படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
படுத்துக்கொண்டே ஆஜரான முன்னாள் டிஜிபி: எச்சரித்த நீதிமன்றம்
படுக்கையில் படுத்தபடி விசாரணைக்கு ஆஜரான முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் சுமேஷ் சிங் சைனி, இணையம் வழியாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்கு படுக்கையில் படுத்தபடி ஆஜரானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் சைனி தனது போக்கில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது என விவரிக்கிறது தினமணி செய்தி.
தனக்கு உடல் நிலை சரி இல்லை; காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சைனி தெரிவித்திருந்தாலும் அவர் அதற்கான மருத்துவ சான்றிதழை அவர் சமர்ப்பிக்கவில்லை.
கடந்த 1994ஆம் ஆண்டு லூதியானாவில் வினோத் குமார், அசோக் குமார் மற்றும் அவர்களது ஓட்டுநர் முக்தியார் சிங் ஆகிய 3 பேரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சுமேஷ் சைனி மற்றும் மூன்று போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல்துறை அலுவலர்களான சுக் மொஹிந்தர் சிங் சந்து, பரம்ஜித் சிங் மற்றும் பல்பீர் சந்த் திவாரி ஆகியோருடன் சுமேஷ் சைனி சதித்திட்டம் தீட்டியதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
"முதல் குற்றவாளியான சுமேஷ் சைனி, இணையம் மூலம் நடைபெற்ற விசாரணையில் இணைந்தார். எனினும் அவர் படுக்கையில் படுத்தபடியே விசாரணையில் பங்கேற்றது கருத்தில் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இருப்பினும் இது தொடர்பான மருத்துவச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை. இனி, முதல் குற்றவாளி, இணைய விசாரணை மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது எதிர்காலத்தில் தனது நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன்," என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்கிறது அச்செய்தி.
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த 104 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 104 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளின் தகவல் குறித்த மின்னணு பலகையை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர், "தமிழ்நாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, ஆதிக ஆபத்தான நாடுகள், குறைந்த ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேருக்கு 'எஸ்' ஜீன் குறைபாடு அதாவது ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளார் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
மம்தாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் 'அசாதி கி அம்ரித் மாஹோத்சவ்' என்ற நிகழ்ச்சிக்காக இணைய வழியில் நடைபெற்ற சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு மணி நேரமாக காத்திருந்தும் மம்தாவிற்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என மாநில தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மம்தாவின் பெயர் பேச்சாளர்களின் பட்டியலில் இல்லை என அவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிற மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
- தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்
- சிவிங்கிப் புலிகள்: ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியக் காடுகளுக்கு பாய்ந்து வரப்போகின்றனவா?
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
- தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?
- பழி தீர்க்கும் கொலைகள்: அடிப்படைவாத அரசியலை நோக்கிச் செல்கிறதா கேரளா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












