புத்தாண்டு 2022: இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை - இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவின் இரண்டாவது அலை உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த 2021ஆம் ஆண்டில், விராட் கோலியை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20, என மூன்று ஃபார்மெட்டுக்கும் தலைவராக இருந்த விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தலைவராக உள்ளார். இப்படி இந்த ஆண்டில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள், வெற்றிகள், தோல்விகள், பதவி விலகல் ஆகியவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
அஸ்வின் அடித்த சதமும் சரித்த 8 விக்கெட்டுகளும்:

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 2021-ல் இங்கிலாந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்தன. முதல் டெஸ்டில் இங்கிலாந்து இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 329 ரன்களைக் குவித்தது. அடுத்து பேட் செய்த இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் தனி நபராக 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் எல்லாம் சடசடவென சரிய அஸ்வின் தனியாளாக மிடில் ஆர்டரில் களமிறங்கி 148 பந்துகளுக்கு 106 ரன்களை விளாசி இந்தியாவை 286 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து 164 ரன்களுக்குள் சுருண்டது. இந்த இன்னிங்ஸிலும் அஸ்வின் 53 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
படுமோசமான முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு கோலிப் படை இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து, 3 - 1 என டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா.
காபா கோட்டையைத் தகர்த்த இந்தியா:
1988ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில், பிரிஸ்பர்ன் நகரத்தில் உள்ள காபா மைதானத்தில் எந்த ஓர் அணியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் வெல்லவில்லை. ஆனால் இந்தியாவின் இளம்படை, காபாவில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டு புதிய சாதனை படைத்தது.
பல முக்கிய டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்தியாவை நம்பர் 1 டெஸ்ட் அணியாக்கிய விராட் கோலி, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்கி அணியை வழிநடத்தினார்.
மிளிர்ந்த நடராஜன்:

பட மூலாதாரம், Getty Images
அதே ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில்தான் தமிழ்நாட்டின் நடராஜன் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். களமிறக்கிவிடப்பட்ட முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலேயே ஒரு மெய்டன் ஓவர் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 ரன்களுக்கு 3 விக்கெட், இரண்டாவது போட்டியில் 20 ரன்களுக்கு 2 விக்கெட், மூன்றாவது போட்டியில் 1 விக்கெட் என இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார் நடராஜன். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்ற பின், கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்தார் விராட் கோலி.
ஓவல் வெற்றி:
இந்தியா, இங்கிலாந்து நாட்டுக்கு கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி டிராவானது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியை இந்தியாவும், லீட்ஸில் நடந்த மூன்றாவது போட்டியை இங்கிலாந்தும் வென்றது.
நான்காவது போட்டி, ஓவல் மைதானத்தில் நடந்தது. அப்போட்டியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. உலகின் பெருமை மிக்க கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஓவலில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி அது என்பது குறிப்பிடத்தக்கது.
1971-ஆம் ஆண்டில் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது நினைவுகூறத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தோல்வி:
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வியில் தொடங்கிய இந்திய அணியின் பயணம், பாதியிலேயே முடிந்தது. இது கோலியின் ஐசிசி கோப்பைகளை வெல்லாத தோல்விப் பட்டியலில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது.
மத ரீதியிலான விமர்சனத்தில் ஷமிக்கு ஆதரவு:

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதனை தொடர்ந்து இஸ்லாமியரான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளத்தில் சிலர் கடுமையாக விமர்சித்தனர், அவர் மேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு ஆதரவாக விளையாடியதாகவும், பாகிஸ்தானுக்கு அதிக ரன்களை விட்டு கொடுத்தாகவும் சில இணைய பயனர்கள் குற்றம்சாட்டினர்.
"ஒருவரை அவரின் மதம் சார்ந்து தாக்கி பேசுவதுதான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாக இருக்க முடியும்" என ஷமிக்கு ஆதரவாகப் பேசினார் அணித் தலைவர் விராட் கோலி.
சமூக வலைதளங்களில் கேலி செய்பவர்கள் நிஜ வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாத முதுகெலும்பற்றவர்கள் என கோலி தெரிவித்தார்.
நாட்டிற்காக அவர் சிறப்பாக செயலாற்றியதை தவிர்த்துவிட்டு இவ்வாறு பேசுபவர்கள் குறித்து யோசித்து தாம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கோலி தெரிவித்தார்.
மேலும், 200 சதவீதம் ஷமிக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாகவும் கோலி கூறியது இணையத்தில் பெரிதும் போற்றி கொண்டாடப்பட்டது.
ரவி சாஸ்திரி ஓய்வு :
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, டி20 உலகக் கோப்பைக்குப் பின் பதவி விலகினார். புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அடுத்த இரு ஆண்டுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பல முக்கிய ஐசிசி கோப்பை தொடர்கள் வரும் சூழலில்,ரோஹித் ஷர்மா, விராட் கோலியோடு இணைந்து ஒரு வெற்றி அணியை உருவாக்க வேண்டிய இமாலயப் பணியில் உள்ளார் டிராவிட், ஆனால் காலம் குறைவாகத்தான் இருக்கிறது.
தலைவர் பதவி சர்ச்சை:

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தோற்ற பின், ஒன்பது ஆண்டு காலமாக இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி இந்தியாவின் டி20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதை தன் டுவிட்டரில் பதிவிட்டார் கோலி.
ஒருநாள் போட்டிக்கு விராட் கோலி தலைமை தாங்குவது தொடர்பாக சர்ச்சை சூழ்ந்தது.
முதலில் இந்தியாவின் டி20 அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் டி20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகவும், பிசிசிஐ தரப்போ, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி தலைவர்களை வைத்துக் கொள்ள முடியாது என்று கூறியதாகவும் சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார் கோலி.
இந்தியாவுக்காக பல முக்கிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த விராட் கோலிக்கு முறையாக மரியாதை கொடுக்கப்படவில்லை என இணையத்தில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர், பிசிசிஐ அமைப்பை கடுமையாக விமர்சித்தனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இரட்டை தலைமை:

பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை விராட் கோலியும், ஒருநாள் மற்றும்டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும் கேப்டனாக வழிநடத்தி விளையாடத் தொடங்கியுள்ளனர்.
"இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இரட்டை தலைமையை, அணித்தலைமை மாற்ற காலத்தில் (Transition Period) மட்டுமே பரிசோதித்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை முழுமையாக இரட்டை தலைமையை முயன்று பார்க்க உள்ளது இந்திய கிரிக்கெட்.
இதில் சிக்கல் என்னவென்றால் சமகால இரு பெரும் நட்சத்திர வீரர்கள் அனைத்து ஃபார்மெட்களிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்டில் விராட் கோலியின் கீழ் ரோஹித் ஷர்மாவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித்தின் கீழ் விராட்டும் விளையாட வேண்டிய சூழல் நிலவுகிறது. இது இந்தியாவுக்கு புதிது.
ஆனால் மற்ற நாடுகளில் இந்த இரட்டை தலைமை (ரெட் பால், வொயிட் பால்) சில நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. அதே போல 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இருவருமே தங்கள் நாட்டின் டெஸ்ட் அணிகளுக்கு தலைமை தாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் சமகாலத்தில் ஒருநாள் மற்றும் டி20 போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவது குறைவு.
ஆனால் இந்தியாவில் மூன்று ஃபார்மெட்டிலும் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே ஒரே அணியை இருவர் வழிநடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது" என பிபிசி தமிழிடம் தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டார் டெக்கன் கிரானிக்கள் நாளிதழின் விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் சந்தோஷ் குமார்.
பிற செய்திகள்:
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- மத்திய கிழக்கை 2021இல் உலுக்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள்
- 'விமானங்களில் இந்திய இசை' - விமானப் போக்குவரத்து அமைச்சர் கடிதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












