இந்திய நீதிச் சட்ட மசோதா: பெண் வன்கொடுமைக்கு என்ன தண்டனை? மண வாழ்க்கையில் கட்டாய உறவு குற்றமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
எந்தச் செயல், எப்போது குற்றமாக மாறும், அதற்கான தண்டனை என்ன?
இது தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முடிவு செய்யப்படுகிறது. 500 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வெவ்வேறு குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
160 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. சில நீக்கப்படுகின்றன. ஆனால் அதன் வடிவம் மாற்றப்படவில்லை.
இப்போது இந்திய அரசு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சி சட்டம் (எவிடன்ஸ் சட்டம்) ஆகியவற்றுக்கு பதிலாக மூன்று புதிய சட்டங்களின் வரைவை உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவற்றின் பெயர்கள் – இந்திய நீதி சட்டம் 2023, இந்திய குடிமைத் தற்காப்புச்சட்டம் 2023 மற்றும் இந்திய ஆதாரங்கள் மசோதா 2023.
இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற நடைமுறைகளை விரைவில் முடித்துவிட்டு சட்ட வடிவம் பெறும் என்று நம்பப்படுகிறது.
மசோதாவை தாக்கல் செய்த அமித் ஷா, " நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு, 1860 முதல் 2023 வரை ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து இயங்கியது. அதற்கு பதிலாக இந்திய ஆன்மாவுடன் இந்த மூன்று சட்டங்கள் நிறுவப்படும். எங்கள் குற்றவியல் நீதி அமைப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கும்." என்று குறிப்பிட்டார்.
பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க இந்திய நீதித்துறை சட்டத்தில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
இந்தக் குற்றங்களைத் தடுப்பதில் ஐபிசியுடன் ஒப்பிடுகையில் இந்திய நீதிச் சட்டம் 2023 மசோதா எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பட மூலாதாரம், Getty Images
அடையாளத்தை மறைத்து திருமணம் செய்தால் தண்டனை
திருமணம், வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு போன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஒரு பெண்ணுடன் ஒருவர் உடலுறவு கொண்டால், முன்மொழியப்பட்ட சட்டத்தின் 69வது பிரிவின்படி அவர் தண்டிக்கப்படுவார்.
இந்த தண்டனை பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒருவர் தனது அடையாளத்தை மறைத்து திருமணம் செய்தால், இந்த பிரிவின் கீழ், அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இருப்பினும் இந்த பிரிவின் கீழ் வரும் வழக்குகள், பாலியல் வன்புணர்வு வகைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.
ஐபிசி யில் திருமணம் என்ற பொய் வாக்குறுதியின் பேரில் உடலுறவு கொள்வது, வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்தல் மற்றும் அடையாளத்தை மறைத்து திருமணம் செய்வது போன்றவற்றுக்கு தெளிவான விதிகள் எதுவும் இல்லை.
அத்தகைய வழக்குகள் IPC இன் பிரிவு 90 இன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன, பொய்யின் அடிப்படையில் பெறப்பட்ட ஒப்புதல் தவறு என்று கருதப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஐபிசி பிரிவு 375 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப் பிரிவு பாலியல் வன்புணர்வு போன்ற குற்றத்தை வரையறுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் வன்புணர்வு வழக்குகள்
ஐபிசி இன் பிரிவு 376 இன் கீழ் பாலியல் வன்புணர்வு தண்டனைக்குரிய குற்றம். பத்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்படலாம்.
காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர், ராணுவ வீரர், பெண்ணின் உறவினர், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற ஒருவர் குற்றம் செய்தால் அல்லது பெண்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் குற்றம் நடந்தால் தண்டனை மேலும் கடுமையாகும்.
அத்தகைய சூழ்நிலையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட சட்டம் பிரிவு 64, இந்தக் குற்றங்களுக்கான தண்டனையை பரிந்துரைக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
16 வயதுக்குட்பட்ட சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு
ஐபிசி பிரிவு 376 DA இன் கீழ், குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்படலாம். இங்கு ஆயுள் தண்டனை என்பது தண்டனை பெற்றவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட சட்டம் - மாற்றம் இல்லை

பட மூலாதாரம், Getty Images
12 வயதுக்குட்பட்ட சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு
ஐபிசி பிரிவு 376AB யின் கீழ், குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்படலாம். கூடவே மரண தண்டனை வழங்கவும் வழிவகை உள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டம்- பிரிவு 65(2) தண்டனைகளை விவரிக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வயது வராத சிறுமியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை
ஐபிசி பிரிவு 376D இன் கீழ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். அதாவது குற்றவாளி தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும். கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் வயது 12 க்கும் குறைவாக இருந்தால்தான் மரண தண்டனை விதிக்க வழிவகை உள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டம் பிரிவு 70(2)ன் கீழ், கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. சிறுமியின் வயது 18 வயதுக்கு குறைவாக இருந்தால் குற்றவாளிக்கு மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.
திருமண உறவில் பாலியல் வன்புணர்வு விதி என்ன?
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375, பாலியல் வன்கொடுமையை வரையறுத்து அதை குற்றமாக்குகிறது. ஆனால் இந்த பிரிவின் விதிவிலக்கு 2 ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்கள் நிலுவையில் உள்ளன.
ஐபிசி பிரிவு 375 இன் விதிவிலக்கு 2 என்ன கூறுகிறது என்றால், திருமண உறவில் ஒரு ஆண் தனது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன், அவருடைய சம்மதமின்றி உடலுறவு கொண்டாலும், அது பாலியல் வன்புணர்வு ஆகாது. ஆனால் 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெண்ணின் வயதை 18 ஆக மாற்றியது.
நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கிற்குப் பிறகு நீதிபதி வர்மா கமிட்டியும் திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கான தனிச்சட்டத்தை கோரியது. திருமணத்திற்குப் பிறகு உடலுறவில் சம்மதம் அல்லது சம்மதமின்மை வரையறுக்கப்பட வேண்டும் என்பது அவரது வாதம்.
முன்மொழியப்பட்ட சட்டம் - எந்த மாற்றமும் இல்லை. திருமண உறவில் பாலியல் வன்புணர்வு போன்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் துன்புறுத்தல்
ஐபிசி இன் பிரிவு 354 இல் பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டில், 'குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம், 2013' க்குப் பிறகு, இந்த பிரிவில் நான்கு உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டன, இதில் வெவ்வேறு குற்றங்களுக்கு வெவ்வேறு தண்டனைகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஐபிசி பிரிவு 354A-ன் கீழ் ஒரு நபர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நோக்கத்துடன் உடலை தொட்டால், பாலியல் உறவு நோக்கத்துடன் நடந்து கொண்டால், பாலியல் ரீதியாக கைமாறு கேட்டால் மற்றும் அவளது விருப்பத்திற்கு மாறாக ஆபாச படங்களைக்காட்டினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பாலியல் நோக்கத்துடன் கருத்து வெளியிட்டால் ஒரு ஆண்டு வரை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
354B- ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழற்றினால் அல்லது அவ்வாறு செய்ய முயன்றால், மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வழிவகை உள்ளது.
354C- ஒரு பெண்ணின் அந்தரங்க செயல்களைப் பார்ப்பது, படம் எடுப்பது மற்றும் அதை வெளியிடுவது குற்றமாகும். இதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். ஒருவர் இதே குற்றத்தை மீண்டும் செய்தால், அபராதத்துடன் கூடவே மூன்றில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அதிகரிக்கப்படலாம்.
முன்மொழியப்பட்ட சட்டம்- இந்த குற்றங்கள் பிரிவுகள் 74 முதல் 76 வரை வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பின்தொடர்வதற்கு என்ன தண்டனை?
ஒரு ஆண் ஒரு பெண்ணை பின்தொடர்ந்தால், அந்தப் பெண் மறுக்கும்போதிலும் அவளிடம் பேச முயற்சி செய்தால், ஒரு பெண்ணின் இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அல்லது வேறு ஏதேனும் மின்னணு தொடர்புகளை கண்காணித்தால், அது குற்றமாகும்.
முதல் முறை குற்றம் இழைப்பவருக்கு ஐபிசி பிரிவு 354D-ன் கீழ் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம். இரண்டாவது முறை குற்றம் செய்தால் அபராதத்துடன் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம்.
முன்மொழியப்பட்ட சட்டம்- பிரிவு 77 இன் படி, இந்த குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் தண்டனை வழங்குவது ஐபிசி யை போலவே உள்ளது. அதாவது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முறைகேடான நடத்தை
ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் ஒருவர் ஏதாவது சொன்னால், ஒலி எழுப்பினால், சைகை செய்தால் அல்லது ஏதாவது ஒரு பொருளை காட்டினால் அது குற்றமாக கருதப்படுகிறது.
ஐபிசி பிரிவு 509-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார். அது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
முன்மொழியப்பட்ட சட்டம் - எந்த மாற்றமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
வரதட்சணை கொலை
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் தீக்காயம், உடல் காயம் அல்லது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு பெண் இறந்தால், இறப்பதற்கு முன் கணவன், கணவனின் உறவினர்களால் அவள் துன்புறுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவளது இறப்பு 'வரதட்சணை கொலை’ யாக கருதப்படும்.
ஐபிசி- பிரிவு 304B, ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையை வழங்க வகை செய்கிறது. ஆனால் இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.
முன்மொழியப்பட்ட சட்டம்- பிரிவு 79 இல் வரதட்சணை கொலை என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












