'நேதாஜியின் எடைக்கு எடை தங்கம் கொடுத்ததை பார்த்து உணர்ச்சிப்பெருக்கில் அழுதேவிட்டேன்'

பட மூலாதாரம், HemaRakesh
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“நேதாஜியின் எடைக்கு எடை தங்கம் சேர்த்த நிகழ்வில் அவருடைய பேச்சு எங்களுக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சியது. ஒரு கோழைகூட அவரின் பேச்சைக் கேட்டால் வீரனாகி விடுவார்.
நேதாஜியின் ஒவ்வொரு வார்த்தையும், இடிபோல் முழங்கும். அதைக் கேட்கும் எங்களுக்கு ஊண், உறக்கம்கூட மறந்து போகும். இப்போதுகூட நேதாஜி சொன்ன வார்த்தைகளின் வீச்சை என்னால் உணர முடிகிறது,” என்று சிலிர்க்கிறார் 89 வயதை கடந்த சுதந்திர போராட்ட தியாகி கைலாசம்.
சென்னை எண்ணூர் பர்மா நகரைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகியான கைலாசம். இப்போது எண்ணூர் இந்திய தேசிய ராணுவ (சுதந்திர போராட்ட) வீரர்கள் மற்றும் தியாகிகள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
அன்றைய ரங்கூன் நாட்டில் பிறந்த இவர் நேதாஜியின் இந்தியன் இன்டிபெண்டண்ட் லீக் படையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலேயே இந்தப் படையில் சேர்ந்த இவர் ஆயிரக்கணக்கான வீரர்களோடு இணைந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
“நான் ரங்கூன் நாட்டில்தான் பிறந்தேன். என் அப்பாவும், என் அம்மாவும் ரங்கூனில்தான் பிறந்தார்கள். அப்பா அங்கே விவசாயப் பணிகளை மேற்கொண்டார். அம்மா அவருக்குத் துணையாக வீட்டுப் பணிகளை மேற்கொள்ள, நான் அங்கிருந்த செட்டியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
நான் செட்டியார் பள்ளியில் படித்த 1942இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப்படையின் கேம்ப் அலுவலகம் அங்கு இயங்கியது.
அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சேர்ந்துகொண்டே இருந்தார்கள். அதேப்போல் இந்தப் படையில் சேர்வதற்கு நேதாஜியும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுதந்திர உணர்வைத் தூண்டும் உரையை நிகழ்த்திக்கொண்டே இருப்பார்," என்று தெரிவித்தார் கைலாசம்.

பட மூலாதாரம், Getty Images
"உணர்ச்சி கொப்பளிக்கும் அந்த உரையைக் கண்டு மக்களாகிய நாங்கள் மொத்தமாக ஆர்ப்பரிப்போம். நாமும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய மனதில் தோன்றியது.
என்னுடைய தந்தையும் என் எண்ணத்திற்கு ஏற்றவாறு, இந்திய தேசிய ராணுவப்படையில் சேர அனுமதி கொடுத்தார். இப்படித்தான் இந்திய தேசிய ராணுவப்படையில் நாங்கள் சேர்ந்தோம்,” என்று சுதந்திர போராட்ட வீரராக தான் தொடங்கிய பயணத்தை விவரித்தார் கைலாசம்.
சுதந்திர போராட்டத்திற்காக பணம் வசூலித்த கைலாசம்
இந்திய சுதந்திர லீக்கில் (Indian Independent League) பல்வேறு குழுக்களாக மக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்றவாறு வேலைகள் வழங்கப்பட்டன. கைலாசத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து சுதந்திர போராட்டத்திற்காக பணம் வசூலிக்கும் வேலை வழங்கப்பட்டது. அந்த பணத்தைக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.
“நான் இந்திய சுதந்திர லீக்கில் சேர்ந்ததும் எனக்கு பணம் வசூலிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. நான் அந்தக் குழுவில் உறுப்பினராக இணைக்கப்பட்டேன். அப்போது அதில் 1500 பேர் இருந்தார்கள். என்னுடைய குழுவிற்கு ரங்கசாமி என்பவர் தலைவராக இருந்தார்.
நாங்கள் காலையிலேயே எழுந்து சுதந்திர போராட்டத்திற்காக பணம் வசூலிக்கச் சென்று விடுவோம். ரங்கூன் நகரத்தில் உள்ள வியாபாரிகள், குஜராத்திகள், பார்சிகள், மார்வாடிகள், முகாலய குடும்பத்தினர் எனப் பல்வேறு தரப்பினரும் பணம், செக் மற்றும் நகைகளைக் கொடுத்தார்கள்," என்கிறார் கைலாசம்.
"நாங்கள் தினமும் இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பல பேரிடம் எடுத்துரைத்தோம். ஊரில் உள்ள பணக்காரர்களிடம் தான் முதலில் சென்று பணத்தை நன்கொடையாகப் பெறுவோம்.
காலையில் தொடங்கும் வசூல் மாலை முடிவடைந்ததும் எங்கள் குழவின் தலைவர் இந்திய தேசிய படைக்காகவே தனியாக இருந்த வங்கியில் அன்று நாள் முழுவதும் வசூலான பணத்தைச் செலுத்துவார். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறோம்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கைலாசம்.

பட மூலாதாரம், HemaRakesh
பிரசாரக்குழு, பாதுகாப்புக் குழு, அடிப்படைத் தேவைகள் குழு, பொருள் வசூல் செய்யும் குழு எனப் பல குழுக்கள் இந்திய சுதந்திர லீக் படையில் இயங்கியது. அந்தக் குழுக்களில் உள்ள அனைவருக்கும் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பணத்தை கைலாசம் உறுப்பினராக இருந்த பணம் ஈட்டும் குழு பெற்றுத் தந்தது.
நேதாஜியின் எடைக்கு எடை தங்கம் கொடுத்த மக்கள்
“ஒவ்வொரு நாளும் திருவிழா போன்று பணத்தை வசூல் செய்யக் கிளம்பி விடுவோம். இந்திய தேசிய படையில் பெண்கள் பிரிவு படையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டோம். ஒரு முறை கேப்டன் லஷ்மி ஷேகலை சந்தித்தேன்.
எனக்கு கைகொடுத்துவிட்டு என் பணிகளைப் பாராட்டினார். அது எனக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்தது. அதனால் மேலும் உற்சாகமாகப் பணியில் ஈடுபட்டேன்.
அப்போது ஒரு நாள் ரங்கூனில் உள்ள யூபி ஹால் என்று சொல்லக்கூடிய இடத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்காகப் பணம் செலுத்தும் பொருட்டு நேதாஜியை ஒரு தராசில் நிற்க வைத்து எடைக்கு எடை தங்கத்தை மக்கள் கொடுத்தார்கள். அந்தத் தருணம் இன்னும் என் கண்களிலேயே இருக்கிறது. வாழ்வின் மறக்கவே முடியாத தருணம், மறக்கவே கூடாத தருணம் அது.
நேதாஜியின் எடைக்கு எடை தங்கம் சேர்க்க மக்கள் ஒவ்வொருவராக தங்களுடைய ஆபரணத்தைக் கழட்டி தராசில் போட்டுவிட்டு இறுதியாக எடைக்கு எடை தங்கம் சேர்ந்ததும் அத்தனை பேரும் உற்சாகக் கூக்குரலிட்டார்கள். அந்தத் தருணத்தில் எல்லாம் நான் வாய்விட்டு அழுதே விட்டேன்,” என்று இப்போதும் கண்கள் கசியக் கூறுகிறார்.

பட மூலாதாரம், HemaRakesh
நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் சேர்ந்ததும், அங்கு அவர் இந்திய சுதந்திர போராட்டம் குறித்து உணர்ச்சி மிகுந்த உரையை நிகழ்த்தினார். அந்த உரை மேலும் ஆயிரக்கணக்கான மக்களை இந்திய சுதந்திர லீக் படையில் சேர்க்க வைத்தது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
“அன்று எடைக்கு எடை தங்கம் சேர்த்த நிகழ்வில் நேதாஜி மிக அருமையாக உரையாற்றினார். நீங்கள் கொடுத்த அத்தனை தங்கமும் நம் இந்தியா சுதந்திரம் பெற உதவும். ஒரு குண்டு மணி தங்கம்கூட வீணாகாமல் அத்தனையும் சுதந்திர போராட்டத்திற்காகப் பயன்படுத்துவோம்.
அந்நியரை இந்த நாட்டைவிட்டு விரட்டி இந்தியாவை சுதந்திர காற்றை சுவாசிக்க நாம் அத்தனை பேரும் துணை புரிவோம் என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கம் போல் கர்ஜிக்க, அங்கிருந்த மொத்த கூட்டமும் கைதட்டி உணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தது. நாங்களும் ஆவலாய் இந்திய சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம்," என்று கூறினார் கைலாசம்.
ரங்கூனில் இருந்து இந்தியா திரும்புதல்
அதன் பின்னர் பல்வேறு சூழல் காரணமாக நேதாஜியின் படை பின்வாங்கியதும் அத்தனை பேரின் வாழ்வும் வேறு வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியது.
கடந்த 1964இல் ரங்கூனில் இருந்து பல்வேறு தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தனர். இந்திய அரசு அவர்களுக்கு இலவசமாக கப்பல் அளித்தும், உணவு அளித்தும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது.
நாட்டின் பல்வேறு இடங்களில் முகாம் அமைத்தும், அவர்களின் திறனுக்கு ஏற்ற வேலை கொடுத்தும் உதவிகள் செய்தது. அப்படி இந்தியாவிற்குச் செல்ல ஆசைப்பட்ட தமிழர்களில் கைலாசமும் ஒருவர். 24 வயதில் அவர் ரங்கூனில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பினார். இங்கு அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
தன்னுடைய சுதந்திர போராட்ட பணிகளுக்காக இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர் ஆகியோரிடம் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் கைலாசம்.

பட மூலாதாரம், HemaRakesh
இந்திய சுதந்திர லீக்கில் இல் படை வீராக இருப்பவர்களை கண்டறியும் தமிழ்நாடு அரசின் மாநில சீராய்வுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார் கைலாசம். இவர் அங்கீகரித்து பரிந்துரை செய்தால் மட்டுமே அந்த வீரர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதிய தொகையை அரசிடம் இருந்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“இளம் வயதில் நான் நேதாஜியின் படையில் இருந்து இந்திய சுதந்திர போராட்ட பணியில் ஈடுபட்டதை பெருமையாகக் கருதுகிறேன்.
என்னைப் போல பலரும் பல்வேறு நிலைகளில் கடினமாகப் போராடி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்திருக்கிறோம். பல்வேறு தருணங்களில் நான் இதை நினைவு கூறுகிறேன்.
இந்த சுதந்திரத்தை இந்திய தலைவர்களும், இளம் தலைமுறையும் போற்றிப் பாதுகாத்து இந்திய நாட்டை உலக அரங்கில் பெருமைக்குரிய நாடாக நிலைத்திருக்க என்றும் துணை நிற்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை," என்கிறார்.
இன்றும் தான் நேதாஜியின் நினைவுகளோடே வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












