ரயில் மோதி 3 யானைகள் பலி: தமிழ்நாடு வனத்துறை, பாலக்காடு ரயில்வே மோதல் - என்ன நடந்தது?

- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
கோவையில் ரயில் மோதி மூன்று யானைகளின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படும் ரயில் ஓட்டுநர்களை விசாரித்ததற்காக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ` யானைகள் இறப்பதை வனத்துறையின் பிரச்னையாக ரயில்வே நிர்வாகம் பார்க்கிறது. அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்குக் காரணமாக உள்ளது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடந்தது?
தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை அருகே உள்ள ரயில் பாதையில் கடந்த 26 ஆம் தேதி மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது. நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி கிராமத்தின் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்தபோது மூன்று காட்டு யானைகள் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளன. இதனைக் கவனித்த ரயில் ஓட்டுநரால் இஞ்சினின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் யானைகளின் மீது ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு ஆண் யானைகளும் ஒரு பெண் யானையும் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் மரணம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தமிழ்நாடு வனத்துறையினர் தண்டவாளத்தில் இருந்து யானைகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். தொடர்ந்து ரயில் ஓட்டுநர்கள் அகில் மற்றும் சுபேர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் பேசுகையில், ரயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரிடம் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் கட்டுப்பாடுகளை மீறி ரயில் இயக்கப்பட்டது தெரிந்தால் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வனத்துறை அதிகாரிகள் சிறைப்பிடிப்பு
ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 27 ஆம் தேதி ரயிலின் வேகம் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் 5 பேர் பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலத்துக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியர்களால் வனத்துறை வனவர்கள் அருண்சிங், அய்யப்பன், வனக்காப்பாளர் சசி, பீட்டர் உள்பட 5 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ரயில் ஓட்டுநரையும் உதவியாளரையும் விடுவிக்கும் வரையில் உங்களையும் விடப்போவதில்லை என உறுதியாகக் கூறியதால் அங்கு பதற்றம் நிலவியது.

பாலக்காட்டில் மதியம் 2.30 மணியளவில் தமிழ்நாடு வனத்துறை ஊழியர்கள் சிறைப்பிடிக்ககப்பட்ட நிலையில், அவர்களோடு தமிழ்நாடு தரப்பில் இருந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரயில் இஞ்சினின் வேகத்தைக் கண்டறியும் கருவியை தமிழ்நாடு வனத்துறை உரிய அனுமதியின்றி கழட்டியதாகவும் ரயில்வே தரப்பில் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து நான்கு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகே விடுவிக்கப்பட்டனர். பின்னர், வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். இதனை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், கோவையில் உள்ள கேரள சமாஜத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மீட்டது எப்படி?
``வனத்துறை ஊழியர்களை மீட்டது எப்படி?" என கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ரயிலின் வேகத்தைக் காட்டும் ஸ்பீடோமீட்டரில் உள்ள தரவுகளை கணக்கெடுப்பதற்காக வனத்துறை சார்பில் சென்றனர். அது விசாரணையின் ஓர் அங்கம்தான். இதனை அறிந்து அங்கிருந்த லோகோ பைலட்டுகள் சிலர் கோபமடைந்ததால் நிலைமை வேறு மாதிரி சென்றது. ரயிலின் ஓட்டுநர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆனால், அங்குள்ள உயர் அதிகாரிகள் நிலைமையை புரிந்து கொண்டனர். அது ஒரு சிறு குழப்பம்தான். வேறு எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார்.

`` அதிவேகத்தில் ரயிலை இயக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததா?" என்றோம். ``ஸ்பீடோமீட்டரில் உள்ள தகவல்களைப் பெற்ற பிறகே அதுகுறித்த விவரங்கள் தெரியவரும். யானைகள் மரணம் தொடர்பாக, நேற்று (27 ஆம் தேதி) ரயில்வே அதிகாரிகள் கோவைக்கு வந்து எங்களிடம் நீண்ட நேரம் விவாதித்தனர். எங்களின் தலைமை வனப் பாதுகாவலரிடமும் பேசினர். இந்த விவகாரத்தில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, என்ன நடந்தது என்பதை பதிவு செய்வோம். இதற்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
ரயில்வே நிர்வாகம் சொல்வது என்ன?
தமிழ்நாடு வனத்துறை ஊழியர்களை சிறைப் பிடித்தது தொடர்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத்திடம் பேசினோம். `` தற்போது நிலைமை சீராகிவிட்டது. லோகோ பைலட் தரப்பிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாடு வனத்துறை தரப்பில் ரயில் ஓட்டுநரை விடுவிக்கவில்லை. இதனால் சக ஊழியர்கள் போராட்டம் செய்தனர். இது சரியானதும், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் ஸ்பீடோமீட்டர் தொடர்பான விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு லோகோ பைலட்டுகளை விடுவித்தனர். வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை. இந்த விவகாரத்தில் நடைமுறை என்னவோ அதனை நாங்கள் பின்பற்றுவோம்" என்கிறார்.

யானைகளின் தொடர் மரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், `` இந்திய வனஉயிரின சட்டப்படி அட்டவணை 1ல் உள்ள விலங்காக யானை உள்ளது. நாட்டின் உயிர்ச்சூழலை பாதுகாப்பதில் யானை முக்கியப் பங்கு வகிப்பதால் யானையைக் காப்பாற்றுவது என்பது அரசின் கொள்கையாகவும் உள்ளது. சூழலியல் பார்வையிலும் அது மிகவும் முக்கியமானது. ஆனால், இவ்வாறு ரயிலில் அடிபட்டு இறப்பது என்பது மிகவும் வேதனையானது" என்கிறார்.
யானை மரணங்கள் தொடர்வது ஏன்?
தொடர்ந்து, விபத்து நடந்த காட்டுப் பகுதியில் இயங்கும் ரயில் பாதைகளின் தன்மை குறித்துப் பேசுகையில், `` போத்தனூருக்கும் வாளையாருக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதியில் 2 ரயில் பாதைகள் உள்ளன. அதனை ட்ராக் ஏ, ட்ராக் பி என்கின்றனர். மதுக்கரை வனச்சரகத்தில் சில பகுதிகளிலும் வாளையார் வனச் சரகத்தில் சில பகுதிகளும் இவற்றில் வருகின்றன. தமிழ்நாடு, கேரளா என இரண்டு மாநிலத்துக்குள்ளும் இந்த ரயில் பாதைகள் செல்கின்றன.
இதில் ட்ராக் ஏ பாதையில் 8 கிலோமீட்டரும் ட்ராக் பி பாதையில் உள்ள 16 கி.மீட்டரும் காட்டுக்குள் செல்கிறது. யானைகளின் வீடான காட்டுக்குள்தான் இந்த பாதைகள் செல்கின்றன. இங்கே 2007 ஆம் ஆண்டு 3 யானைகள் ரயிலில் அடிபட்டன. அப்போது ரயில்வே நிர்வாகம், `ரயில் பாதைகள் மீது யானைகள் வந்ததால் வனத்துறை மீது நடவடிக்கை எடுப்போம்' என்றது. வனவிலங்கு உயிரின சட்டப்படி யானையைக் கொன்றதால் பாலக்காடு கோட்ட மேலாளரைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதன்பிறகே கேரள ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்" என்கிறார்.

``பிறகு என்ன நடந்தது?" என்றோம். `` வடஇந்தியாவில் ராஜாஜி தேசிய பூங்காவில் ரயில்வே பாதைகள் செல்வதால் யானைகள் அடிபட்டு இறந்தன. இதனை சரிசெய்வதற்கு இந்திய வன உயிரின அறக்கட்டளை அமைப்பானது, ஏராளமான பரிந்துரைகளை அளித்தது. அதனை அமல்படுத்தியதால் விபத்துகள் குறைந்தன. அவர்களை வைத்துக் கொண்டு ஆய்வு நடத்துவதற்கு கேரள ரயில்வே நிர்வாகம் முன்வந்தது. அவர்களும் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தனர். இந்தப் பகுதியில் யானைகள் மீது ரயில் மோதாமல் இருப்பதற்கு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் ரயிலின் வேகத்தைக் குறைப்பது என்பது மிக முக்கியமானது. அதாவது 25 கி.மீட்டருக்குக்கீழ் ரயிலை இயக்க வேண்டும். அந்தப் பகுதியைக் கடக்கும் வரையில் ஒலியெழுப்பிக் கொண்டே செல்ல வேண்டும் என்பன முக்கியமானவை.
மேலும், யானைகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை வனத்துறை கண்காணித்து லோகோ பைலட்டுக்குத் தகவல் கொடுத்தால் அவர் கவனமாக இருப்பார். இவை சில காலம் அமல்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தைக் கவனித்தால் அந்த ரயில் பாதையானது நேர்கோடாக உள்ளது. வனத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வேகத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது. மெதுவாக வராமல் இருந்தது பெரும் குற்றம். இதில், யானைகள் நடமாட்டத்தை வனத்துறை முறையாகக் கண்காணிக்கிறதா எனத் தெரியவில்லை. இன்றைக்கு நவீன முறையில் யானைகளைக் கண்டறிவதற்கான முறைகள் வந்துவிட்டன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார்.
"யானைக்கு மரியாதை கொடுத்து அதன் வாழ்விடத்தை உறுதி செய்யும் பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. இதனை வனத்துறையின் பிரச்னையாக ரயில்வே நிர்வாகம் பார்க்கிறது. நான்காயிரம் கிலோ உள்ள ஓர் உயிர் மீது ரயில் மோதுவதால் அது உயிரிழப்பது மட்டுமல்லாமல் தண்டவாளம் வெளியே வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் பயணிகளின் உயிருக்கும் இதில் ஆபத்து உள்ளது. அதனை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
பிற செய்திகள்:
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












