பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: வெறும் தேர்தல் பிரசாரமா?

சுதந்திர தின உரையா? தேர்தல் பிரச்சாரமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி , பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து தனது உரையை நிகழ்த்தினார். அவர் பிரதமராகி பத்தாவது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி , பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து தனது உரையை நிகழ்த்தினார். அவர் பிரதமராகி பத்தாவது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிகழ்த்தும் கடைசி உரை இதுவென்பதால், தேர்தல் பிரசாரத்துக்கான உரையாகவே இது அமைந்துள்ளது.

மணிப்பூர் கலவரம் உச்சத்தில் இருந்த போது கூட பிரதமர் வாய் திறந்து பேசவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரதமரை சாடின. நாடாளுமன்ற அவைகள் இந்த விவகாரம் காரணமாக முடங்கின. நாடாளுமன்றத்தில் பேசிய முதல்வர், ஒன்றரை மணி நேரமாக பேசியும் மணிப்பூர் குறித்து உடனே பேசவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.

"மணிப்பூரில் அமைதி திரும்புகிறது"

இந்நிலையில், தனது பத்தாவது சுதந்திர தின உரையில், மணிப்பூர் வன்முறை குறித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. “கடந்த சில வாரங்களாக, வட கிழக்கில் மணிப்பூரிலும் மற்றும் சில பகுதிகளிலும் வன்முறை வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர். மகள்கள் மற்றும் தாய்மார்களின் கண்ணியம் மீறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக, அங்கே அமைதி திரும்பி கொண்டிருப்பதற்கான செய்திகளை கேட்டு வருகிறோம். ஒட்டு மொத்த நாடும் மணிப்பூருடன் நிற்கிறது. அமைதியின் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மத்திய மாநில அரசுகள், ஒன்றாக இணைந்து தீர்வுகளை கண்டறிய பணியாற்றி வருகிறோம்” என பேசி, தன் மீதான விமர்சனங்களை களைய முயன்றுள்ளார்.

பிரதமர் மோதி 2017ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், நாட்டின் வளர்ச்சி சீராக இல்லை, இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வேகமான வளார்ச்சி வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக சகோதர சகோதரிகளே என்று மக்களை அழைக்கும் அவர், இன்று தனது உரையில், குடும்ப உறுப்பினர்களே என்று அழைத்தார். தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் முக்கிய சாதனைகளை எடுத்து உரைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற உறுதியை வெளிப்படுத்தினார். அவரது இத்தனை ஆண்டு கால ஆட்சியில், இந்தியாவை ‘விஸ்வ மித்ரா’ உலகின் நண்பனாக மாற்றியதாக அவர் தெரிவித்தார்.

"குடும்ப அரசியல், சமரச அரசியல்" காங்கிரஸை சாடும் பிரதமர்

சுதந்திர தின உரையா? தேர்தல் பிரசாரமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா தற்போது ஊழல், குடும்ப அரசியல், சமரச அரசியல் என மூன்று விசயங்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது மூன்று விசயங்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அவை- ஊழல், குடும்ப அரசியல், சமரச அரசியல் என மோதி தெரிவித்துள்ளார். இவை அனைத்துமே காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை சாடி பேசப்பட்டவையாகவே இருக்கின்றன.

குடும்ப அரசியல் என்பது காங்கிரஸ் மீது தொடர்ந்து பாஜக வைக்கும் விமர்சனமாகும். பிரதமர் தனது உரையில், காங்கிரஸ் கட்சியையோ, அல்லது வேறு கட்சிகளையோ பெயர் சொல்லி குறிப்பிடா விட்டாலும் அவரது தாக்குதல் யாரை நோக்கி என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊழலுக்கு எதிராகவும் குடும்ப அரசியலுக்கு எதிராகவும் தான் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார். “இவை மக்களின் கனவுகளுக்கு தடைகளாக உள்ளன. இந்தியாவின் திறனை ஊழல் மிக கடுமையாக பாதித்துள்ளது. ஊழலை எதிர்த்து போராடுவது மோடியின் வாழ்நாள் உறுதியாகும். சமரச அரசியல் , சமூக நீதியின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என நாடு உறுதியேற்க வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வாரிசு அரசியல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் 'குடும்பத்தின் கட்சி, குடும்பத்தினால் கட்சி, குடும்பத்துக்காக கட்சி' என்ற மந்திரத்துடன் செயல்படுகின்றனர்.

ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி சகோதர சகோதரிகள், மகள்கள், தாய்மார்கள், யாராக இருந்தாலும் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு, இந்த மூன்று தீமைகளை களைய வேண்டும்," என தெரிவித்தார்.

குடும்ப அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில் பேசிய அவர், “நீங்கள் தான் என் குடும்பம். நான் உங்களிடம் இருந்து தான் வந்தேன், நான் உங்களுக்காக தான் வாழ்கிறேன்” என்றார்.

இதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “தனது ஆட்சி ஒன்பது ஆண்டுகளில் என்ன செய்தது என மக்களுக்கு கூறாமல், பொய்கள் நிறைந்த தேர்தல் பிரசார உரை நிகழ்த்தியுள்ளார். அவர் தன்னை பற்றியும் தன் பிம்பத்தைப் பற்றியுமே பேசியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

பெண்களின் வாக்குவங்கி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் முக்கியமானதாகும். அந்த வகையில், 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பான தனது சுதந்திர தின உரையில், பிரதமர் இரண்டு கோடி ‘லக்பதி தீதி’ (லட்சாதிபதிப் பெண்) உருவாக்குவது தன் எண்ணமாகும் என கூறியுள்ளார். “சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் ட்ரோன் இயக்க பயிற்சி அளிக்கப்படுவர். இதன் மூலம் கிராமப்புற பெண்கள், வலுவடைந்து விவசாய தொழில்நுட்பம் மேம்படும்” என்றார். பெண்களால் வழிநடத்தப்படும் வளார்ச்சி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்று கூறியவர், “இன்று, சிவில் விமான போக்குவரத்தில் உலகிலேயேஅதிகமான பெண்களை கொண்டது இந்தியா என பெருமையுடன் கூறமுடியும். சந்திரயான் திட்டங்களிலும் பல பெண் விஞ்ஞானிகள் முன்னிலையில் பணி செய்கின்றனர்” என்று சுட்டிக் காட்டினார்.

"அடுத்த ஆண்டும் கொடியேற்றுவேன்"

தனது சுதந்திர தின உரையை பயன்படுத்தி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதை ஆணித்தனமாக வெளிப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோதி. 2014ம் ஆண்டு மாற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தனது ஆட்சியின் செயல்பாடுகள் மூலம் காப்பாறியுள்ளதாக தெரிவித்தார்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாலேயே மக்கள் நம்பிக்கை பெற்று மீண்டும் 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்தார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகள் இது வரை கண்டிராத வளர்ச்சியின் காலமாக இருக்கும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்கான பொன்னான காலமாக அடுத்த ஐந்து ஆண்டுகள் அமையும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் நின்று நாட்டின் வளர்ச்சியை, திறன்களை, முன்னேற்றத்தை எடுத்துரைப்பேன்” என்று கூறினார். இதன் மூலம் பாஜக 2024ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் என்பதையும் அப்போதும் தான் தான் பிரதமர் வேட்பாளர் என்ற செய்தியையும் தெரிவிக்கிறார்.

பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்வில் பங்கேற்காத காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, “அடுத்த ஆண்டு மோதி தேசிய கொடியேற்றுவார், ஆனால் அவரது வீட்டில்” என கடுமையாக சாடியுள்ளார்.

சுதந்திர தின உரையா? தேர்தல் பிரச்சாரமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் நின்று நாட்டின் வளர்ச்சியை, திறன்களை, முன்னேற்றத்தை எடுத்துரைப்பேன் என மோதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என 2023-24 நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இதே போன்று பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசிடம் பல்வேறு தருணங்களில் கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி அதிகரித்துள்ளது என கூறி அதற்கான தரவுகளை மோதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.30 லட்சம் கோடியிலிருந்து ரூ.100 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாகவும் உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது போன்ற தரவுகளை வெளியிடும் போது, பண மதிப்பு உயர்வதை ஆளுங்கட்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பது விமர்சனமாக வைக்கப்படுகிறது.

வேலையின்மை குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து பாஜக ஆட்சி மீது வைக்கப்பட்டு வரும் நிலையில், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் எட்டு கோடி பேர் புதிதாக தொழில் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், 13.5 கோடி ஏழை மக்கள், புதிய மத்திய தர வகுப்பினராக கடந்த ஐந்து ஆண்டுகளில் மேம்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகான சுதந்திர தின உரைகளில் டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மோதி வெகுவாக சுட்டிக் காட்டி பேசியிருந்தார். 2017ம் ஆண்டு தனது உரையில், “மக்கள் ரூபாய் நோட்டுகள் குறைவாக பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும்” என அறிவுறுத்தினார். ஆனால் இந்த ஆண்டு டிஜிட்டல் இந்தியா குறித்து மோதி பேசவில்லை.

பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர் என அடையாளம் காணப்படும் மோதி, விஷ்வகர்ம யோஜனா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பலனடையும் வகையிலான திட்டத்தை அறிவித்தார். “கைவினை கலைஞர்கள், குறிப்பாக பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் பலனளிக்கும். நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள் போன்ற குடும்பங்கள் பலனடையும். முதல் கட்டமாக 13 முதல் 15 ஆயிரம் கோடி செலவில் இத்திடம் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

பல்வேறு எதிர்க்கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நேரத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமரின் உரை குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், பிரதமர் பேச்சு வெற்று முழக்கங்களாக இருப்பதாக தெரிவித்தார். “ஊழல் அரசியல், குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. கணக்கு தணிக்கை அறிக்கை பாஜக செய்த ஊழல்களை எடுத்துக் காட்டுகிறது” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: