நிதி ஆயோக் வளர்ச்சிக் குறியீடு: இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் - கோவை, திருச்சி முன்னிலை

Tamil Nadu

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசின் பொது கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI AYOG), சமீபத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை 2030ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டும் என்ற இலக்கில் வெற்றிகரமாகச் செயல்படும் நகரங்களைப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

நீடித்த நிலைத்த வளர்ச்சியில் கேரளா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

நீடித்த நிலைத்த வளர்ச்சியில் இந்திய மாநிலங்களும் நகரங்களும் என்ன நிலையில் உள்ளன, கவனம் செலுத்த வேண்டியது எங்கே என்பன போன்றவற்றை உள்ளடக்கி இந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 75 மதிப்பெண்களோடு கேரளா முதலிடத்திலும் 74 மதிப்பெண்களோடு தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம்(74), ஆந்திர பிரதேசம் (72), உத்தராகண்ட் (72), கோவா (72), கர்நாடகா (72), சிக்கிம் (71), மகாராஷ்டிரா (70), குஜராத் (69) ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

மேலும், நகரவாரியாக நீடித்த நிலைத்த வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் முன்னிலை வகிக்கும் நகரங்களின் தரவரிசையில், கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தையும் திருச்சி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூர்

Coimbatore

நாடு முழுவதும் இருந்து 56 நகரங்களை 77 அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கில் எடுத்து இந்த பட்டியலைத் தயார் செய்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம், தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு (NFHS), பள்ளிகள் தொடர்பான தரவுத் தளமாக செயல்படும் யூ-டைஸ் (U-DISE) போன்றவற்றின் தரவுகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரபூர்வ தரவுகள் ஆகியவற்றின் உதவியோடு நிதி ஆயோக் இந்தப் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்கான காலநிலை இலக்குகளில் ஒவ்வொரு நகரமும் எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கின்றன என்பதைப் பொறுத்து நகரங்களுக்கு 0-100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியளவில் முன்னிலை வகிக்கும் முதல் நகரமாக 75.50 மதிப்பெண்களோடு இமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லா தேர்வாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து 73.29 மதிப்பெண்களோடு கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தையும் 72.36 மதிப்பெண்களோடு சண்டீகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த பட்டியலிலுள்ள முதல் 10 நகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து கோயம்புத்தூர், திருச்சி மற்றும் கேரளாவிலிருந்து திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

பட்டியலிடப்பட்டுள்ள 56 நகரங்களில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தான்பாத், உத்தர பிரதேசத்திலுள்ள மீரட், அருணாச்சல பிரதேசத்தின் இடாநகர், அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி, பிகாரிலுள்ள பாட்னா ஆகிய நகரங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.

"தேசிய அளவில் மட்டுமின்றி நகர அளவிலும் நீடித்த நிலைத்த வளர்ச்சியை கண்காணிப்பதோடு, நிலைத்த வளர்ச்சியை உள்ளூர்மயப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன்மூலம், நிலைத்தன்மை மிக்க வளர்ச்சிக்கான பாதையில் நகர்ப்புறங்களின் நிலை, அவை எதில் சிறந்து விளங்குகின்றன், எங்கு இன்னும் கவனம் தேவை என்பன போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியும்" என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் முனைவர். ராஜீவ் குமார், இந்த அறிக்கை குறித்துப் பேசியபோது, "நகரங்கள் வேகமாக வளர்ச்சிக்கான இன்ஜின்களாக மாறிக் கொண்டேயிருக்கின்றன.

இந்த தரவரிசை பட்டியல் இதோடு நின்றுவிடாமல், எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும் அமையும். நம்முடைய நகரங்களில், அதற்கான கண்காணிப்பு மையங்கள் நிறுவப்படும். நீடித்த நிலைத்த வளர்ச்சியை உள்ளூர்மயபடுத்துவதில் இதுவொரு முக்கியமான மைல்கல்" என்று அவர் கூறியுள்ளார்.

Chennai

பட மூலாதாரம், Getty Images

46 இலக்குகளை உள்ளடக்கிய 77 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தரவரிசையில் 56 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 44 நகரங்கள் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டவை. அவற்றோடு ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட 12 மாநிலத் தலைநகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

மாசுபாடுதான் அடிப்படைக் காரணம்

பசி மற்றும் வறுமையின்மை, ஆரோக்கியம், கல்வித் தரம், பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், காலநிலை செயல்பாடுகள் ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்த நகரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய 'கேர் எர்த்' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், "திருச்சியும் கோயம்புத்தூரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமல்ல. ஏனெனில், ஓரளவுக்குத் திட்டமிட்டு வளர்ந்தவற்றில் இந்த இரண்டு நகரங்களையும் ஆரம்பக் காலத்திலிருந்தே குறிப்பிடமுடியும். நிலைத்தன்மை என்பதே பன்மைத்துவம் வாய்ந்த ஓர் அளவுகோல். ஒவ்வொரு நகரத்திற்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கும். ஒரு சில நகரங்களில் 90 விழுக்காடு கழிவுநீர் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டியிருக்கும்.

வேறு சில நகரங்களில் அது 50 விழுக்காடு இருக்கும். இப்படியாக இருக்கும் சூழலில், இதுபோன்ற பல காரணிகளை உள்ளடக்கிய தரவரிசையின் மூலம் துல்லியமாகச் சொல்ல முடியும். பெருநகரங்களைப் பொறுத்தவரை, நிச்சயத்தன்மை இருக்காது. எதையுமே உறுதியாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையோடு இருக்கும். இப்படியிருக்கும் சூழலில், இதுபோன்ற முயற்சிகளின் மூலம் ஓரளவுக்குத் துல்லியமாக அவற்றின் நிலையைச் சொல்லி விட முடியும்" என்று கூறினார்.

Chennai Pollution

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திடக்கழிவு மாசுபாடு - தீராத நகர்ப்புற சிக்கல்.

"மேலும் சென்னை, திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் இதுபோன்ற முன்னேற்றத்தை அடைவதில் இருக்கக்கூடிய சவால்கள் குறித்து கேட்டபோது, "சென்னையைப் பொறுத்தவரை, நகரம் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிச் செல்லவேண்டுமெனில், அதற்கு இன்னும் காலம் பிடிக்கும். அதிலிருக்கும் அடிப்படையான சிக்கல் மாசுபாடு.

நகர்ப்பகுதிகளின் அனைத்து பிரச்னைகளுக்குமே மாசுபாடுதான் அடிப்படை. கழிவுநீர், திடக்கழிவு, காற்று, ஒலி மாசுபாடு என்று அனைத்துமே அதில் அடங்கும். அதற்கென திறன்மிக்க செயல்திட்டத்தை உருவாக்காதவரை இதைச் சரி செய்ய முடியாது. திருப்பூரைப் பொறுத்தவரை, அங்கு எந்தளவுக்கு நல்லது நடக்கிறதோ அதை சரிக்கட்டும் அளவுக்கு மாசுபாடுகளும் ஏற்படுகின்றன.

இருப்பினும், திருப்பூர் சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் சரியான செயல்திட்டத்தை வடிவமைத்தால், நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தலாம்.

முதலில், தமிழ்நாடு முழுக்கவே மறையிடர் மதிப்பீட்டைச் (Risk Assessment) செய்யவேண்டும். நம்முடைய நகரங்களில் இருக்கும் பிரச்னைகள் என்னவென்பதே நமக்கு முழுமையாகத் தெரியாது. அதையும் மாநிலம் முழுக்க மேம்போக்காகச் செய்யாமல், நகரவாரியாகச் செய்யவேண்டும். அதைத்தொடர்ந்து, நகரவாரியாகத் தெளிவான இலக்குகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் செய்யவேண்டியது, ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியது, எட்டு ஆண்டுகளில் செய்ய வேண்டியது என்று தனித்தனியாக நிர்ணயித்துச் செயல்படுத்தவேண்டும்," என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :