உத்தராகண்ட் தலித் பெண் சமைத்த உணவை நிராகரித்த மாணவர்கள் - களத்தில் என்ன நடந்தது?

Sunitha Devi

பட மூலாதாரம், RAJESH DOBRIYAL

    • எழுதியவர், ராஜேஷ் டோப்ரியால்
    • பதவி, பிபிசி தமிழ்

உத்தராகண்ட் மாநிலத்தில், தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை சாப்பிட குழந்தைகள் மறுத்ததாக கூறப்பட்ட விவகாரம் முடிவுக்கு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், தான் பணியமர்த்தப்படாதவரை இந்த விவகாரத்துக்கு தீர்வு இல்லை என்று சம்பந்தப்பட்ட சமையல் வேலை செய்த தலித் பெண் சுனிதா தேவி கூறியுள்ளார்.

பிபிசி இந்தியிடம் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து விவரித்த அவர், "துணை கோட்டாட்சியர் வந்து இந்த விஷயத்திற்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று கூறினார். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றார். எனக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? நூறு ஆண்டுகளில் கிடைக்குமா? என்னை விரைவில் பணியமர்த்த வேண்டும். பிறகுதான், இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்ததாக கருத முடியும்," என்றார்.

சம்பாவத் பகுதியில் உள்ள சுக்கிடாங் என்ற இடத்தி, தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை சாப்பிட மாணவர்கள் மறுத்தாக கூறப்பட்டது.

அந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் விரைவில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அம்மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதன் காரணமாக, விடுமுறை நாளான சனிக்கிழமையன்று அதிகாரிகள் சுக்கிடாங் பகுதியை அடைந்தனர். அங்குள்ள மக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

"விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டது"

டனக்பூரின் துணை கோட்டாட்சியர் ஹிமான்ஷு கஃப்ல்தியா, தலைமை கல்வி அதிகாரி ஆர்.சி புரோகித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரா பிஞ்சா, சி.ஒ அசோக் குமார், தாசில்தார் பிங்கி ஆர்யா, ஆரம்ப கல்வித் துறையின் டி.இ.ஒ சத்தியநாராயண், பி.இ.ஒ அஷுல் பிஷ்ட் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளுடனும், மக்களுடனும் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளியில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.

Sunitha Devi 1

பட மூலாதாரம், RAJESH DOBRIYALL/BBC

இந்த கூட்டத்திற்கு பிறகு, இந்த விஷயத்திற்கு தீர்வு காணப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்த கூட்டம் குறித்து சுனிதா தேவி கூறுகையில், "பிற வகுப்பினரையும், தலித் சமூகத்தை சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் அழைத்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட என்னிடம் இது பற்றி கேட்கக் கூட இல்லை. என்னை போஜன்மாதா (உணவளிக்கும் தாய் என்பது இதன் பொருள்) பணியிலிருந்து விலக்கியவர்களிடம் கூட கருத்து கேட்டனர். என்னை கேட்டு இருக்க வேண்டுமா, இல்லையா? ஆனால், அவர்கள் என் கருத்தை கூட கேட்கவில்லை," என்கிறார்.

"எல்லோரும் என்னிடம், "அவர் பெரிய அதிகாரி. அவரிடம் எதுவும் கூற வேண்டாம்" என்று கூறுகின்றனர். அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும், என்னை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; அப்போதுதான் நான் இதை ஏற்பேன், இல்லை எனில் ஏற்க முடியாது என்றேன்," என்று கூறுகிறார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகள் அந்த உணவை சாப்பிட மாட்டார்கள் என்றும் கூறியதாக சுனிதா தேவி தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "எஸ்.டி.எம் சார் அங்கே நிற்கிறார். அப்போது அவருக்கு பின்னால் நிற்கும் தாய்மார்கள், எங்கள் வீடுகளில் தெய்வம் குடியிருக்கிறது. அதனால்தான் எங்கள் குழந்தைகள் அவர் சமைத்ததைச் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினர். எஸ்.டி.எம் சாரிடம் நான், "பாருங்கள், அவர்கள் எப்படி பேசுகிறார்கள்", என்று கூறினேன். இதற்கு தீர்வு காணப்படும் என்றார்". என்று தெரிவிக்கிறார்.

தன்னை மீண்டும் பணியமர்த்த மறுக்கின்றனர் என்பதே சுனிதா தேவி மீண்டும் மீண்டும் கூறும் விஷயமாக உள்ளது.

அவர் மேலும் கூறுகையில், " இப்போது (ஆதிக்க வகுப்பினர்) அனைவருடனும் சாப்பிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்த விவகாரம் பெரிதாகிறது என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது.

இப்போது அவர்கள் இப்படி கூறுகின்றனர். ஆனால், முதலில் அனைத்தையும் செய்தது சுவர்ண வகுப்பினரே. பத்திரிகைகளிலும் அவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். அவர்கள் பொய்யான தகவலை வெளியிட்டனர் என்கிறார் சுனிதா.

"ஆனால், இதற்கு தீர்வு என்ன? நான் வேலைக்கு செல்ல வேண்டும். என்னுடைய கைகளால் அனைவரும் உணவு உண்ணும்போதுதான், இதற்கு தீர்வு கிடைக்கும்", என்கிறார் சுனிதா.

School

பட மூலாதாரம், RAJESH DOBRIYALL/BBC

இந்த முழு விவகாரத்தை தனது தன்மானத்துடன் தொடர்புபடுத்தி சுனிதா தேவி பார்க்கிறார்.

அவர், "இவர் ஒரு தலித் பெண்; அவரது கையால் சமைத்த உணவை சாப்பிடமாட்டோம் என்றனர்; என்னை சாதிய ரீதியான வார்த்தைகளை கொண்டு அழைத்தனர். கிராமத்தினர் என்னை சுற்றி வளைத்து கொண்டு, "நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன ஆயிற்று இவருக்கு? என்று கேட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து வசிக்க வேண்டும்; கிராமத்தில் நடக்கும் மகிழ்ச்சியான, துக்கமான விஷயங்களில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரி கூறுகிறார்," என்று கூறினார்.

"இவர்கள் 3000 ரூபாய் பெறும் போஜன்மாதா வேலையில் இருந்து என்னை நிறுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். என்னுடைய கஷ்ட நஷ்டங்களை இவர்கள் பார்க்கின்றனரா?" என்று கேட்கிறார்.

சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகும், சுனிதா தேவி மீண்டும் பணியில் அமர்த்தப்படுவாரா அல்லது அமர்த்தப்பட மாட்டாரா என்பது முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போஜன் மாதா ஆட்சேர்ப்பு முறையை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. திறமையான பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அதிகாரி, அரசு அதிகாரி மற்றும் பெண் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படுவார்கள். இதன் விசாரணைக்கு பிறகு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Uttarakhand

பட மூலாதாரம், RAJESH DOBRIYALL/BBC

கல்விப்பிரிவில் நடக்கும் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பான முந்தைய விசாரணையின் அறிக்கையை துணை கல்வி அதிகாரி (பி.இ.ஒ) அன்ஷு பிஷ்ட் சமர்ப்பித்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.சி புரோகித் பிபிசி இந்தியிடம் கூறினார்.

Uttarakhand 1

பட மூலாதாரம், RAJESH DOBRIYALL/BBC

படக்குறிப்பு, முதன்மை கல்வி அதிகாரி ஆர்.சி.புரோகித்

இந்த விசாரணையில் 60 வயதான போஜன்மாதா சகுந்தலா தேவி தனது பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு துணை கல்வி அதிகாரி ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. எனவே, அவரை நீக்குவது விதிகளின்படி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, புஷ்பா பட்டின் பெயரில் உள்ள தீர்மானத்தில், பள்ளி நிர்வாகக் குழுவின் செயலாளர் மற்றும் முதல்வர் கையெழுத்திடாததால் அது நிறைவேற்றப்படவில்லை.

சுனிதா தேவியின் பெயருக்கான எடுத்துரைப்பு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதல் துணை கல்வி அதிகாரியிடம் இருந்து பெறப்படவில்லை. அதனால், அவரை பணியமர்த்தவது விதிகளின்படி இல்லை என்று புரோகித் கூறினார்.

தலைமையாசிரியர் பிரேம் சிங்கின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 13ம் தேதி முதல் சுனிதா தேவி இந்தப் பணியைச் செய்து வருகிறார். அவருக்கு நியமன கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் டிசம்பர் 20ஆம் தேதி வரை மட்டுமே பணியாற்ற முடியும்.

அவர் சமைத்த உணவா உண்ணாத 'ஆதிக்க சமூக' (Savarnas) மாணவர்கள் விவகாரத்துக்கு பிறகு, அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இந்த விவகாரம் சர்ச்சையானது.

இருப்பினும், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழு இந்த விஷயத்தை விசாரிக்கும்; இப்போது இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று முதன்மை கல்வி அதிகாரி ஆர்.சி. புரோகித் தெரிவித்தார்.

Uttarakhand 2

பட மூலாதாரம், Rajesh Dobriyall/BBC

"குழந்தைகளுக்கு பாகுபாட்டை கற்பிக்காதீர்கள்"

இந்த கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பிரதீப் தம்டாவும் சனிக்கிழமை மாலை சம்பாவத் பகுதியை அடைந்தார். 

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நேற்று மாலை சம்பாவத் பகுதிக்கு சென்று போஜன்மாதாவையும், எஸ்டிஎம், கல்வித் துறை அதிகாரிகள், அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராமத்திரையும் சந்தித்து முழு விவரங்களையும் அறிய முயற்சி செய்தேன்," என்று பதிவிட்டிருந்தார்.

 "இந்த மாதிரியான சூழல் நம் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்று துறை அதிகாரிகளிடம் கூறினேன்.

குழந்தைகள் மனதில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், அந்த குழந்தைகளின் தவறு இதில் என்ன என்று கேட்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தைகள் என்ன கற்றுக்கொள்வார்கள், சமுதாயம் எப்படி உருவாகும்? முன்பு ஒன்றாகச் சாப்பிட்டு, விளையாடி, ஒன்றாகப் படித்த குழந்தைகள் இப்போது மனதில் பாகுபாட்டை விதைக்கிறார்கள்", என்றும் அவர் கூறினார்.

 "போஜன்மாதாவின் இரண்டாவது நியமனம் அனைத்து விதிகளின்படி நடந்தால், சுனிதா தேவி ஏன் நீக்கப்பட்டார்? என்று துறை அதிகாரிகளிடம் கேட்டேன். சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து அனுமதி பெற தாமதம் ஏற்பட்டால், அதில் அவரது தவறு என்ன? கல்வி துறையில் நிலவிய தாமதத்துக்காக சுனிதா தேவிக்கு தண்டனை கிடைத்தது." என்று அவர் தெரிவித்திருந்தார்.

 இருப்பினும், இந்த முழு விவகாரம் திங்கட்கிழமை சூடுபிடித்தது.

 திங்கட்கிழமை சுனிதா தேவி வேலைக்கு அழைக்கப்படவில்லை. ஆனால், அந்த பள்ளியின் மற்றொரு போஜன்மாதாவான விம்லேஷ் உப்ரீதி பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

"டெல்லியில் போஜன்மாதா ஆக மாட்டேன்"

இது ஒரு புறம் இருக்க மறுபுறம், சுனிதா தேவி தன் வேலையை திரும்ப பெறாமல் விட மாட்டேன் என்று கூறுகிறார். மேலும், அவர் போராட்டத்தில் அமர விருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அவருக்கு டெல்லியில் அரசு வேலை வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்த உள்ள நிலையில், அது குறித்த அதிகாரபூர்வமான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "டெல்லியில் அரசு வேலை கிடைத்தால் நிச்சயம் நான் செய்வேன். ஆனால், போஜன்மாதா வேலையை செய்யமாட்டேன். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர். 3000 ரூபாயில் டெல்லியில் எப்படி குடும்பத்தை பராமரிக்க முடியும்? டெல்லியில் இரு அறைகள் கொண்ட வீடு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் இருக்கும். இந்த வீட்டை விட்டு சென்றால், என்னால் அங்கு சமாளிக்க முடியாது. தில்லி அரசில் வேறு ஏதேனும் பணி இருந்தால், அதை செய்வேன்," என்கிறார் சுனிதா தேவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: