டெல்லியில் பிபின் ராவத் உடல் - இன்று இறுதிச் சடங்கு

வெலிங்டன் ஹெலிகாப்டர் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு அவர்கள் யார் என்று அடையாளம் காண்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்கு இது ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் எந்த உடல் யாருடையது என்பதை அடையாளம் காண்பதற்குத் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

இன்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லித்தர் ஆகியோரது உடல்கள் மட்டுமே இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் அறியப்படும் வரை அந்த உடல்கள் டெல்லியில் உள்ள ஆர்மி பேஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும்.

"உயிரிழந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன," என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

"அறிவியல்பூர்வமான முயற்சிகள் மட்டுமல்லாது உடல்களை அடையாளம் காண்பதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உதவியும் நாடப்படும்; எந்த உடல் யாருடையது என்று அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது குடும்பத்திடம் இறந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்படும்," என்று இந்திய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிபின் ராவத் மரணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான பயிற்சி பள்ளியின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

உடல்கள் அடையாளம் காணப்படுவது முடிந்த பின்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து விட்டு அனைவருக்கும் முறையான ராணுவ மரியாதை செலுத்தப்படும் என்றும் இந்திய ராணுவம் கூறுகிறது.

புதன்கிழமையன்று குன்னூர் வெலிங்டன் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை விசாரணை நடத்தி வருகிறது.

இந்திய விமானப் படையை சேர்ந்த குரூப் கேப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். தற்பொழுது அவருக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தபோது எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

புதன்கிழமை மதியம் 12:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய இந்த ஹெலிகாப்டர், ஏழு நிமிடங்களுக்கு முன்பு 12:08 மணிக்கு விபத்துக்குள்ளானது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை காலை இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுக்குப் பின்னர் இந்திய முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக 2019இல் நியமிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: