நிலா இல்லை என்றால் பூமி என்ன ஆகும்?

நிலா பூமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலாவை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத் திட்டம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

நிலாவை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத் திட்டம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் பகுதி மட்டும் பிரிந்து சென்றிருக்கிறது.

தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டர் தன்னுடைய தனிப் பாதையில் நிலாவைச் சுற்றத் தொடங்கிவிட்டது. இதன் பிறகு படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு தரையிறங்குவதற்கு பணிகள் தொடங்கும். இஸ்ரோவின் திட்டப்படி இன்னும் ஆறு நாட்களில் விக்ரம் லேண்டர் நிலாவின் தரையைத் தொட வேண்டும்.

நிலா குறித்த ஆய்வில் சந்திரயான் -3 திட்டம் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படும் நிலையில், நிலா தொடர்பாக பொதுவாக நமக்கு எழும் சந்தேகங்கள், அதற்கான விளக்கங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

நிலா எப்படி தோன்றியது?

நம்மில் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு சந்தேகம் இது. இதற்கான தெளிவான பதில் என்பது கிடையாது. நிலாவின் தோற்றம் தொடர்பாக பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் அனைத்துமே ஒரே கருத்தையே கூறுகின்றன.

சூரிய குடும்பம் உருவான நேரத்தில், சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகம் அளவில் உள்ள ஒரு பொருள் அல்லது பல பொருட்கள் பூமியின் மீது மோதியதாகவும் அதில் தோன்றிய குப்பைகள் எல்லாம் விண்வெளிக்கு சென்று நிலவாக மாறியது என்பது பரவலாக அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கோட்பாடு.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், BBC Sport

படக்குறிப்பு, நிலா இல்லையென்றால், அது பூமியின் கடல் அலைகள் உயரத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும்

நிலா இல்லையென்றால் பூமிக்கு என்ன ஆகும்?

நிலாவின் புவியீர்ப்பு விசைதான் பூமியை அதன் அச்சில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. ஒருவேளை நிலா இல்லையென்றால், அது பூமியின் கடல் அலைகள் உயரத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும். ஓதங்களில் (Tides)மாறுபாடு ஏற்படும். ஏன், ஒரு நாளின் நீளம் கூட மாறலாம் .

இதேபோல், பூமியின் காலநிலை, தட்ப வெப்பம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் நிலா இருக்கிறது?

தற்போதைய கணக்குபடி, பூமியில் இருந்து 3,84,400 கிலோ மீட்டர் தொலைவில் நிலா இருக்கிறது. ஆனால், 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து 2,70,000 கிலோ மீட்டர் தொலைவில் நிலா இருந்ததாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரிந்துரைத்தது.

அதாவது, தற்போது உள்ள தூரத்தோடு ஒப்பிடும்போது, 100க்கு 70% தூரத்தில் நிலா இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. அப்போது பூமி வேகமாக சுழன்றதால் ஒரு நாளுக்கான காலம் குறைவாக இருந்தது.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மரியா எனப்படும் பெரிய, தட்டையான கடல் போன்ற அதேவேளையில் நீரற்ற பகுதிகள் நிலாவில் உள்ளன

நிலாவில் என்ன இருக்கிறது?

நிலா என்பது பாறைகள் மற்றும் தாதுக்களால் ஆனது என்று கூறுகிறார் பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர், இ.கி. இலெனின் தமிழ்க்கோவன். மேலும், “ முக்கியமாக சிலிகேட்டுகளால் ஆனது. வளிமண்டலம் கிடையாது.

அதன் மேற்பரப்பு அம்சங்களில் எரிகல் பொழிவு தாக்கி பள்ளங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மரியா எனப்படும் பெரிய, தட்டையான கடல் போன்ற அதேவேளையில் நீரற்ற பகுதிகள் உள்ளன ” என அவர் குறிப்பிடுகிறார்.

இதேபோல் பன்னெடுங்காலம் முன்னர் தோன்றிய எரிமலையின் வாயில்களும் நிலாவில் உள்ளன.

நிலா பிரகாசமாக மின்னுவது எப்படி?

பௌர்ணமி நாட்களில் நிலா பிரகாசமாக மின்னுவதை நாம் பார்த்து வியந்திருப்போம். ஆனால், அது நிலவொளி அல்ல சூரிய ஒளி என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால், அதுதான் உண்மை. தனக்கான ஒளியை நிலாவால் உருவாக்க முடியாது. தன் மீது விழும் சூரிய ஒளியையே நிலா பிரதிபலிக்கிறது.

நிலா என்ன நிறத்தில் இருக்கும்?

நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நிலா பிரகாசமாக தோன்றும். அதை பார்த்து நிலா வெள்ளை நிறத்தில் இருப்பதாக நாம்மில் பலர் நினைத்திருப்போம். ஆனால், நிலா உண்மையில் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிப்பதாலேயே நிலா பிரகாசமாக இருக்கிறது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். நிலாவின் அருகில் சென்று பார்க்கும்போது அது அடர் சாம்பல் நிறத்தில் உள்ளது.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலாவில் நீர் இருப்பதாக நமது சந்திரயான் ஒன்று ஆய்வுக்கலமும் உறுதி செய்துள்ளது

நிலாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை என்ன?

நிலாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயணங்கள் மூலம் அதன் புவியியல், மேற்பரப்பு அமைப்பு மற்றும் வரலாறு தொடர்பான முக்கியத் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இலெனின் தமிழ்க்கோவன் கூறுகையில், “குறிப்பாக, நிலாவில் நீர் இருப்பதாக நமது சந்திரயான் ஒன்று ஆய்வுக்கலமும் உறுதி செய்துள்ளது. நாசாவின் அப்பல்லோ பயணங்கள் மூலம் பாறை மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டது பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.

இதேபோல், நிலாவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் தாவரங்களை கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் வளர்த்தனர்.

நிலாவில் மனிதர்களின் எடை குறைவது ஏன்?

பூமியில் உள்ள ஒரு பொருள், நிலவில் அதே எடையில் இருப்பதில்லை என்கிறார் இலெனின் தமிழ்க்கோவன் .

“எடுத்துக்காட்டாக, ஒரு நபரின் எடை 80 கிலோ என்று வைத்துக்கொள்வோம். நிலவில் அவரது எடை 13.3 கிலோவாகதான இருக்கும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை. பூமியின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது நிலவின் ஈர்ப்பு விசை 6 ல் ஒரு பங்கு மட்டுமே இருக்கும். இதனால்தான் நிலவில் எடை குறைவு ஏற்படுகிறது . அதே நேரத்தில் உங்கள் நிறை (Mass) பூமியில் எப்படி உள்ளதோ அப்படியே தான் இருக்கும் ” என விளக்குகிறார்.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனிதர்கள் மொத்தம் ஆறு முறை நிலவில் இறங்கியுள்ளனர்

நிலவில் இதுவரை எத்தனை முறை மனிதர்கள் இறங்கியுள்ளனர்?

1969 மற்றும் 1972 க்கு இடையில் அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு பகுதியாக மனிதர்கள் மொத்தம் ஆறு முறை நிலவில் இறங்கியுள்ளனர். கடைசியாக மனிதர்கள் நிலவுக்கு சென்றது டிசம்பர் 1972 இல் அப்பல்லோ 17 பயணத்தின் போதுதான்.

அதற்குப் பிறகு, நிலவுக்கு மனிதர்கள் பயணம் செய்யவில்லை. இதற்கு நிதி கட்டுப்பாடுகள் மற்றும் விண்வெளி ஆய்வு பற்றிய கருத்துகள் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

நிலா குறித்த தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் ஆய்வு செய்யப்படுகின்றன

நிலாவில் உருவங்கள் தோன்றுவதாக நினைத்தது உண்டா?

ஒருசிலர் நிலாவில் மனிதர்கள் போன்றோ, விலங்குகள் போன்றோ உருவங்கள் தெரிவதாக கூறியிருக்கலாம். ஏன், உங்களுக்கே கூட அப்படி தோன்றியிருக்கலாம். இதற்கு காரணம் என்ன?

நிலாவில் உள்ள பழமையான, கடினமான எரிமலைக் கடல்கள் பசால்ட் பாறைகளால் உருவானவை. எனவே, இந்த பகுதிகள் குறைந்த அளவிலேயே வெளிச்சத்தை பிரதிபலிக்கும் . மாறாக நிலவில் உள்ள மலைமேடுகள் அதிகளவு வெளிச்சத்தை பிரதிபலிக்கும். அதனை பார்க்கும்போது நமக்கு எதோ ஒரு உருவம் போல் தோன்றுகிறது என நாசா கூறுகிறது.

நிலாவில் மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா?

இலெனின் தமிழ்க்கோவன் இதற்கு பதிலளிக்கும்போது,

“நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் ஆய்வு செய்யப்படுகின்றன. பூமி போன்று இயல்பாய் சுவாசிக்கக்கூடிய வளிமண்டலம் இல்லாதது, தீவிர வெப்பநிலை மாறுபாடுகள் (அதாவது பகலில் மிக அதிக வெப்பநிலையும் இரவில் கடும் குளிரும் நிலவுவது), காற்று மண்டலம் இல்லாததால் விண்புறப்பரப்பு கதிர்வீச்சு அதிகமாக இருப்பது போன்றவை மனிதர்கள் வசிக்க முடியாத சூழலுக்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன” என்றார்.

இதேபோல் எளிதல் பயன்படுத்தக்கூடிய நீர் இல்லாததும் ஓர் குறைபாடாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், “ விஞ்ஞானிகள் குறுகிய காலம் தங்குவதற்கு அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காக சந்திர தளங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். ” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: