பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: மணிப்பூர் வன்முறை குறித்து என்ன பேசினார்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் 77 ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்.
இந்தியாவின் பிரதமராக பத்தாவது முறையாக சுதந்திர தின உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோதி.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி சுதந்திர தின உரை என்பதால் அவரது உரை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
பிரதமர் மோதி ஆற்றிய உரையின் முக்கியமான 10 அம்சங்கள்
- மணிப்பூர் மக்களுடன் நாடு துணை நிற்கிறது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய மாநில அரசுகள் மணிப்பூர் பிரச்னையில் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன, இனியும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படும்.
- வரும் ஐந்து ஆண்டுகளில், இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இருக்கும். இது மோடியின் காரண்டி. சர்வதேச நிபுணர்கள் இந்தியாவை நிறுத்த முடியாது என்கிறார்கள், தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் இந்தியாவை பாராட்டுகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு பின் புதிய உலக நடைமுறை வந்தது போல, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு புதிய உலக நடைமுறை வந்துள்ளதை காண முடிகிறது.
- பெரும்பாலும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் முடி திருத்துபவர்கள், சலவை தொழிலாளிகள், பொற்கொல்லர் போன்றோருக்கு ‘ விஷ்வகர்மா யோஜனா’ எனும் திட்டத்தை ரூ.13 ஆயிரம்-ரூ.15 ஆயிரம் கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டுடன் அறிவித்தார்.
- 2047ம் ஆண்டில், தனது சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது நாட்டில் உள்ள திறமைகள் மற்றும் வளங்கள் காரணமாக இதை கூறுகிறேன்.
- நாம் தற்போது மூன்று விசயங்களை எதிர்த்து போராட வேண்டியுள்ளது – ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல். இவை மக்களின் கனவுகளுக்கு தடைகளாக உள்ளன. இந்தியாவின் திறனை ஊழல் மிக கடுமையாக பாதித்துள்ளது. ஊழலை எதிர்த்து போராடுவது மோடியின் வாழ்நாள் உறுதியாகும். சமரச அரசியல் , சமூக நீதியின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலை எந்த விதத்தில் சகித்துக் கொள்ள முடியாது என நாடு உறுதியேற்க வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வாரிசு அரசியல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் “குடும்பத்தின் கட்சி, குடும்பத்தினால் கட்சி, குடும்பத்துக்காக கட்சி” என்ற மந்திரத்துடன் செயல்படுகின்றனர்.
- நமது மகள்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும். இரண்டு கோடி ‘லக்பதி தீதி’ (லட்சாதிபதிப் பெண்) உருவாக்குவது என் எண்ணமாகும். சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் ட்ரோன் இயக்க பயிற்சி அளிக்கப்படுவர்.

- நமது தற்போதைய முடிவுகள், தியாகங்கள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா புது நம்பிக்கையுடன், உறுதியுடன் நடை போட அவை உதவும். நாங்கள் 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த போது, உலக பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சிகளால், 5வது இடத்தை எட்டியுள்ளோம். இது எளிதாக நடைபெறவில்லை.
- உலகம் தொழில்நுட்பத்தால் வழி நடத்தப்படுகிறது. தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் புதிய திறமைகளால், உலக அரங்கில் புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
- 2014ம் ஆண்டில் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நிலையான வலுவான அரசு தேவை என மக்கள் முடிவு செய்தனர். நிலையற்ற காலங்களிலிருந்து இந்திய விடுதலை அடைந்தது. ‘நாடே முன்னுரிமை’ என்பது தான் நமது கொள்கைகளின் அடிப்படை. 2014ம் ஆண்டும் 2019ம் ஆண்டும் மக்கள் எடுத்த முடிவுகளால் நான் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது.
- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, முழுமையான ஆரோக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. யோகா மற்றும் ஆயுஷ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








