முதல் கேமியோ நடிப்பிலேயே தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்த சிவராஜ்குமார் - யார் இவர்?

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER
சமீபத்தில் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமாக வெளிவந்த “ஜெயிலர்” படத்தில் 10 நிமிடங்களே தோன்றினாலும், தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷராஃப், யோகி பாபு, சிவராஜ்குமார், தமன்னா, மிர்னா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
சன் பிச்சர்ஸ் வெளியிட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ஜெயிலர் திரையிடப்பட்டது.
ஜெயிலர் திரைப்படம் மல்ட்டி ஸ்டாரர் திரைப்படமாக இருந்தபோதிலும், ஒவ்வொரு நடிகரும் அவர்களுக்கான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களைக் கவரத் தவறவில்லை. அந்த வகையில், கன்னட திரையிலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவராஜ்குமார் மிகச் சொற்பமான காட்சிகளில் வந்தாலும், தியேட்டரில் ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.
சிவராஜ்குமார் நடிகர் மட்டுமல்ல, அவர் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார்.
அழுத்தங்களை உடைத்து சிவராஜ்குமார் கொடுத்த 'ஹாட்ரிக் ஹிட்'

பட மூலாதாரம், Getty Images
நடிகர் சிவராஜ்குமாரின் இயற்பெயர் புட்டா சாமி. இவர் கன்னட சினிமாவின் 'முடிசூடா மன்னர்' என்றழைக்கப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன். சிவராஜ்குமாருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனித்ராஜ் குமார். இவரது கடைசித் தம்பியான புனித் ராஜ்குமாரும் மிகப் பெரிய நடிகர். அவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தபோது இந்திய சினிமாவே சோகத்தில் ஆழ்ந்தது.
நடிகர் சிவராஜ்குமார் சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில்தான் சினிமா பற்றிய பட்டயப் படிப்பை படித்தார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் அறிவுரைப்படி சென்னையிலேயே நடிப்புப் பயிற்சியும் மேற்கொண்டார்.
நடிகர் ராஜ்குமார் தனது ரசிகர்களிடம் மிகப் பெரிய பெயரை சம்பாதித்து வைத்திருந்ததால், சிவராஜ்குமார் தனது திரை பயணத்தை ஆரம்பித்தபோது அவர் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் விவாதித்தன.
சிவராஜ்குமார் முதன்முதலில் 'ஆனந்த்' (1986) என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிவராஜ்குமார் ஹிட் கொடுத்து, கன்னட திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
'ஆனந்த்' திரைப்படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் 'ரத சப்தமி' (1986) என்ற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் ஹிட் அடித்தது. இரண்டு ஹிட் திரைப்படங்களைக் கொடுத்ததால், சிவராஜ்குமாரின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. அதையடுத்து, 'மன மெச்சிடா ஹீடுகி' (1987) என்ற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் முதல் இரண்டு திரைப்படங்களைப் போலவே மெகா ஹிட் அடித்தது.

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER
சிவராஜ்குமார் திரையிலகில் நுழைந்தபோது, அவர் தந்தை ராஜ்குமாரின் பெயரைக் காப்பாற்றுவாரா, திரைத் துறையில் தாக்குப் பிடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர் கன்னட சினிமா வரலாற்றில் கொடுத்த ஹாட்ரிக் ஹிட் அவரை ஹாட்ரிக் நாயகனாக உருவெடுக்க வைத்தது.
அதைத் தொடர்ந்து, சிவராஜ்குமார் மளமளவென இன்றுவரை 100 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
தந்தை ராஜ்குமாரின் கலைவாரிசாக கருதப்படாத மகன்
சிவராஜ்குமாரின் சினிமா பயணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள கன்னட நாளிதழ்களில் தொடர்ந்து சினிமா பற்றி எழுதி வரும் பத்திரிகையாளர் சாம் ராம் பிரசாத்திடம் பேசினோம்.
அவர் சிவராஜ்குமார் பற்றிக் கூறும்போது, “சிவராஜ்குமார் சினிமாவில் நுழையும்போதே நடிப்பு சார்ந்து மட்டுமின்றி கலாசார ரீதியாகவும் அவருக்கு அழுத்தம் இருந்தது,” என்று கூறுகிறார் அவர்.
சினிமாவை பொறுத்தவரை மாஸ் ஹீரோவாக மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டுமானால் சிகரெட் பிடிக்கும் காட்சியைத் தவிர்க்க முடியாது.
ஆனால், கன்னட சினிமாவின் ஜாம்பவானாக விளங்கிய சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் இதுவரை அவர் நடித்த ஒரு திரைப்படத்தில்கூட, புகைப்பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ சித்தரிக்கப்படும் காட்சிகளை அனுமதித்தது கிடையாது.
அதுகுறித்துப் பேசிய சாம் ராம் பிரசாத், “அவரின் இந்தப் பண்பினால், ரசிகர்கள் ராஜ்குமாரை ஏறக்குறைய கன்னட மக்களின் கலாசார பிரதிநிதியாகவே பார்த்தனர். அது மட்டுமில்லாமல், மென்மையானவர், தாழ்மையானவர் என்று நடிகர் ராஜ்குமார் பல நற்பண்புகளைக் கொண்டவர். அதனாலேயே அவர் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாகிப் போனார்.
இதுபோன்ற ஒரு சூழலில் சிவராஜ்குமார் சினிமாவில் நுழையும்போது இயல்பாகவே அவர் நடிகர் ராஜ்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்ற பொறுப்பு வந்து சேர்ந்தது,” என்று விளக்குகிறார் சாம் ராம் பிரசாத்.

ஆனால், சிவராஜ்குமார் தன் தந்தையைப் போல புகைப்பிடிப்பது போலவே, மது அருந்துவது போல சித்தரிக்கப்படும் காட்சிகளைத் தவிர்க்கவில்லை. மாஸ் காட்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கும், மது அருந்தும் காட்சிகளுக்கும் மறுப்பு தெரிவிக்காமல் நடித்துக் கொடுத்தார்.
புகைப்பிடிக்கும் காட்சிகளில் வேண்டுமானால், சிவராஜ்குமார் தந்தை சினிமாவில் கடைபிடித்து வந்த கொள்கையை மீறலாம்; ஆனால், “அவரும் இயல்பு வாழ்க்கையில் அவரின் தந்தையைப் போலவே, அனைவரையும் மதிக்கும் மாண்பையும், பண்பையும் வளர்த்துக் கொண்டார்,” என்று கூறும் ராம் பிரசாத், அதன்மூலம் அவருக்கும் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது என்கிறார்.
அதேநேரம், நடிகர் புனித் ராஜ்குமார் தனது தந்தையைப் போல புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ, மது அருந்தும் காட்சிகளிலோ நடிக்கவில்லை. இதனால், அவரை கன்னட ரசிகர்கள் ராஜ்குமாரின் கலை வாரிசாகக் கருதினார்கள் என்கிறார் பத்திரிகையாளர் சாம் ராம் பிரசாத்.
புனித் ராஜ்குமாரரை கண்டித்த கன்னட ரசிகர்கள்
நடிகர் சிவராஜ் குமார் குறித்துப் பேசும்போது, “புகைப்பிடிக்கும் காட்சிகளையும், மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தது போலவே, நடிகர் ராஜ்குமார் தனக்கென நிறைய தீவிரமான கொள்கைகளை வைத்திருந்தார்,” என்கிறார் சாம் ராம் பிரசாத்.

பட மூலாதாரம், Getty Images
அவர் முதன் முதலில் 1952ஆம் ஆண்டு “பெதார கன்னப்பபா” என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
“முதல் திரைப்படம் நடிக்கும்போதே, நடிகர் ராஜ்குமார் தனது திரைப்பயணம் குறித்த தெளிவான புரிதலோடு இருந்தார். அவர் அப்போதே, கன்னட திரைப்படம் தவிர வேறு மொழித் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என முடிவோடு இருந்தார்,” என்கிறார் சாம் ராம் பிரசாத்.
“ஒருமுறை நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் ராஜ்குமாரை பாலிவுட்டில் நடிப்பதற்காக அழைத்தார். பெரிதாக ஒன்றும் இல்லை, ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சின்ன வசனம். ஆனால், ராஜ்குமார் கன்னட திரைப்படங்களைத் தவிர வேறு படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்ததால் மறுத்துவிட்டார்.”
இதனாலேயே, கன்னட மக்கள் நடிகர் ராஜ்குமாரை தங்களது பாரம்பரியத்தைப் பின்பற்றுபவராகவும், கலாசார பிம்பமாகவும் பார்க்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த நடிகரும், சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித்ராஜ் குமாரிடம் அவர் வேற்று மொழித் திரைப்படங்களில் நடிப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு புனித்ராஜ் குமார் “அதிலென்ன தவறு. கண்டிப்பாக வேற்று மொழித் திரைப்படங்களில் நடிப்பேன்” எனப் பதிலளித்தார். இதுவரை, நடிகர் ராஜ்குமார் வேற்று மொழித் திரைப்படங்களில் நடிக்காதபோது, அவரது கலை வாரிசாகக் கருதப்படும் மகன் புனித் இவ்வாறு முடிவெடுத்ததை தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் அதற்காக மிகப்பெரிய போராட்டம் செய்ததாக சாம் ராம் பிரசாத் கூறுகிறார்.
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் சிவராஜ்குமார்

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER
சிவராஜ் குமார் அவரது தந்தையின் கொள்கைகளைக் கடைபிடிக்காவிட்டாலும், கன்னட ரசிகர்களால் ராஜ்குமாரின் கலைவாரிசாகக் கருதப்படாவிட்டாலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேநேரம், “அவரது தந்தையைப் போலவே, அனைத்து தரப்பு மனிதர்களிடமும் மிகவும் அன்பு பாராட்டக் கூடியவர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், நடித்துக்கொண்டும், பூஜை போடப்பட்டும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியிலும் என மொத்தம் 12 திரைப்படங்களுக்காக சிவராஜ்குமார் பணிபுரிந்திருக்கிறார்.”
அதோடு, "அவருடன் திரைத்துறையில் நடிக்க வந்த பலரும் காணாமல் போன நிலையில், அவர் இன்றும் திரையில் நிலைத்து நிற்பதற்கு அவரது இந்தக் கடின உழைப்பே காரணம்," என்கிறார் பத்திரிகையாளர் ராம் பிரசாத்.
சிவராஜ்குமார் தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












