'தாஜ்மஹால்' இல்லம்: மனைவிக்காக இந்திய தொழிலதிபர் எழுப்பிய காதல் சின்னம்

இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் மனைவிக்காக தாஜ்மஹாலைப் போலவே தோன்றும் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
14-வது முறையாக குழந்தை பெற்றெடுத்தபோது இறந்த தன் மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் ஷாஜஹான் எழுப்பிய கல்லறையே தாஜ்மஹால். ஆக்ராவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்லறை, காதலின் நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது.
பலவித நுணுக்கமான வலைப்பின்னல்களுடன் பளிங்கு கற்களால் ஆன தாஜ்மஹால், இந்தியாவில் பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, நாளொன்றுக்கு 70,000 பேர் இங்கு வந்து சென்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி (52), தன் மனைவிக்காக தாஜ்மஹாலைப் போலவே தோன்றும் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
50 ஏக்கர் நிலப்பரப்பில் பிரும்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த 'தாஜ்மஹால்' வீட்டுடன் மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Anand Prakash Chouksey
"என் மனைவிக்கு மட்டுமல்லாமல், என்னுடைய ஊருக்கும் மக்களுக்குமான பரிசு இது" என, சௌக்சி பிபிசியிடம் தெரிவித்தார்.
பலரையும் ஈர்த்துள்ள இந்த இல்லத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் அங்கு புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இங்கு வரும் பார்வையாளர்கள், பளிங்கு சுவர்கள், தளங்கள், மலர் வடிவங்கள், சிக்கலான ஜன்னல் வடிவமைப்புகளை கண்டு வியக்கின்றனர்.
இந்த இல்லத்தில் இரண்டு தளங்களிலும் தலா 2 படுக்கையறைகள் உள்ளன. இங்கு நூலகமும், தியான அறையும் உள்ளன. பளிங்கால் ஆன வரவேற்பறையும், வளைவான வடிவமைப்புடன் கூடிய படிக்கட்டுகளும், தங்க நிறத்தாலான மேற்கூரையும் உள்ளன.
இந்த இல்லத்துக்கு தாஜ்மஹால்தான் உத்வேகம் எனக்கூறும் சௌக்சி, உள்வடிவமைப்பு அனைத்தும் இஸ்லாமிய கலையை மட்டுமே கொண்டிருக்கவில்லை எனவும், சோபாக்கள், திரைச்சீலைகள் போன்றவற்றில் சமகால பாதிப்புகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்த இல்லத்தைக் கட்ட மூன்றாண்டுகள் ஆகியுள்ளன. இந்த வீட்டைக் கட்ட சௌக்சியும் அவரது மனைவியும் பலமுறை தாஜ்மஹாலுக்கு நேரடியாக சென்று வந்துள்ளனர்.
"இணையத்தில் உள்ள தாஜ்மஹாலின் முப்பரிமாண புகைப்படங்களை நாங்கள் பயன்படுத்தினோம்" என சௌக்சி தெரிவித்தார். வீட்டைக் கட்டிய பொறியாளர்கள் தாஜ்மஹாலின் உண்மையான அளவில் மூன்றில் ஒரு பங்காக குறைத்து இந்த வீட்டைக் கட்டியுள்ளனர்.
"பலரும் இங்கு திருமணத்துக்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்புகளை நடத்துகின்றனர்" என சௌக்சி தெரிவித்தார்.
"நான் அவர்களை தடுப்பதில்லை. ஏனெனில், எங்கள் கிராமத்தில் பலரும் எங்களுக்கு நெருக்கமானவர்களே. என்னுடைய வீடு அனைவருக்கும் திறந்திருக்கும். எனினும், இது எங்கள் வீடு. நாங்கள் இங்கு வாழ்வதால், அனைத்துப் பார்வையாளர்களும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதில்லை".
தாஜ்மஹால் போன்று வீட்டைக் கட்டியதில், சௌக்சி முதலாவது நபர் அல்ல.

பட மூலாதாரம், Anand Prakash Chouksey
2013-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன் மனைவிக்காக தாஜ்மஹால் போல ஒரு வீட்டைக் கட்டியுள்ளார்.
ஆனால், இது தன்னுடைய மனைவிக்கு மட்டும் சமர்ப்பணம் அல்ல என்கிறார் சௌக்சி.
"இன்று நம் நாட்டில் அதிக வெறுப்புணர்வு உள்ளது. சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். எனவே, நான் இதன் மூலம் அன்பை பரப்ப முயற்சிக்கிறேன்" என சௌக்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாகவும், சகிப்பின்மையை ஊக்குவிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 2017-ம் ஆண்டில் பாஜக தலைவர் ஒருவர் தாஜ்மஹாலை, "இந்திய கலாச்சாரம் மீது படிந்த கறை. அது துரோகிகளால் கட்டப்பட்டது"என கூறியிருந்தார்.
"சமூக வித்தியாசங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான கருத்துகளைக் கடந்த அன்பின் சின்னமாக நான் இந்த வீட்டைப் பார்க்கிறேன்." என சௌக்சி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












