அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது

அரசுப் பேருந்தில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவருக்கு, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணமானது.
கல்லூரி விடுமுறை என்பதால் விழுப்புரத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிலிருந்து கெடிலத்திலுள்ள தாய் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இப்படி, வியாழக்கிழமை இரவு விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு நகர பேருந்தில் பயணித்துள்ளார்.
பெரும்பாக்கம் அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணித்துள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் சிலம்பரசன் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், அந்த மாணவி கோனூரில் இறங்கி தனது கணவருடன் சென்று விழுப்புரம் காணை காவல் நிலையத்தில் நடத்துநர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசனை கைது செய்து விசாரணை செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஓடும் பேருந்தில் அரசு பேருந்து நடத்துநர் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "விழுப்புரத்தில் இருந்து அரசு பேருந்தில் மாணவி பயணித்துள்ளார். அவர் இறங்கும் முன்பு வேறு பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் இறங்கியுள்ளனர். ஆனால் மாணவி இறங்க வேண்டிய கோனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அந்த சமயத்தில் பேருந்தில் தனியாக இருந்த தன்னிடம் நடத்துநர் பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து நடத்துநரைக் கைது செய்து அவர் மீது, பாலியல் சீண்டல், பெண்ணை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடத்துநருக்கு உடந்தையாக பேருந்து ஓட்டுநர் செயல்பட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்," எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் அன்புச்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன் உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- "இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு பூஜ்ஜியமாக உள்ளது" தமிழ் எம்.பி. சிறீதரன் பேட்டி
- சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட மெடா - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம்
- காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை
- Mi 17 ரக ஹெலிகாப்டரின் உயர் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?
- "உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது": அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








