ஜெயிலர்: ரஜினிகாந்த் 72 வயதில் புதிய வசூல் சாதனை - சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வருமா?

காணொளிக் குறிப்பு, ஜெயிலர் வசூல் சாதனை எவ்வளவு? சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறதா?

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் வார வசூல் அடிப்படையில் தமிழ் சினிமாவில் வரலாறு படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அதன் சமூக ஊடக பக்கங்களில் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான தர்பார், 2021ஆம் ஆண்டில் வெளியான அண்ணாத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேச, அதைத் தொடர்ந்து சர்ச்சை உருவெடுத்தது.

அந்த சர்ச்சையும் அதையொட்டிய விவாதங்களும் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் பிரதிபலித்தது. அப்போது சன் பிச்சர்ஸ் கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அவரே எனத் தெரிவித்திருந்தார்.

பிறகு, ரஜினி கூறிய காக்கா - கழுகு கதையை வைத்தும் விவாதங்கள் கிளம்பின.

ரஜினிகாந்த் - ஜெயிலர் திரைப்படம்

பட மூலாதாரம், SUN PICTURES

படக்குறிப்பு, ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஏழு நாட்கள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் அதிகாரபூர்வ வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பு எகிறக் காரணம் என்ன?

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் லியோ தயாராகி வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் அந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு மிக அதிகளவிலான எதிர்பார்ப்பு உள்ளது.

முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் திரைப்படம் விமர்சனரீதியாக பெரும் பின்னடைவை சந்திருந்தது.

நெல்சன், ரஜினி என இருவரும் முந்தைய படங்களில் கடும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டதால் ஜெயிலர் திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கவில்லை.

ஆனால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மற்றும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்வுக்குப் பிறகு ஜெயிலர் திரைப்படம் குறித்து எதிர்ப்பார்ப்பு எகிறத் தொடங்கியது.

ரஜினிகாந்த் - ஜெயிலர் திரைப்படம்

பட மூலாதாரம், SUN PICTURES/ TWITTER

படக்குறிப்பு, சூப்பர் ஸ்டார் சர்ச்சை மற்றும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்வுக்குப் பிறகு ஜெயிலர் திரைப்படம் குறித்து எதிர்ப்பார்ப்பு எகிறத் தொடங்கியது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நள்ளிரவு ஷோ, அதிகாலை ஷோ உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால் கடந்த பொங்கலை ஒட்டி வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்களின் அதிகாலை காட்சிகளின் போது அஜித் ரசிகர் ஒருவர் விபத்தில் இறந்தார். இதையொட்டி அதிகாலை காட்சிகளை ரத்து செய்யக் கோரி கோரிக்கை எழுந்திருந்தன.

ரஜினிகாந்த் 'ரெக்கார்ட் மேக்கரா'?

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவின் பிற பகுதியில் ஜெயிலர் வெளியானதற்குப் பிறகு காலை ஒன்பது மணியளவில்தான் தமிழகத்தில் முதல் ஷோ வெளியானது.

ஜெயிலர் படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்களே வந்தபோதும் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இடங்களில் திரையரங்குகளில் முதல் நான்கு ஐந்து நாட்களுக்கு அதிகளவு கூட்டம் வந்தது.

ரஜினிகாந்த் - ஜெயிலர் திரைப்படம்

பட மூலாதாரம், Arun Prasanth

படக்குறிப்பு, ஜெயிலர் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே முதல் வாரத்தின் முடிவில் அதிகபட்ச வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தச் சூழலில் ஜெயிலர் 450 கோடியை வசூலித்துவிட்டதாகவும், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாகவும் டிராக்கர்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் நபர்கள் எக்ஸ் (முன்னதாக டிவிட்டர் என அறியப்பட்ட) தளத்தில் பதிவிட்டனர்.

அதையொட்டி விவாதங்கள் எழுந்தன. இந்தச் சூழலில்தான் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஏழு நாட்கள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் அதிகாரபூர்வ வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெயிலர் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே முதல் வாரத்தின் முடிவில் அதிகபட்ச வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. உலகம் முழுவதும் தோராயமாக 375 கோடியே, நாற்பது லட்சம் ரூபாய் மொத்த வசூல் எனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தி ரெக்கார்ட் மேக்கர்" என்றும் குறிப்பிட்டுளள்து.

ஜெயிலர் பெரிய ஹிட் ஆக வேண்டும் என நினைக்கவில்லை: இயக்குனர் நெல்சன்

ரஜினிகாந்த் - ஜெயிலர் திரைப்படம்

பட மூலாதாரம், Arun Prasanth

படக்குறிப்பு, ஜெயிலர் படத்தின் கதையும் அதில் ரஜினி நடித்ததும்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

இன்று ஜெயிலர் படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. இதில், பேசிய படத்தின் இயக்குனர் நெல்சன், 'ஜெயிலர்' நான் நினைத்ததைவிட 10 மடங்கு நன்றாக வந்துள்ளது' என்று படத்தைப் பார்த்த பிறகு நடிகர் ரஜினி கூறியதாகப் பகிந்துகொண்டார்.

மேடையில் பேசிய இயக்குனர் நெல்சன், "இவ்ளோ பெரிய 'ஹிட்' ஆக வேண்டும் என நினைத்து படம் எடுக்கவில்லை, நல்ல படம் எடுக்க வேண்டும் என்றுதான் படத்தை உருவாக்கினோம்.

இந்தக் கதையும் அதில் ரஜினி நடித்ததும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். அதோடு ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடியது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது," என்று கூறினார்.

மேலும், இந்தப் படத்திற்காக அதிகம் பணியாற்றியது எடிட்டர் நிர்மல் தான் என்று பாராட்டிய நெல்சன், ஒளிப்பதிவு, ஆடை, சண்டைக்காட்சி என அனைத்துக் குழுவினரும் தத்தம் பணிகளை நேர்த்தியாகச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் - ஜெயிலர் திரைப்படம்

பட மூலாதாரம், Arun Prasanth

படக்குறிப்பு, தரமணி, ராக்கி வரிசையில் ஜெயிலர் தனது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் என்றும் இதுவொரு மைல்கல் என்று வசந்த் ரவி கூறினார்.

படம் வெளியாவதற்கு மூன்று நாள் முன்பு படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதாகக் கூறிய நெல்சன், "தான் நினைத்ததைவிட பத்து மடங்கு அதிகமாக வந்துள்ளது" எனக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

"படம் நன்றாக வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த அளவிற்கு வரும் என எதிர்பார்க்கவில்லை" எனவும் ரஜினி பாராட்டியதாக நெல்சன் கூறினார்.

வாழ்வில் மறக்க முடியாத படம் ஜெயிலர்: நடிகர் வசந்த் ரவி

விழாவில் பேசிய வசந்த் ரவி, "அனிருத் இசையில் எப்படியாவது பணியாற்றிட வேண்டும் என ஆசைப்பட்டேன் அந்த வகையில் ரத்தமாரே பாடல் அமைந்துள்ளது அவரும் அற்புதமாக அந்தப் பாடலைக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு எனக்கு அந்த கனவு நிறைவேறி உள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், தரமணி, ராக்கி வரிசையில் ஜெயிலர் தனது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் என்றும் இதுவொரு மைல்கல் என்றும் வசந்த் ரவி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: