Mi 17 ரக ஹெலிகாப்டரின் உயர் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தரைப்படையின் ஓய்வுபெற்ற கர்னல் கணேசன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து:
கே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இம்மாதிரி மிக முக்கியமானவர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர்களுக்கான பாதுகாப்பு சோதனை எப்படி இருக்கும்?
ப. விபத்து நடந்த தினம் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். பல ராணுவ தளபதிகள் இருக்கிறார்கள் என்றாலும், முப்படைகளின் தலைவர் ஒரு ராணுவ விமான விபத்தில் உயிரிழப்பது மோசமானது.
அவர் பயணம் செய்த Mi 17 V5 என்ற இந்த ஹெலிகாப்டர் ரஷ்யத் தயாரிப்பு. இந்தியாவில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் கிட்டத்த 150 என்ற எண்ணிக்கையில் உள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த ஹெலிகாப்டர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். பல முறை பயணம் செய்திருக்கிறார்கள். இந்த ஹெலிகாப்டர் தவிர, நம்மிடம் சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஆனால், இந்த சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் என்பதால், 2008க்குப் பிறகு இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் துவங்கினோம். இந்த ஹெலிகாப்டர் மிகவும் உறுதியான, பாதுகாப்பான ஹெலிகாப்டர்.
அது தவிர, ஒரு முக்கியப் பிரமுகர் ஹெலிகாப்டரில் பயணிக்கப் போகிறார் என்றால், அதற்கு முன்பாக ஹெலிகாப்டர் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். எந்த விமானி அந்த ஹெலிகாப்டரை இயக்கப் போகிறாரோ அவர், ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக அதே பாதையில் ஹெலிகாப்டரை இயக்கி, எங்கு இறக்க வேண்டுமோ அங்கு ஹெலிகாப்டரை இறக்கி எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையெல்லாம் துல்லியமாக குறித்துக்கொள்வார்கள்.
அந்த ஹெலிகாப்டர் திரும்பி வந்து உரிய இடத்தில் நிறுத்தப்பட்டதும் அதனை வேறு யாரும் நெருங்கிவிடாதபடி பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். அதேபோல, பல ஹெலிகாப்டர்கள் இருக்கும்பட்சத்தில் எந்த ஹெலிகாப்டரைத் தேர்வுசெய்வது என்பதிலும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. 10 வருடம் பழைய ஹெலிகாப்டரும் 7 வருடம் பழைய ஹெலிகாப்டரும் இருந்தால் 7 வருடம் ஆன ஹெலிகாப்டரையே தேர்வுசெய்வார்கள். தேய்ந்து போன பாகங்களைக் கொண்ட ஹெலிகாப்டரைத் தேர்வுசெய்ய மாட்டார்கள்.
இவையெல்லாம் போக, திடீர் தேவைக்கென மற்றொரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி முக்கியப் பிரமுகர்களின் பயணத்திற்கு இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த ஹெலிகாப்டர்.
கே. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?
ப. எல்லா பாதுகாப்பு சோதனைகளுக்கும் வரையறை உண்டு. நேற்று சர்வீஸ் சென்றுவந்த வாகனம், இன்று சாலையில் செல்லும்போது தீ பிடித்து எரிகிறது. ஆகவே இயந்திரக் கோளாறுகளுக்கு மனித முயற்சிகளைக் குற்றம் சொல்ல முடியாது. எல்லாச் சோதனைகளையும் செய்த பிறகும், தவறே நடக்க முடியாது எனச் சொல்ல முடியாது. இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை எந்த அளவுக்குக் கண்டுபிடிக்க முடியமோ, அவ்வளவுதான் கண்டு பிடிக்க முடியும். திடீரென பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அதை யாராலும் சொல்ல முடியாது.

பட மூலாதாரம், Getty Images
கே. இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலையிலும் பறக்கக்கூடியவையா?
ப. ஆம். இதனை 'all weather ஹெலிகாப்டர்' என்பார்கள். உலகில் பாதி நாடுகளுக்கு மேல் தங்கள் நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் பறப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். அதன் பாதுகாப்பு அம்சங்கள் அந்த அளவுக்கு உயர்ந்தவை. அதன் 'காக்பிட்டின்' பக்கவாட்டுப் பகுதிகள் ஆயுதம் தாக்காத வகையில் பிளேட்டிங் செய்யப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர் விழுந்தாலும் விமானி பாதுகாக்கப்படும் வகையில் அந்த காக்பிட் உருவாக்கப்பட்டிருக்கும்.
எரிவாயு நிரப்பும் கலன் பாலியுரேத்தின் நுரையால் இரு முறை இன்சுலேட் செய்யப்பட்டிருக்கும். மேலே இருந்து கீழே விழுந்தால், அந்த எரிபொருள் கலன் வெடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடு. இந்த விபத்தில்கூட, திறந்த வெளியில் ஹெலிகாப்டர் விழுந்திருந்தால் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் விழுந்ததால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டது.
கே. ஹெலிகாப்டர் விபத்தில் நாம் பல தலைவர்களை இழந்திருக்கிறோம். இருந்தபோதும் நாம் ஏன் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது..?
ப. முக்கியப் பிரமுகர்களின் வேலைப் பளு அந்த அளவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் இருக்கும். இதே ராவத் திம்மப்பூரில் கோர் கமாண்டராக இருக்கும்போது சீட்டா என்ற ஹெலிகாப்டரில் சென்று, அதில் உயிர் பிழைத்தார். ஆகவே, விபத்துகளை முன்பே எதிர் நோக்க முடியாது.
அவர் சூலூரிலிருந்து வெலிங்கடனுக்கு சென்றால் 3- 4 மணி நேரம் ஆகும் என்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருக்கிறார். உயர் அதிகாரிகள், பெரிய தலைவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாகனம்தான் இது.
கே. முப்படைகளின் தளபதி மரணமடைந்திருக்கும் நிலையில், அவரது பணிகளை யார் கவனிப்பார்கள், அடுத்ததாக யார் அந்தப் பொறுப்புக்கு வருவார்கள்?
ப. Chief of Defence Staff என்ற பதவியை வகிக்கும் முதல் நபர் இவர்தான். CDSன் பதவி காலியாகும்போது, தரைப்படை, விமானப் படை, கடற்படைகளின் தளபதிகளில் யார் அனுபவம் வாய்ந்தவரோ அவர் இந்தப் பொறுப்புக்கு வரக்கூடும். இதில் பல்வேறு அம்சங்களை ஆலோசித்து, இதனை முடிவுசெய்வார்கள். இப்போது ஜெனரல் முகுந்த் நர்வானே மிகவும் மூத்தவராக இருக்கிறார். அவரை நியமிக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
கே. இந்த நியமனங்களுக்கு காலக் கெடு ஏதாவது இருக்கிறதா?
ப. முப்படைகளின் தளபதிகள் ஓய்வு பெறும்போது, அதனை எப்படி நிரப்புவது என்பதற்கு முறைகள் இருக்கின்றன. Chief of Defence Staff என்ற பதவியைப் பொறுத்தவரை, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவி. தினசரி நடவடிக்கையில் அவர்களுடைய பொறுப்பு என்பது மிகக் குறைவு. மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து, முப்படைகளுக்கும் பிரதமருக்கும் இடையில் இவர் பாலமாக இருப்பார். ஆகவே விரைவில் ஒருவரை நியமிப்பார்கள் என நம்பலாம்.
கே. இப்போது ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் முப்படைகளின் தளபதிகள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள் அப்படித்தானே?
ப. 1994ல் தரைப்படையின் தளபதியாக இருந்த பிபின் சந்திர ஜோஷி என்பவர் பதவியிலிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார். அப்போது துணைத் தளபதியாக இருந்தவர் உடனடியாக அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்தப் பதவிக்கு அப்படி துணைத் தலைமைத் தளபதியென யாரும் கிடையாது. முப்படைகளின் தளபதிகளில் மூத்தவர், அந்தப் பதவிக்கு தகுதியானவராகிவிடுகிறார்.
கே. இந்த ஹெலிகாப்டரில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டிருக்கிறது. அதில் என்ன விவரங்கள் இருக்கலாம்?
ப. இந்த ஹெலிகாப்டரில் டிஜிடல் குரல் பதிவுக் கருவி இருக்கும். அதில் விமானி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருடன் பேசிய குரல் பதிவு இருக்கும். ஹெலிகாப்டர்களைப் பொறுத்தவரை, அவை குறைந்த உயரத்தில்தான் பறக்கும். பிரச்னை ஏற்பட்டுவிட்டால், ஏதாவது செய்வதற்கான நேரம் என்பது மிகக் குறைவாக இருக்கும். ஏனென்றால் விமானங்கள் 33,000 அடி உயரத்தில் பரப்பவை. பிரச்னை ஏற்பட்டால், விமானி என்ன பிரச்னை என்பதை கட்டுப்பாட்டு அறைக்கு சொல்ல முடியும். ஆனால், ஹெலிகாப்டர்களைப் பொறுத்தவரை 5,000 - 6,000 அடி உயரத்தில் பறப்பவை. பிரச்னை ஏற்பட்டு கீழே விழ ஆரம்பிக்கும்போது விமானியால் பெரிதாக ஏதும் செய்ய முடியாது.
கே. இந்த விபத்து தொடர்பாக பல்வேறு யூகங்களை முன்வைக்கிறார்கள்.. அது சரியா?
ப. இந்த யூகங்களின்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. முன்பே சொன்னதுபோல சோதனைகள் முடிந்த பிறகு ஹெலிகாப்டர் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும். சதி வேலைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தென்னிந்தியாவில் இதுபோன்று நடப்பதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
பிற செய்திகள்:
- இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமியற்ற முயற்சி: 'போதை பொருளா மூலிகையா' என விவாதம்
- வெளியேற்றப்பட்டாரா விராட் கோலி? - வருத்தத்தில் ரசிகர்கள், விளக்கமளித்த கங்குலி
- டெல்லியில் பிபின் ராவத் உடல் - அஞ்சலி செலுத்தி வரும் முக்கிய நபர்கள்
- டெல்லியில் பிபின் ராவத் உடல் - அஞ்சலி செலுத்தி வரும் முக்கிய நபர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












