ஓய்வூதிய சட்டத்திருத்தம்: ஓய்வுக்கு பிறகும் கடிவாளமா? காங்கிரஸ் தயங்கியதை பா.ஜ.க. செய்தது ஏன்?

ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அரசு அதிகாரிகளின் ஓய்வூதியத்தை நிறுத்திவைக்க அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது.
    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அரசு அதிகாரிகளின் ஓய்வூதியத்தை நிறுத்திவைக்க அல்லது ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது.

இதன் முக்கிய அம்சமாக, அகில இந்திய சேவைகள் (இறப்பு- ஓய்வு பலன்கள்) விதிகள் 1958 இல், கடந்த ஜூலை முதல் வாரத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு “கடுமையான குற்றம்” அல்லது “கடுமையான முறைகேடு வழக்கில்” தண்டனை கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.

இந்த மூன்று அரசு சேவைப் பணிகளும், நாட்டில் அதிக தேவை மற்றும் கெளரவத்தை பெற்றுள்ளன. பணிப் பாதுகாப்பும், ஓய்வூதியமும் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறலாம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் வெவ்வேறு மாநிலங்களில் நிரப்பப்படுகின்றன, இதன் காரணமாக, ஒரு அதிகாரியின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் (ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பணிக்குழு) ஒப்புதல் தேவை.

அதன் பிறகுதான் அந்த அதிகாரியின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு செய்ய முடியும் என்பது முந்தைய விதி.

ஆனால் அண்மையில் இந்த விதியில் மேற்கொண்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு பிறகு, ஒரு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அரசின் இந்த நடவடிக்கையை பல ஓய்வுபெற்ற அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அரசு சேவைப் பணிகளில் (சிவில் சர்வீஸ்) பணியாற்றி ஓய்வு பெற்ற 94 முன்னாள் ஊழியர்கள், இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தும் ஒரு பொது அறிக்கையில் ஜூலை 25 இல் கையெழுத்திட்டுள்ளனர்.

புதிய திருத்தம் தெளிவற்றதாக இருப்பதாகவும், ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் இதனால் சிக்கல் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர், கடுமையான குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.

அதேநேரம், ஒரு அதிகாரி தண்டிக்கப்படாவிட்டாலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கடுமையான முறைகேடுகளில் அவருக்கு தொடர்புடையதாக மத்திய அரசு நம்பினால், அவருக்கு நோட்டீஸ் கொடுத்து அவரது ஓய்வூதியத்தை நிறுத்தலாம்.

நோட்டீசுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிமை உண்டு. ஆனால், இந்த விவகாரங்களில் அரசின் முடிவே இறுதியானதாக கருதப்படும்.

ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒரு அதிகாரியின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு எந்த வகையான குற்றங்கள் காரணமாக இருக்க முடியும் என்று புதிய விதிகளில் விரிவாக விளக்கப்படவில்லை.

எந்த குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்?

புதிய விதிகளில், ஒரு அதிகாரியின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு எந்த வகையான குற்றங்கள் காரணமாக இருக்க முடியும் என்று விரிவாக விளக்கப்படவில்லை.

ஆனால், முக்கிய அரசாங்க தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923 இன் கீழ் வரும் குற்றங்களும், பிற குற்றங்களும் இதில் கடுமையான குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் படியான தகவல்களை வெளியிடுவதும், புதிய சட்டத்திருத்தத்தின்படி தீவிரவான தவறான நடத்தைகளாக கருதப்படும்.

உளவுத்துறை, அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) மற்றும் பிற உளவுத் துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத் திருத்தம் கூடுதல் பொறுப்பை விதித்துள்ளது.

அவர்களுடன் தொடர்புடைய அதிகாரிகள், தங்கள் துறை தொடர்பான எந்தவொரு தகவலையும் வெளியிடவோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு முக்கிய தகவலையும் வெளியிடவோ கூடாது. அவ்வாறு செய்தால் அது கடுமையான தவறான நடத்தை என்று கருதப்படும்.

ஒரு தகவலை வெளியிட்டே ஆக வேண்டும் என்றால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்கள் துறை தலைவரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நேரம் மற்றும் தேவை குறித்து, ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

‘நாட்டில் 75 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கையில், தற்போது ஏன் இந்த நடவடிக்கை? என்று கேள்வி எழுப்பி உள்ளார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்.

அரசை விமர்சிக்கும் அதிகாரிகளை, இந்த சட்டத் திருத்தம் மெளனம் கொள்ள செய்யும் என்றும் கூறுகிறார் அவர்.

“ஓய்வுபெற்ற அதிகாரிகளை மாநில அரசுகள் காப்பாற்றவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்” என்கிறார் ஆந்திர மாநில முன்னாள் சிறப்பு தலைமைச் செயலாளரும், அந்த மாநிலத்தின் மேம்பாட்டு ஆணையருமான பி.வி. ரமேஷ்.

“அரசை விமர்சித்து எதுவும் பேசாமல், அரசு அதிகாரிகள் அமைதியாக பணிபுரிய வேண்டும்”என்பதே இந்த சட்டத்திருத்தம் சொல்லும் செய்தி என்கிறார் மற்றொரு ஓய்வுபெற்ற அதிகாரியான ஜுலியோ ரிபெய்ரோ.

ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி, அரசாங்கத்தை விமர்சித்து ஒரு கட்டுரையை எழுதினாலோ, ஊடகத்திற்கு நேர்காணல் கொடுத்தாலோ, போராட்டம், அணிவகுப்பு அல்லது கருத்தரங்கு என்று எந்த விதத்தில் விமர்சனங்களை முன்வைத்தாலோ அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை இந்த புதிய விதிகள் அளி்க்கின்றன என்கிறார் அவர்.

“நீங்களும் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம் என்பதால் கவனமாக இருங்கள்” என்று தற்போது பணியாற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கும் இந்த திருத்தம் எச்சரிக்கை செய்தியை அளிக்கக்கூடும் என்றும் கூறுகிறார் பி.வி.ரமேஷ்.

“ அரசாங்கம் ஓய்வூதியத்தை நிறுத்த இந்த திருத்தங்களை பயன்படுத்தினால் இதுவும் நடக்கும்” என்று பி.வி. ரமேஷின் கருத்தை வழிமொழிகிறார் மற்றொரு ஓய்வுபெற்ற அதிகாரியான ரிபெய்ரோ.

பழைய விதியின் கீழ், அதிகாரிகளின் ஓய்வூதியத்தை நிறுத்துவது குறித்து இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்று அதிகாரிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஓய்வூதிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்

அரசு அதிகாரிகளின் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து?

அரசு அதிகாரிகளின் ஓய்வூதியத்தை பாதிக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், அவர்கள் பேசுவதற்கான அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கப் பிரச்னைகளில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கருத்துக்களை தெரிவிக்க தங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“அரசாங்கத்தின் ஒரு அங்கமாக உயர்நிலையில் பதவி வகித்தவர்கள் உங்களிடம் (அரசு) இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு நன்கு தெரியும்” என்கிறார் ஹர்ஷ் மந்தர்.

பதவிக்காலம் முழுவதும் தாங்கள் செய்த சேவையின் பலனாக தான் அரசு அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. அதிகாரிகளின் உரிமையான இதனை அரசாங்கம் தன் விருப்பத்தின் பேரில் நிறுத்த முடியாது என்றும் கூறுகிறார் பி.வி.ரமேஷ்.

ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அரசை விமர்சித்து எதுவும் பேசாமல், அரசு அதிகாரிகள் அமைதியாக பணிபுரிய வேண்டும் என்பதே இந்த சட்டத்திருத்தம் சொல்லும் செய்தி என்கிறார் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜூலியோ ரிபேரோ

கூட்டாட்சி கட்டமைப்புக்கும் பாதிப்பு

இந்த சட்டத்திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பையும் பாதிக்கிறது என்றும் பல அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பணியாளர்கள் என்பதால் இரட்டைக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நியமனங்களில் மத்திய அரசாங்கத்துடன் பணியாற்ற அவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று அரசமைப்பு நடத்தைக் குழு கூறியுள்ளது.

கடந்த 2021 இல், மத்திய சிவில் சேவைகள் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தில் இதுபோன்ற திருத்தங்களை அரசாங்கம் நிறைவேற்றியது. இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்), சுங்கம் மற்றும் மத்திய கலால் சேவைகள் ஆகியவை மத்திய சிவில் சேவைகளில் அடங்கும்.

உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தங்களது துறை தொடர்பான விஷயங்களையோ, முக்கியமான தகவல்களையோ வெளியிடும் முன், அந்தத் துறையின் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

காங்கிரஸ் அரசு செய்ய தயங்கியதை செய்துள்ள பாஜக அரசு

ஓய்வூதிய விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற மாற்றங்கள் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று அப்போதே பல அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

அரசமைப்பு நடத்தைக் குழுவின் கூற்றுப்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், 2009 இல் ஓய்வூதிய சட்டத்தில் இந்தத் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்தது. ஆனால் அரசு அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: