பாகிஸ்தானில் தேவாலயம் எரிப்பு: குர்ஆன் அவமதிப்பு சர்ச்சையால் வன்முறை - நடந்தது என்ன?

குர்ஆன் அவமதிப்பு பாகிஸ்தான்

பட மூலாதாரம், @BISHOPAZADM

படக்குறிப்பு, கைகளில் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

ஃபைசலாபாத்தின் ஜரன்வாலா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவ குடியிருப்பைப் போாராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். தேவாலயம் ஒன்றுக்கும் தீ வைத்த அவர்கள், சில அரசு கட்டடங்களையும் அடித்து நொறுக்கினர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, எஸ்சா நாக்ரி என்ற பகுதியில் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து காலை முதல் அங்கு போராட்டங்கள் வெடித்தன.

ஜரன்வாலா நகர காவல் உதவி ஆணையர் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் தொலைபேசியில் கூறும்போது, “இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை, எஸ்சா நாக்ரியில் போராட்டத்தில் இறங்கிய ஒரு கும்பல் தீவைப்பு சம்பவத்திலும் ஈடுபட்டதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

குர்ஆன் அவமதிப்பு பாகிஸ்தான்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

கைகளில் உருட்டுக் கட்டை உள்ளிட்டவற்றை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாகவும் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் கூறினார்.

“வெளியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் அலுவலகத்துக்குள் வைத்து நாங்கள் பூட்டப்பட்டோம்,” என்று எஸ்சா நாக்ரி நகர துணை காவல் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளையும் போராட்டக்காரர்கள் அடைத்து உடைத்தனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவர் மீது வழக்குப் பதிவு

இதனிடையே, குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கிறிஸ்தவ இளைஞர்கள் இருவர் மீது ஜரன்வாலா நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எஸ்சா நகரியில் குர்ஆன் நூலின் பக்கங்களில் சிவப்பு மை நிரப்பப்பட்ட பேனாவால் அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாக, புகார் அளித்தவர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டவர்களாகக் கருதிய நபர்களைப் பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ‘குர்ஆனை நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்’ என்று ஃபைசலாபாத் போலீசார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ’பொதுமக்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ எனவும் அந்த ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் அவமதிப்பு பாகிஸ்தான்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, இந்தச் சம்பவம் குறித்து பிஷப் ஆசாத் மார்ஷல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிஷப் வருத்தம்

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தேவாலயங்களின் தலைவரான பிஷப் ஆசாத் மார்ஷல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜரன்வாலாவில் உள்ள கிறிஸ்தவ சமூகம் துன்புறுத்தப்பட்டுள்ளது. ஒரு தேவாலய கட்டடம் எரிக்கப்பட்டுள்ளது. பைபிளும் அவமதிக்கப்பட்டுள்ளது,” என்று பிஷப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்டத்தை அமல்படுத்துபவர்களிடம் இருந்து நாங்கள் நீதியையும், நீத்கக்கான செயல்களையும் எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

குர்ஆன் அவமதிப்பு பாகிஸ்தான்
படக்குறிப்பு, ஜரன்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, கராச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கராச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜரன்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, கராச்சியில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்துக்கு வெளியே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்துக்கு அடுத்தப்படியாக, கராச்சியில் கிறிஸ்தவ சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய ஆர்வலர் ஒருவர், "ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன.

குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அவை குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எவ்வித ஆதாரமும் திரட்டாமல், தேவாலயங்கள், பைபிள்களை எரிக்க ஆரமபித்துவிட்டனர்," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

கிறிஸ்தவ சமூக மக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன. தங்களது வீடுகளில் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கிs சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

குர்ஆன் அவமதிப்பு பாகிஸ்தான்
படக்குறிப்பு, பாகிஸ்தானில் பஞ்சாப்பிற்கு அடுத்தப்படியாக, கராச்சியில் கிறிஸ்தவ சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.

பாகிஸ்தானை இந்தியாவாக மாற்றுவது ஏன்? - மத போதகர் கேள்வி

மத போதகரான கஜாலா ஷபீக் கூறும்போது, "கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாக இல்லை. சொல்லப்போனால் இப்போது இங்கு எதுவுமே பாதுகாப்பாக இல்லை. பாகிஸ்தானையும் இந்தியாவாக மாற்றுவது ஏன்?

மத நிந்தனைச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி வருகிறோம்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சமுக ஆர்வலரான சபீர் மைக்கேல் என்பவர் கூறும்போது, "தற்போது நிகழ்ந்துள்ள சம்பவங்களுக்கு அரசு நிர்வாகத்தின் எதிர்வினை மிகவும் தாமதமாக உள்ளது. தேவாலயங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

கராச்சியில் பலத்த பாதுகாப்பு

ஃபைசலாபாத்தில் இன்று நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் துறைமுக நகரமான கராச்சியில் போலீசாரின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

"கராச்சி நகரில் உள்ள அனைத்து தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள், இமாம் பர்காக்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கவும், உளவுத்துறை நடவடிக்கைகளை அதிகரிக்கவும் கராச்சி காவல்துறை கூடுதல் ஐஜி ஜாவேத் ஆலம் ஓது உத்தரவு பிறப்பித்துள்ளார்," என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: