இருட்டுக்கடை அல்வா: ராஜஸ்தான் இனிப்பு தமிழ்நாட்டின் தவிர்க்க இயலாத பண்டமானது எப்படி?

காணொளிக் குறிப்பு, 300 ஆண்டுகளாக தொடரும் அல்வா தொழில்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு இனிப்பு என அல்வாவை கூறலாம். அல்வா என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான். திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்றால் உலகப் பிரசித்தம், அதுவும் அல்வாவை கண்டுபிடித்தவர் ஒரு திருநெல்வேலிக்காரர் என்று கூட பலர் நினைக்கலாம். அத்தகைய பெருமை வாய்ந்த இருட்டுக்கடை அல்வாவின் பூர்வீகம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி எனும் ஒரு சிறிய ஊர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அல்வா, உலகம் முழுவதும் பரவியது. பல நாடுகளில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பல்வேறு முறைகளில் அல்வா தயாரிக்கப்பட்டது.

உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் எள்ளுடன் சர்க்கரை சேர்த்து அல்வா செய்யப்படுகிறது. பேரிச்சம் பழத்தை பிசைந்து தயாரிக்கப்படும் அல்வாவும் அரபு நாடுகளில் பிரசித்தமாக இருந்துள்ளது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “கிதாப் அல்-தாபிக்” எனும் அரபு சமையல் நூலில் அல்வா வகைகள் மற்றும் அவற்றின் செய்முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அல்வாவின் பிறப்பு மற்றும் அது எவ்வாறு தமிழ்நாட்டின் சொக்கம்பட்டிக்குள் நுழைந்தது என்பது குறித்தும் எழுத்தாளர் முகில் தன்னுடைய “உணவு சரித்திரம்” எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, இருட்டுக்கடை அல்வாவின் பூர்வீகம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி எனும் ஒரு சிறிய ஊர்.

சொக்கம்பட்டி ஜமீன் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த அல்வா

“வடஇந்தியாவில் பொதுவாகவே அல்வா மற்றும் இனிப்பு வகைகளை மக்கள் விரும்பி உண்பார்கள். ஆனால் அங்கு பெரும்பாலும் செய்யப்பட்டவை, கேரட் அல்வா, பாதாம் அல்வா, ரவை அல்வா போன்றவை தான். கோதுமையிலிருந்து பால் எடுத்து சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் அல்வாவை தயாரித்து அதை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தது எங்கள் லாலா பரம்பரை தான்” எனக் கூறுகிறார் ஷியாம் சுந்தர் சிங்.

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, சொக்கம்பட்டியின் அரண்மனைத் தெருவில் ஷியாம் சுந்தர் சிங்கின் முன்னோர்களுக்கு நிலங்கள் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுத்து சொக்கம்பட்டியிலேயே தங்க வைத்தார் ஜமீன்.

சொக்கம்பட்டியின், அரண்மனைத் தெருவில் வசித்து வரும் ஷியாம் சுந்தர் சிங், லாலா குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இன்றும் தனது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பரிய முறையில் அல்வா தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 40 வருடங்களாக அல்வா மற்றும் பால்கோவா வகைகளை தென்காசி, அம்பாசமுத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்வதோடு, வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.

“எங்கள் பரம்பரையின் பூர்வீகம் ராஜஸ்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்பட்டி ஜமீன் ராஜஸ்தானுக்கு புனித யாத்திரை வந்த போது, அவருக்கு எங்களது உணவு வகைகள் மிகவும் பிடித்து விட்டது. தமிழ்நாட்டிற்கு திரும்பும் போது எங்கள் முன்னோர்களையும் இங்கு அழைத்து வந்து விட்டார்” என்கிறார் அவர்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, லாலா குடும்பத்தின் வாரிசுகள் மதுரை, தென்காசி, அம்பாசமுத்திரம், சொக்கம்பட்டி போன்ற ஊர்களில் அல்வா தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள். அதில் மிகவும் பிரபலமானது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

அரண்மனைத் தெருவில் அவர்களுக்கு நிலங்கள் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுத்து சொக்கம்பட்டியிலேயே தங்க வைத்தார் ஜமீன். அந்த குடும்பத்தினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜமீன், அவர்களை தன் மெய்க் காவலர்களாகக் கூட பணியமர்த்தியுள்ளார்.

முதலில் தங்கள் எள்ளுத்தாத்தா ஜெகன் சிங் மற்றும் அவரது மனைவி லட்சுமி பாய், இருவரும் திருநெல்வேலியில் தள்ளு வண்டி மூலமாக அல்வா விற்பனை செய்து வந்ததாகவும் அந்த அல்வா மக்களுக்கு மிகவும் பிடித்து போக, பிறகு கடை வைத்து அல்வாவை விற்பனை செய்தார்கள் என்றும் ஷியாம் சுந்தர் சிங் தெரிவிக்கிறார்.

“பிற்காலத்தில், அவர்களின் வாரிசுகள் மதுரை, தென்காசி, அம்பாசமுத்திரம், சொக்கம்பட்டி போன்ற ஊர்களில் அல்வா தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள். அதில் மிகவும் பிரபலமானது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா” என்று அவர் விவரிக்கிறார்.

300 ஆண்டுகளாக மாறாத அல்வா செய்யும் முறை

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, சொக்கம்பட்டி அல்வா தயாரிக்கும் முறையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் பழமையான முறையே இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

லாலா குடும்பத்தில் ஷியாம் சுந்தர் சிங் மட்டுமே பூர்வீகமான சொக்கம்பட்டியில் அல்வா தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மற்ற வாரிசுகள் வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ கோவில் விழாவிற்கு லாலா குடும்பத்தினர் அனைவரும் சந்தித்துக் கொள்வது வழக்கம்.

சொக்கம்பட்டி அல்வா தயாரிக்கும் முறையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் பழமையான முறையையே இன்றும் கடைபிடிப்பதாக கூறுகிறார் ஷியாம் சுந்தர் சிங்.

“தரமான சம்பா கோதுமையை ஒருநாள் முன்பாகவே ஊற வைத்து விடுவோம். பின்னர் அடுத்த நாள் அதை அரைத்து, நெய், சர்க்கரை, முந்திரி பருப்பு, ஜாதிக்காய், குங்குமப் பூ, சேர்த்து அல்வா செய்வோம்." என்கிறார் அவர்.

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, லாலா குடும்பத்தில் ஷியாம் சுந்தர் சிங் மட்டுமே பூர்வீகமான சொக்கம்பட்டியில் அல்வா தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அல்வா செய்முறை குறித்து மேலும் விளக்கும் அவர், "அல்வாவின் பதம் மிகவும் முக்கியம். சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் அல்வா இறுகி வீணாகி விடும். சேர்மானங்களும் மிகச் சரியான முறையில் இருக்க வேண்டும். எங்களின் சிறப்பே கருப்பட்டியில் செய்யும் சொக்கம்பட்டி அல்வா தான். அதையும் எங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த முறைப்படியே செய்கிறோம்." என்றார்.

"அதே போல, பால்கோவா செய்வதிலும் சர்க்கரை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதில்லை. சில இடங்களில் அதிகமான சர்க்கரை, ரவை, குறைவான பால் என சேர்ப்பார்கள், இதை லாபத்திற்காக செய்வார்கள். நாங்கள் அப்படி செய்வதில்லை” எனக் கூறும் ஷியாம் சுந்தர் சிங், அடுத்த தலைமுறையான தனது மகனும் இந்த அல்வா தொழிலில் ஈடுபடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

ஆறாவது தலைமுறையாக தொடரும் அல்வா தொழில்

சொக்கம்பட்டி அல்வா
படக்குறிப்பு, ஷியாம் சுந்தர் சிங்-ன் மகன் ஜனார்த்தனன் சிங், அல்வா தயாரிப்பில் சிறுவயதிலிருந்து ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர் விரும்பினார்.

ஷியாம் சுந்தர் சிங்-ன் மகன் ஜனார்த்தனன் சிங், அல்வா தயாரிப்பில் சிறுவயதிலிருந்து ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர் விரும்பினார்.

அதுவரை மொத்த விற்பனை மட்டுமே செய்து வந்த ஷியாம் சுந்தர் சிங் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூரில் “ஸ்ரீநவநீத விலாஸ் லாலா அல்வா” என்ற பெயரில் ஒரு புதிய கடையை தொடங்கினார்.

“அந்த கடையை மகன் தான் கவனித்து வருகிறான். மக்களிடையே அந்த கடைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் அல்வாவை ஒரு மாதமானாலும் கூட வைத்து உண்ணலாம். கைபடாமல் இருந்தால், அல்வா கெட்டுப் போகாது. எனவே தான் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் எங்கள் அல்வாவை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்” எனக் கூறினார் ஷியாம் சுந்தர் சிங்.

அல்வா தொழிலை விட்டு ஏதேனும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை என கூறுகிறார் ஜனார்த்தனன் சிங். “சிறுவயதிலிருந்தே அல்வா செய்வதை பார்ப்பது, அப்பாவுக்கு அல்வா தயாரிப்பில் சிறு உதவிகள் செய்வதே எனக்கு பொழுதுபோக்கு. கல்லூரி முடித்தவுடன், இந்த தொழிலை இன்னும் பெரிதுபடுத்த விரும்பினேன். கடைகளுக்கு மட்டுமல்லாது, வெளியூர் நிகழ்ச்சிகளுக்கும் அல்வா, பால்கோவாவை மொத்த ஆர்டர் எடுத்து அனுப்பத் தொடங்கினோம். தரம் மற்றும் சுவையில் எந்த சமரசமும் நாங்கள் செய்வதில்லை.” எனக் கூறினார் ஜனார்த்தனன் சிங்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: