’83’ படத்தில் ரன்வீர் சிங்கை பார்த்தால் அவர் கபில்தேவ் என்றே சொல்வார்கள் - மதன் லால்

'83' படத்தில் ரன்வீர் சிங்

பட மூலாதாரம், @RANVEEROFFICIAL

    • எழுதியவர், மதன்லால்
    • பதவி, 1983 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்

1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்தியா வென்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆதாரமாகக்கொண்ட '83' படத்தை, எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 1983 உலக சாம்பியன் அணி வீரர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.

முதல் பார்வையிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கபீர் கான் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பை பார்க்கும் அனைவரும் அவர் கபில்தேவ் என்றுதான் சொல்வார்கள். கபில்தேவ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. ரன்வீர் சிங் மற்றும் ஹார்டி சந்து (மதன் லால் வேடத்தில்) ஆகியோருடன் கூடவே மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் சலிப்பு ஏற்படாது. விளையாட்டு குறித்த படங்களில் இது பல சமயங்களில் நடக்கும். ஆனால் கபீர் கான் இந்தப் படத்தில் எங்குமே தொய்வு ஏற்பட அனுமதிக்கவில்லை. இது அத்தனை சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

இது ரீலாக இருந்தாலும் இது ஒரு ரியலான கதை. 83 உலகக் கோப்பையில் நடக்காதது எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அவர்கள் அனைவரும் தொழில்முறையில் வல்லவர்கள். எங்கு என்ன செய்ய வேண்டும், எங்கே நகைச்சுவை இருக்கவேண்டும், எங்கே உணர்ச்சிகளை வெளிக்கொணர வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சொல்லப்போனால் ஒரு அழகான கதையை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் கிரிக்கெட்டைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். இந்தப் படத்தைப் பார்த்தவுடன், மெல்ல மெல்ல உங்களுக்கும் எல்லாமே ஞாபகத்திற்கு வரும்.

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வந்ததா என்று பலர் என்னிடம் கேட்டார்கள். 37-38 வருடங்களுக்குப் பிறகும் நான் எதையும் மறக்கவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்ல நினைக்கிறேன். இந்தியா வென்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை இதுவாகும். மக்களின் அன்பு எங்களுக்கு தொடர்ந்து கிடைத்தது. அதைப் பற்றி அவர்கள் எங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

இதுவரை எடுக்கப்பட்ட விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்களில் இது மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லா வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அல்லது வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம். அனைவரும் எங்களை 'அண்டர் டாக்ஸ்'(வெற்றி பெறும் வாய்ப்பு குறைவான அணி) என்று நினைத்த அந்த நேரத்தில் நாங்கள் உலகக்கோப்பையை வென்றோம். அதைக் கருத்தில் கொண்டுபார்க்கும்போது, இதைவிட ஊக்கமளிக்கும் ஒரு படம் உருவாகமுடியாது.

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் அதாவது மதன் லால் கதாபாத்திரத்தில் பாடகரான ஹார்டி சந்து நடித்துள்ளார். அவர் எனது பயிற்சியின் கீழ் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். என்னுடைய ஆக்‌ஷனில் பந்துவீசுவது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடையது போன்ற பந்துவீச்சு ஆக்‌ஷனை கற்றுக் கொள்ள அவருக்கு ஆறு மாதங்கள் பிடித்தது. அவருடைய உணர்ச்சிகள், சைகைகள், செயலை பார்த்தாலே அது நான் தான் அதாவது மதன்லால் என்று தோன்றும். உங்களுக்கு என் ஞாபகம் கண்டிப்பாக வரும்.

ஆட்டத்தை ஒருதலை பட்சமாக மாற்றும் திறன்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்கச்செய்ய, நான் கேப்டன் கபில் தேவிடம் பந்தை கேட்கும் காட்சியும் இந்தப் படத்தில் உள்ளது. முன்னதாக உலகக் கோப்பையை விளையாட அணிகள் எப்படிச் சென்றன என்பதையும் படம் காட்டுகிறது. ஆனால் முழுக்கதையையும் என்னால் இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்க்கும்போது நீங்கள் அதன் திரில்லை உணருவீர்கள்.

பயிற்சி அளித்த பல்விந்தர் சந்து

கபீர் கான், ரன்வீர் சிங், கபில்தேவ் மூவருமே நம்பர் ஒன் என்பதால் இந்தப் படமும் சிறப்பாக அமைந்துள்ளது. எல்லா வீரர்களையும் போல நடை உடை பாவனை, அவர்களது பேச்சு ஆகியவற்றை வெளிக்கொணர்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் எல்லா கலைஞர்களும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் ஆல்-ரவுண்டர் பல்விந்தர் சிங் சந்து அவர்களுக்கு அளித்த பயிற்சியும் வெற்றிக்கு ஒரு காரணம்.

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், @KIRTIAZAAD

படக்குறிப்பு, மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் படம் பார்த்தனர்

இந்த கலைஞர்கள் அனைவரும் எங்களை பத்து முறை சந்தித்தனர். ரன்வீர் சிங்கும் கபில்தேவ் வீட்டில் சில நாட்கள் தங்கினார். கபில் தேவைப்போல பந்துவீச, பேட்டிங் செய்ய, மற்றும் அவரைப்போலவே பேசவும் கற்றுக்கொண்டார்.

இந்த படம் உங்களையும் அழ வைக்கும், சிரிக்கவும் வைக்கும். இந்தப் படத்தில் தேசபக்தியும் கலந்திருக்கிறது. படத்தின் இசையும் அபாரம். இந்தப் படத்தின் பாடல்களை டிரெய்லரில் நீங்கள் அனைவரும் ஏற்கனவே பார்த்து, கேட்டிருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் மட்டுமே, இது எவ்வளவு சிறப்பாக உருவாகியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியவரும். இந்தப் படத்தின் இசை, வரும் காலங்களில் விளையாட்டுகளில் அதிகம் நினைவு கூரப்படும். வீரர்களிடையே புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்ட உதவும்.

இந்தப் படத்தின் திரையிடலின்போது எனது குடும்பத்தினர் அனைவரும் மும்பையில் இருந்தனர். இந்தப் படத்தைப் பார்க்க அவர்கள் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தனர். படம் ஓட ஓட, ஒவ்வொரு காட்சியிலும் நாங்கள் இணைந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் கபீர் கான் அதை சாதித்துக்காட்டியுள்ளார். இந்த படம் 11-12 கிரிக்கெட் வீரர்களை வைத்து எடுக்கப்பட்டது. இதில் வெளிக் கதையை சேர்க்க முடியாது. அவர்களிடம் நடந்த அனைத்தையும் நாங்கள்தான் சொன்னோம். இந்தப் படத்திற்குப் பிறகு உங்களுக்கு சில புதிய விஷயங்களும் தெரியவரும்.

மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வாசம்

இப்படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்த கலைஞரின் முகபாவங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அவர் திரையில் செய்திருப்பதைப்போலத்தான் ஸ்ரீகாந்த் நிஜவாழ்க்கையில் செய்வார். சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் திலீப் வெங்சர்க்கரைத் தவிர மற்ற எல்லா வீரர்களுமே தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மேலாளராக நடித்துள்ள பங்கஜ் திரிபாதி கலக்கியுள்ளார்.

கபில்தேவ்

பட மூலாதாரம், BCCI

இந்த படத்தை எல்லா வீரர்களும் சேர்ந்து பார்த்த காரணத்தால் அது அதிக சுவாரசியமாக இருந்தது. உலகக் கோப்பையின் போது வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீது நடக்கும் விஷயங்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் மொத்தக் குழுவும் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் தங்கியிருந்து அதே காட்சிகளை சரியாகப் படமாக்கியுள்ளனர். படத்தைப் பார்த்தால் உலகக் கோப்பை நடப்பது போலவே நமக்குத் தோன்றுகிறது.

உலகக் கோப்பையின் போது இருந்த அதே லார்ட்ஸ் பால்கனியையே பயன்படுத்தியுள்ளனர். உலகக் கோப்பையின் போது லண்டனில் சிலருடன் அணிக்கு சிறு பூசல்கள் ஏற்பட்டன. இது படத்திலும் காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சில காட்சிகளைப் பார்க்கும் போது மயிர் கூசுகிறது. படம் சில இடங்களில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. பல இடங்களில் சிரிப்பலையும் உண்டு. ரன்வீர் சிங், கபில்தேவ் போலவே தத்ரூபமாக நடித்துள்ளார். தன்னையும் மற்ற பதினொரு, பன்னிரெண்டு நடிகர்களையும் ஒன்றிணைத்து செயல்படுவது ரன்வீர் சிங்குக்கு எளிதானது அல்ல. ஆனால் அவர் அதைச் செய்துகாட்டியுள்ளார்.

கபில்தேவ்

பட மூலாதாரம், RBARCHIVE

படக்குறிப்பு, அப்போதைய குடியரசுத்தலைவர் கியானி ஜைல் சிங், கபில்தேவை கௌரவிக்கிறார்

கபில்தேவ் அணியை எப்படி அழைத்துச் சென்றாரோ, அவரும் அதே வழியில் நடிகர்களை அழைத்துச் சென்றுள்ளார். கபில்தேவின் பந்துவீச்சை அறிய ரன்வீருக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. ஹார்டி சந்துவிற்கு என் பந்துவீச்சு ஆக்‌ஷன் மற்றும் பந்துவீசும்போது என் ஜம்ப்களை கற்றுக்கொடுக்க நான் அவருடன் நான்கு நாட்கள் செலவிட்டேன். பேட்டிங் முதல் நெஞ்சை நிமிர்த்தி தோள்களை அகல விரித்து நடப்பது வரை அனைத்தையும் அவருக்கு கற்றுக்கொடுத்தேன்.

கபீர் கான் எல்லா வீரர்களின் வேடங்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்திருப்பது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். எல்லா கதாபாத்திரங்களையும் அவர் முழுமையாக பயன்படுத்தியுள்ளார். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமடைந்தாலும், விளைவு சிறப்பாகவே இருக்கிறது. இது ஒரு முக்கியமான படம், அதற்கு நேரம் எடுக்கத்தான் செய்யும்.

நான் இந்த படத்தை எல்லா வீரர்களுடன் சேர்ந்து பார்த்தேன். ஆனால் யஷ்பால் ஷர்மா இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்தது. இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். "83" திரைப்படம் யஷ்பால் ஷர்மாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் தொடங்குகிறது. மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் அவை. யஷ்பால் ஷர்மாவை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.

(ஆதேஷ் குப்தாவுடனான உரையாடலின் அடிப்படையில்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: