தெளிவில்லாத பிறப்புறுப்பு கொண்ட சிறுவனின் பெற்றோருக்கு நீதிமன்றம் கூறியது என்ன?

குழந்தைகளின் பாலினத்தை பெற்றோர் தீர்மானிக்க முடியுமா ? கேரள நீதிமன்றம் சொன்னது என்ன ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைக்கு 46XX குரோமோசோம்கள் உள்ளது. இந்த குரோமோசோம்கள் பெண்ணுடையது.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தெளிவில்லாத பிறப்புறுப்புடன் பிறக்கும் குழந்தையின் பாலினத்தை பெற்றோர்கள் தீர்மானிக்க முடியுா? சமூகப் புறக்கணிப்பால் கவலைப்பட்ட ஏழு வயதுச் சிறுவனின் பெற்றோர், தனது குழந்தைக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியபோது, இந்தக் கேள்வி தான் கேரள உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.

குழந்தையின் பிறப்புறுப்பு முழுமையாக வளர்ச்சியடையாமல் பிறந்தபோதிலிருந்து ஒரு விதமான மருத்துவ பாதிப்புடன் இருந்தது. குழந்தையின் பெண் பிறப்புறுப்பின் அளவு பெரியதாகவும், அது ஆண் பிறப்புறுப்பைப் போன்றும் இருந்துள்ளது.

ஆனால் குழந்தைக்கு கருப்பையும் இருந்துள்ளது. சிறுநீர் மற்றும் யோனி குழாயும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இந்த குழாயிலிருந்து ஒரு குறுகிய பொதுவான குழாய் உள்ளது, அது பிரிந்து தனித்தனியாக கருப்பை மற்றும் சிறுநீர்ப்பைக்கு செல்கிறது. குழந்தைக்கு 46XX குரோமோசோம்கள் உள்ளது. இந்த குரோமோசோம்கள் பெண்ணுடையது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு மருத்துவ நிலை. "கான்ஜெனிடல் அட்ரீனல் ஹைப்பர்பிளாக்ஸியா” (Congenital adrenal hyperplaxia) என்று அழைக்கப்படும் ஒரு மருத்துவ நிலை. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 10 லட்சம் பேருக்கு ஏற்படும் பாலியல் உறுப்பு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்னை.

பாலின மாற்று அறுவை சிகிச்சை: தெளிவான சட்டம் இல்லை

பாலினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிறப்புறுப்பு மறுசீரமைப்பு மூலம் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் இந்தியாவில் இன்னும் தெளிவாக இல்லை என்கிறார் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் (Amicus Curiae) இந்துலேகா ஜோசப்

இந்த வழக்கு குறித்து பிபிசியிடம் பேசிய பெற்றோரின் வழக்கறிஞர் டிபி சஜித், குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்ய குழந்தையின் பெற்றோர்கள் விரும்பியதாகக் கூறினார்.

“ஆனால், திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மருத்துவர்களும் பிறப்புறுப்பை மறுசீரமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் மட்டுமே செய்வோம் என்று உறுதியாகக் கூறினர். சமூக புறக்கணிப்பைப் பற்றி குழந்தைகளின் பெற்றோர்கள் கவலைப்பட்டதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்,”என்றார் வழக்கறிஞர் டிபி சஜித்.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், “ஒப்புதல் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரப்படுகிறது. குழந்தையின் குரோமோசோம் Karyotype-46XX என்ற மருத்துவ அறிக்கை மட்டும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க போதுமானது இல்லை. ஏனெனில் Karyotype-46XX குரோமோசோம் குழந்தை வளர்ந்த பின், ஆண்களைப் போன்ற போக்குகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. அந்த வாய்ப்பை நிராகரிக்க முடியாது,” என்றார்.

மேலும், இது குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் (Amicus Curiae) இந்துலேகா ஜோசப் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “பிறப்புறுப்பு மறுசீரமைப்பு மூலம் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் இந்தியாவில் இன்னும் தெளிவாக இல்லை.இதற்கு முன்னதாக ஒரு முறை, ‘பெற்றோரின் சம்மதத்தை குழந்தைகளின் சம்மதமாக கருத முடியாது’ என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,” என குறிப்பிட்டார்.

‘செக்ஸ்’ மற்றும் பாலினம் இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை

‘செக்ஸ்’ மற்றும் பாலினம் இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14,19 மற்றும் 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு இடையூறாக அமையும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் தனது உத்தரவில், “சாதாரண உரையாடலில் ‘செக்ஸ்’ மற்றும் பாலினம் ஆகிய சொற்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், உண்மையில், அவை இரண்டும் மனித அடையாளம் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டு வேறுபட்ட கருத்துகள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

"செக்ஸ் என்பது ஒரு நபரின் உயிரியல் பண்புகளைக் குறிக்கிறது, குறிப்பாக அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் குரோமோசோமின் கலவை தொடர்பானது. அதேவேளையில், பாலினம் என்பது ஒருவரின் குணாதிசியங்கள், பண்புகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் அடையாளங்களை உள்ளடக்கிய ஒரு சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பாகும்,' என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி அருண்.'

மேலும், "ஹெர்மாஃப்ரோடைட் (hermaphrodite) உண்மையில் இரு பாலினங்களையும் உள்ளடக்கியது, அவை பாலியல் வேறுபாடுகள் பற்றிய பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு சவால் விடுகின்றன. சில சமயங்களில் ஒரு பாலினமாகவும் சில சமயங்களில் மற்றொரு பாலினமாகவும் வாழும் எரிச்சலூட்டும் திறனைக் கொண்டுள்ளன", என ஒரு ஆய்வுக்கட்டுரையிலிருந்து தனது உத்தரவில் மேற்கோள் காட்டியுள்ளார் நீதிபதி அருண்.

மேலும் தனது உத்தரவில், "முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் கோரப்பட்ட நிவாரணத்தின் அடிப்படையில், குழந்தையின் ஒப்புதல் இன்றி, அந்தக் குழந்தை அறியாமையில் இருக்கும்போது, ஒரு குழந்தையின் பாலினத்தை மாற்றுவதற்கு பெற்றோர்களுக்கு உரிமை உள்ளதா என்ற கேள்வி தான் இந்த நீதிமன்றத்தின் முன் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

“பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14,19 மற்றும் 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு இடையூறாக அமையும், அனுமதியின்றி அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறும்.

“அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் பாலினம் மாற்றப்பட்டால், குழந்தை தனது இளமைப் பருவத்தை அடைந்ததும், எதிர் பாலினம் சார்ந்த உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டால், அது கடுமையான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம்” என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் விதிகளைப் மேற்கோள் காட்டிய நீதிபதி அருண், “பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, சம்பந்தப்பட்ட தனிநபருக்கு மட்டுமே உள்ளது, வேறு யாருக்கும் இல்லை, நீதிமன்றத்திற்கு கூட இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலம் மற்றும் மனநல பிரச்சினைகள்

உடல்நலம் மற்றும் மனநல பிரச்சினைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய என்ன நடைமுறை என்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் கேரள அரசு ஆணை வெளியிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நலம் மற்றும் மனநல பிரச்சனைகள் குறித்து பேசிய இந்துலேகா ஜோசப், “ஒரே குழாய் உள்ள காரணத்தால் மருத்துவ சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறுநீரகத் தொற்று, சிறுநீர் குழாயில் நோய்த்தொற்றுகள் போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளது.

குழந்தையின் இளம் பருவத்தில் இவை கூடுதல் சிக்கலாக இருக்கும். ஆனால், இவற்றுக்கு எல்லாம் பதில், பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை இல்லை. இதனால், குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார்.’

குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் இந்த நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது பெற்றோருக்கும் குழந்தைக்கும் பெரும் அழுத்தம் ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்ளும் இந்துலேகா, " குழந்தை வளரும்போது மாற்று பாலியல் உணர்ச்சியால் ஏற்படும் மன அழுத்தத்தை விட சமூக அழுத்தங்களை எதிர்த்துப் போராடுவது எளிமையானது," என்றார்.

பெற்றோர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான பல்துறைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ஒரு குழந்தை மருத்துவர், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் குழந்தை மனநல மருத்துவர், குழந்தை உளவியலாளர் ஆகியோர் அடங்குவர்.

இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் குழந்தையைப் பரிசோதித்து, தெளிவற்ற பிறப்புறுப்பின் காரணமாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக என்பதை கூற வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கலாம் என தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய என்ன நடைமுறை என்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் கேரள அரசு ஆணை வெளியிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அதற்குள், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என்ற மாநில அளவிலான பல்துறைக் குழு தெரிவித்தால், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்,” என்றார்.

பாதிக்கப்பட்ட குழந்தையைத் தவிர, மனுதாரர் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: