ஜெயிலர் படத்தில் வருவது போல் சிலை கடத்தல்காரர்கள் கொடூரமானவர்களா?

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ரஜினிகாந்த் நடித்து வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் சிலை கடத்தல்காரர் மிகக் கொடூரமான கொலைகளைச் செய்பவராக, சுரங்கம் போன்ற இடத்தில் வசித்தபடி அமிலத்தில் ஆட்களை ஊறவைத்துக் கொலை செய்பவராக வருகிறார். உண்மையில் சிலை கடத்தல்காரர்கள் எப்படியிருந்தார்கள்?
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரம் வில்லனாக வருகிறது. இந்தப் பாத்திரத்தில் மலையாள நடிகரான வினாயகன் நடித்திருக்கிறார்.
வர்மன் ஒரு சிலை கடத்தல்காரனாகக் கட்டப்படுகிறார். அந்த வர்மன் கோவில்களில் இருந்து சிலை திருடுவதோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோ படத்தில் விரிவாகக் காட்டப்படவில்லை.
மாறாக, வர்மனின் கொடூரமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. பூமிக்கு அடியில் உள்ள ஓரிடத்தில் வசிக்கும் வர்மன், அங்கேயே சிலைகளை அடுக்கி வைத்திருக்கிறார். தனக்கு துரோகம் செய்வர்களை கந்தக அமிலத்தில் ஊறவைத்துக் கொலை செய்கிறார். காவல்துறை அதிகாரியையே கடத்தி வைத்து, அவரது தந்தையோடு பேரம் பேசுகிறார்.
ஆனால், உண்மையில் சிலை கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்? அவர்களின் கடத்தல் வழிமுறை என்ன?

பட மூலாதாரம், SUN PICTURES
தமிழ்நாட்டில் அதிகம் அறியப்பட்ட சிலை கடத்தல்காரர்கள் இரண்டு பேர். ஒருவர் சுபாஷ் கபூர். மற்றொருவர் தீனதயாளன். இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் சிறையில் இருக்கிறார்.
முதலில் சுபாஷ் கபூரை பற்றிப் பார்க்கலாம். இவரது பிரதான அடையாளம், அமெரிக்காவின் முன்னணி கலைப் பொருள் விற்பனையாளர் என்பதுதான்.
இவர் மன்ஹாட்டன் நகரில் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் என்ற பெயரில் ஒரு ஆர்ட் கேலரியை நடத்தி வந்தார். அமெரிக்காவில் உள்ள தனியார் அருங்காட்சியகத்திற்கு, தெற்காசிய நாடுகளில் இருந்து கிடைக்கும் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
இவருடைய தந்தை டெல்லியில் சிறிய அளவில் அரிய நூல்கள், கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருந்தார். சுபாஷ் தில்லியில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தார். 1980களில் அமெரிக்க குடியுரிமை பெற்ற சுபாஷின் லைஃப் ஸ்டைல் என்பது, சினிமாவின் சிலை கடத்தல்காரர்களின் லைஃப் ஸ்டைலுக்கு முற்றிலும் மாறானது.
அரிய ஒயின் வகைகளில் ஆர்வமுடைய சுபாஷ், மிக மிக நேர்த்தியாக உடை அணிவார். அவரது கோட்டில் ஒரு சிறிய கசங்கலைக்கூட பார்க்க முடியாது.
மன்ஹாட்டனின் பணக்காரப் பகுதியில் இவரது கலைக்கூடம் அமைந்திருந்தது. அந்த நகரின் கலை மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் மரியாதைக்குரியவராகவும் இருந்தார் சுபாஷ். பல பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Mohanlal
"சிலைகளைக் கடத்தி விற்பவர்கள் பெரும் பணக்காரத் தோரணையில் மிக நேர்த்தியாக இருப்பார்கள். காரணம், சமூகத்தின் உயர்ந்த மட்டத்தில் உள்ள நபர்களிடம்தான் கடத்திய சிலைகளை விற்பனை செய்ய வேண்டும்.
அடிதடி, கொலை - கொள்ளைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடவே மாட்டார்கள். இதற்கான ஏஜென்ட்களிடம் இருந்தே சிலைகளைப் பெறுவார்கள். அந்த ஏஜென்ட்கள் சில்லறைத் திருடர்களைப் பயன்படுத்தி சிலைகளைத் திருடுவார்கள்," என்கிறார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. திலகவதி.
சுபாஷ் கபூரை பொறுத்தவரை அவர் உலகம் அறிந்த கலைப் பொருள் விற்பனையாளர். தெற்காசிய நாடுகளில் எங்கெல்லாம் கலைப் பொருட்கள் இருக்கின்றன என்ற தகவலைச் சேகரித்து, அவற்றைக் கைப்பற்றி மிகப்பெரிய விலைக்கு விற்பதுதான் அவருடைய வழக்கம்.
எல்லா நாடுகளிலும் இவருக்கு ஏஜென்ட்கள் இருப்பார்கள். இவர்கள் சுபாஷ் கபூர் அளவுக்குப் பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் பணப்புழக்கம் உடையவர்கள்தான். அப்படி ஒரு முகவர்தான் தீனதயாளன்.
இவரை நேரில் பார்க்கும் யாருக்கும் ஒரு மரியாதை தோன்றும். ஒல்லியான உருவம். நடக்கும்போது தடுமாறி விழுந்துவிடுவதைப் போன்ற நடை. இதுதான் தீனதயாளன்.
சுபாஷ் கபூர் தான் கண்டறிந்த கோவில்கள் பற்றிய தகவல்களை தீனதயாளன் போன்ற ஏஜென்ட்களிடம் கூறியதும் இவர்கள், சில்லறைத் திருடர்களை அணுகி சிலைகளைத் திருடச் சொல்வார்கள். இதற்கு 1- 2 லட்சம் ரூபாய் கூலியாகப் பேசப்படும்.
கவனிப்பாரற்ற கோவில்கள்தான் இலக்கு என்பதால் திருடுவதும் எளிது. ஆகவே எளிதில் சிலை கைப்பற்றப்பட்டு, தீனதயாளனுக்கு வந்துவிடும்.

பட மூலாதாரம், SUN PICTURES
தீனதயாளன் ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை நடத்தி வந்தார். அங்கே புதிதாக செய்யப்பட்ட சிலைகளோடு, திருடப்பட்ட சிலைகளும் வைக்கப்பட்டிருக்கும். சுபாஷ் கபூருக்கு தேவைப்படும் சிலைகள், புதிதாக செய்யப்பட்ட சிலைகள் என்று கூறப்பட்டோ, வேறு பொருள்களுக்கு நடுவில் வைத்தோ அமெரிக்காவுக்கு அனுப்பப்படும். சில நேரங்களில் ஃபர்னிச்சர்களை ஏற்றுமதி செய்வதாகக் கூறியும் இந்த சிலைகள் துறைமுகங்களைத் தாண்டும்.
"இது நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், சுபாஷ் கபூரின் காதலியாக இருந்த கிரேஸ் பரமேஸ்வரிக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது. இதில் கோபமடைந்த பரமேஸ்வரி, ஃபர்னிச்சர் என்று சொல்லி சிலைகள் கடத்தப்படுவதை காவல்துறைக்குத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து காவல் துறை நடத்திய சோதனையில் பெரும் எண்ணிக்கையிலான சிலைகள் பிடிபட்டன," என்கிறார் திலகவதி.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கோவில் சிலைகளைத் திருடி, கடத்தியது தொடர்பான வழக்கு அவர் மீது பதிவுசெய்யப்பட்டது. சுபாஷ் கபூரின் பெயரில் இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டது.
முடிவில் 2011 அக்டோபரில் ஜெர்மனியில் ஒரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 2012இல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்குப் பத்தாண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு நடுவில், சுபாஷ் கபூருக்கு சொந்தமான கிடங்கில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான கலைப் பொருட்கள் இருப்பதை அமெரிக்க காவல்துறை கண்டறிந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவரது தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜெர்மன் அரசு கோரி வருகிறது.

பட மூலாதாரம், DEENADAYALAN
இருந்தபோதும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தாமல் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார் சுபாஷ் கபூர். முதலில் வேலூர் சிறையில் இருந்தவர் தற்போது திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
உண்மையில், இதுபோன்ற சிலை கடத்தல்காரர்கள் சினிமாவில் காட்டுவதைப் போல பயங்கரமானவர்களாக இருப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். சுபாஷ் கபூர் தண்டிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கோகுல் ராஜை கொலை செய்ததாக தண்டிக்கப்பட்டுள்ள யுவராஜும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு நாள் சுபாஷ் கபூர் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, அவர் தண்ணீரை வீணாக்குவதாக குற்றம்சாட்டிய யுவராஜ், சுபாஷ் கபூரை 'துவைத்துவிட்டார்.' சுபாஷ் கபூரின் கதறலைக் கேட்டு அங்கே வந்த சிறைக் காவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள்.
சுபாஷ் கபூருக்கு சிலைகளை சப்ளை செய்து வந்த தீனதயாளனுக்குச் சொந்தமான இடங்களில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 300க்கும் மேற்பட்ட சிலைகள், ஓவியங்கள், கலைப் பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 2 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு சுபாஷ் கபூர் மீதான வழக்குகளில் அவர் அப்ரூவராக ஒப்புக்கொண்டார். வழக்குகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் உடல்நலம் மிகவும் குன்றி, மைலாப்பூரில் இருந்த ஒரு மருத்துவமனையில் தனது 83வது வயதில் உயிரிழந்தார் தீனதயாளன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












