ஒழித்தால்தான் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறினார். அதை அவர் செய்ய வேண்டும். நான் தனியாக என் மகனை வளர்த்தேன். என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது" என்றார்.

நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். அவருடைய தங்கை வீட்டினர் உடனிருந்தனர். இந்த நிலையில், திங்கட்கிழமையன்று அதிகாலை, வீட்டில் யாருமில்லாத அறைக்குள் சென்ற செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டார். இனி தனக்கு யாருமே இல்லை என்ற தனிமை உணர்வே அவரை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் செல்வசேகரின் நண்பர்கள்.

தந்தை-மகன் தற்கொலை ஏன்?

ஜெகதீஸ்வரனுக்கும் அவனுடைய நண்பர்கள் பலருக்கும் மருத்துவம் படிக்க வேண்டுமென்பது பெரும் கனவாக இருந்தது வந்தது. இவர்கள் அனைவருமே 12ஆம் வகுப்பை முடித்த பிறகு, தனியார் நீட் கோச்சிங் மையத்தில் சேர்ந்து படித்துவந்தனர். கடந்த இரண்டு வருடங்களிலும் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தாலும், அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் அளவுக்கு அவருக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை.

தன்னுடைய தந்தையால், தன்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியாது என்பதும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாது என்பதும் ஜெகதீஸ்வரனுக்குத் தெரிந்தே இருந்தது.

ஆகவே மீண்டும் முயற்சிக்க முடிவுசெய்து, மறுபடியும் கோச்சிங் மையத்திற்குப் பணம் கட்டினார் ஜெகதீஸ்வரன். இதற்கிடையில் அவருடன் படித்து அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மேலும் இரு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக் கனவைக் கைவிட்டுவிட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். இதனால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்திருக்கக் கூடும் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

மருத்துவராக மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதே ஜெகதீஸ்வரனின் ஆசையாக இருந்தது என்றும், தோல்வியடைந்த மற்றவர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்துவந்ததாகவும் கூறுகிறார் அவருடைய நண்பர் சந்தோஷ்.

"தோல்வியடைந்த எல்லோருக்கும் அவன் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். வேறு எந்த முடிவும் எடுத்துவிடாதே, மீண்டும் முயற்சிப்போம் என்று சொல்லிக்கொண்டிருந்தான்" என்கிறார் சந்தோஷ்.

ஜெகதீஸ்வரன் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர் என்றாலும், அவரால் அரசுக் கல்லூரிகளில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெற முடியவில்லை என்பதே இந்த மரணத்திற்குக் காரணம் என்கிறார் அவருடைய நண்பரான ஆதித்யா.

தந்தை-மகன் தற்கொலை ஏன்?

மருத்துவராக வேண்டுமென்பது ஜெகதீஸாகவே உருவாக்கிக்கொண்ட கனவு என்கிறார் ஜெகதீஸின் வீட்டிற்கு அருகில் வசிப்பவரும் ஆசிரியையுமான வளர்மதி. "ஜெகதீஸ் மருத்துவம் படிக்க வேண்டுமென அவனுடைய அப்பாவோ வேறு யாருமோ எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. அவன் ஏன் இந்த முடிவை எடுத்தான் எனத் தெரியவில்லை" என்கிறார் வளர்மதி.

பல உயிர்களைக் காக்க வேண்டுமென உருவான ஒரு மருத்துவக் கனவு, இரு உயிர்களை பலிவாங்கியதோடு முடிவுக்குவந்துவிட்டது.

தற்கொலை தீர்வல்ல

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: