பழிக்குப்பழி கொலைகள்: அடிப்படைவாத அரசியலை நோக்கிச் செல்கிறதா கேரளா?

பாஜக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், @BJP4KERALAM

படக்குறிப்பு, பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் கொலைக்குப் பிறகு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் பழிவாங்கும் நோக்குடன் கொலை செய்யப்பட்டதன் பின்னணி, அரசியல் என்பதில் இருந்து மாறி மத ரீதியிலான கொலைகள் என்ற இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த கொலைகள், கேரளாவில் அடிப்படைவாத அரசியலுக்கு மேலும் வழிவகுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.

கேரளாவின் மத்திய மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஒருவரின் கொலை மற்றும் அக்கொலைக்குப் பழிவாங்குவதற்காக 12 மணி நேரத்திற்குள் பாஜகவை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டது, கேரள அரசியல் வட்டாரத்தில் அமைதியான அரசியல் நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் முதன்மையான இரு அரசியல் போட்டியாளர்களும் இக்கொலைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

"மத வன்முறைகள் இத்தகைய சம்பவங்கள் மூலம் அம்பலமாகியுள்ளன" என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் எம் ஏ பேபி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதாலா, "ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இரண்டும் இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன," என அவர் கூறினார்.

இத்தகைய கொலைகள் முன்பு நிகழ்ந்திராத ஆலப்புழா மாவட்டத்தில் நடந்திருப்பதுதான் ஆச்சரியமானதாக உள்ளது.

பொதுவாக, இத்தகைய அரசியல் கொலைகள் வடக்கு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும்.

"மற்றவற்றுடன் ஒப்பிடும்போது ஆலப்புழா அமைதியான மாவட்டம். அதனால்தான் இக்கொலைகள் இங்கு நடைபெற்றிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எப்ரலில் நடந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் சட்டப்பேரவைத் தேர்தலையும் தாண்டியதாகத் தெரிகிறது," என, பிபிசி இந்திக்கு அரசியல் நோக்கர் ஜோசப் மேத்யூ தெரிவித்தார்.

எஸ்டிபிஐ மாநில செயலாளர் கேஎஸ் ஷான்

பட மூலாதாரம், @OMA_SALAM CHAIRMAN SDPI

படக்குறிப்பு, எஸ்டிபிஐ மாநில செயலாளர் கேஎஸ் ஷான்

ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐக்கு இடையேயான மோதல் வரலாறு

கடந்த சனிக்கிழமை மாலை, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கேஎஸ் ஷான், தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரது வாகனத்தில் கார் மோதி கீழே விழுந்ததாகவும், பின்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அடுத்த 12 மணிநேரத்திற்குள், அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன், அவரது தாயார் கண் முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் நந்து கிருஷ்ணன் கொலைக்கு பதிலடியாக, ஷான் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தினரிடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த கொலையின் பின்னணி என கூறப்படுகிறது. கேரள சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன்

பட மூலாதாரம், @BJP4KERALAM

படக்குறிப்பு, பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தினரிடையே இம்மாவட்டத்தில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. சுவாரஸ்யமாக, இந்த மாவட்டம், கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் சிபிஎம் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது.

இதுவரை, கேரளாவில் பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை செய்யப்பட்ட பெரும்பாலானோர், ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஎம்-ஐச் சேர்ந்த சாதாரண நிர்வாகிகளே. ஆனால், கேரளாவின் மத்திய மாவட்டத்தில் இப்போது நிகழ்ந்துள்ள கொலைகளில் இருபக்கமும் மாநில அளவிலான பதவியில் இருப்பவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

மத அடிப்படைவாதத்தின் வளர்ச்சி

"கேரளாவின் அரசியலில் தற்போது மத அடிப்படைவாதம் அதிகமாகியுள்ளது. 'ஹலால் உணவு' குறித்த பிரச்சாரத்தில், அதிகளவிலான உணவகங்கள் குறிவைக்கப்படுவதை சுட்டிக்காட்டலாம். இது நிச்சயமாக கவலைக்குரிய விஷயம்," என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் ஜோ ஸ்கேரியா.

சபரிமலை கர்ம சமிதியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள எஸ்ஜேஆர் குமார், சபரிமலைக்கு வழங்கப்படும் வெல்லம் பாக்கெட்டுகளில் உள்ள 'ஹலால்' முத்திரையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, இந்த 'ஹலால் உணவு' பிரச்சரம் தொடங்கியது.

இது, ஹலால் உணவு வழங்கப்படுவதாக, உணவகங்களில் பலகைகள் வைக்கப்படுவதை பாஜக தலைவர்கள் ஆட்சேபித்து நடைபெற்று வந்த நுட்பமான பிரச்சாரத்திற்கு மேலும் வலுவூட்டியது. இதற்கு அடுத்ததாக விரைவிலேயே, முஸ்லிம்கள் நடத்தி வரும் உணவகங்களில் 'எச்சில் உமிழப்பட்ட உணவு' விற்பனை செய்யப்படுகிறது என்ற அடுத்த பிரச்சாரம் தொடங்கியது.

இதையடுத்து, உணவில் யாரும் எச்சில் உமிழ்வதில்லை எனவும், அது தங்கள் மதங்களில் அனுமதிக்கப்பட்டதல்ல எனவும், முஸ்லிம்கள் அளித்த விளக்கங்களுக்குப் பிறகும் இந்த பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இது தொடர்பாக, கேரள உணவக உரிமையாளர்கள் சங்கம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இந்த சமூக வலைதள பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும், இப்பிரச்சாரம் சிறு மற்றும் நடுத்தர உணவக உரிமையாளர்களை பொருளாதார ரீதியாக காயப்படுத்துவதற்காக இப்பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதாகக்கூறி, மனு அளித்தனர்.

ஷானின் இறுதிச்சடங்குக்குப் பின்னும் எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் நிருபர்களிடம், "அவருடைய இறப்பை நாங்கள் கொண்டாடுகிறோம். ஏனெனில், அவர் ஷாஹித், அவர் ஒரு தியாகி," என தெரிவித்தார்.

"ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இரண்டுக்கும் தங்கள் அரசியல் நோக்கங்களை மேம்படுத்துவதற்கு, மத அடையாளங்களை பயன்படுத்துவது தெளிவாக உள்ளது. இதன் போக்கு, அரசியலில் இருந்து மதத்திற்கு மாறுகிறது," என, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

அரசியல் போர்

அரசியல் ரீதியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தனிப்பட்ட உரையாடல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளராத பகுதிகளில் எஸ்டிபிஐ வளர்ந்து வருவதாக ஒப்புக்கொண்டனர். இந்த வளர்ச்சி கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் நடைபெறுகிறது. ஐயூஎம்எல் மலப்புரம் மாவட்டத்தில் தளத்தைக் கொண்டு வட மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

"இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் வலுவாக இருந்த பகுதிகளில், எஸ்டிபிஐ கனிசமாக வளர்ந்துள்ளது," என மேத்யூ தெரிவித்தார்.

"ஐயூஎம்எல் வலுவாக இல்லாத தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் எஸ்டிபிஐ வளர்ந்துள்ளது. எஸ்டிபிஐ கட்சி, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளின் கொள்கைகளையும் விமர்சிப்பதாக உள்ளது. இது மையவாத கட்சி. தீவிர கொள்கையுடைய கட்சி அல்ல. எனவே, வகுப்புவாத பிளவை உருவாக்காது," என பிஎப்ஐ செய்தித்தொடர்பாளர் பேராசிரியர் பி. கோயா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன்

ஆனால், "பிஎப்ஐ-எஸ்டிபிஐ இரண்டும் சிபிஎம் உதவியுடன் பலத்தைப் பெற்றுவருகிறது. முன்பு, சிபிஎம் ஆர்எஸ்எஸ் உடன் மோதிக்கொண்டிருந்தது. இப்போது, ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்க்க பிஎப்ஐ-யை ஆதரிக்கின்றனர். காவல்துறையும் ஆளும் கட்சிக்கு உறுதுணையாக உள்ளது," என, பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"நடந்திருப்பது முற்றிலும் வகுப்புவாதம். வகுப்புவாத வன்முறையை உருவாக்க பிஎப்ஐ முயற்சித்து வருகிறது. முஸ்லிம்களின் வாக்குகள் இப்போது 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதால், பிளவை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆளும் கட்சியின் உதவியுடன் ஐயூஎம்எல் பலவீனமடைந்து வருகிறது. அதன்மூலம், ஆர்எஸ்எஸ்-பாஜகவை தாக்கி, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை கவர முயற்சிக்கிறது. இதுதான், பிஎப்ஐ-யின் அணுகுமுறை," என்கிறார் சுரேந்திரன்.

ஆனால், பாஜக மாநில தலைவரின் இந்த வாதத்தை எஸ்டிபிஐ மறுக்கிறது. "உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சிபிஎம்-க்கு உதவினோம் என யாராவது கூற முடியுமா? எங்களின் உதவியை சிபிஎம் கேட்கக்கூட இல்லை. எனவே, நாங்கள் நடுநிலையுடன் இருந்தோம். நாங்கள் காங்கிரஸையும் ஆதரிக்கவில்லை, சிபிஎம்-ஐயும் ஆதரிக்கவில்லை," என, எஸ்டிபிஐ தேசிய பொதுச் செயலாளர் மஜீத் ஃபைசி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

எஸ்டிபிஐ முஸ்லிம் கட்சி என்ற குற்றச்சாட்டை ஃபைசி மறுக்கிறார். "சமூகத்தை பிளவுபடுத்த பாஜக தான் முயற்சிக்கிறது. எங்கள் கட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உறுப்பினர்களாக உள்ளனர். உங்கள் தகவலுக்காக சொல்கிறேன், கொல்லத்தில் உள்ள எங்களின் ஒரே நகராட்சி உறுப்பினர் ஒரு தலித். பாஜக-ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களை தூண்டிவிடுவதுதான் பிரச்சினை. சமூகத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப்படுத்தி, அச்சமூகத்தினரை தாக்க முயற்சிக்கின்றனர், உடல்ரீதியாகவும் தாக்குகின்றனர். இதனை ஆர்எஸ்எஸ் நிறுத்திக்கொள்ளாவிட்டால், தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும்," என்றார்.

"கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான முஸ்லிம் வாக்குகள் சிபிஎம்-க்கு சென்றன. ஏனெனில், சிபிஎம்-ஐ பிஎப்ஐ மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரித்தன" என, சுரேந்திரன் தெரிவித்தார்.

சிபிஎம் கட்சியின் மூத்தத் தலைவரும் பொலிட்பீரோ உறுப்பினருமான, பேராசிரியர் எம் ஏ பேபி, பிபிசி இந்தியில் பேசியபோது, "கேரளாவில் அரசியல் சக்தியாக உருவெடுக்க பாஜக மற்றும் எஸ்டிபிஐ வகுப்புவாத சக்திகள் மூலம், வகுப்புவாத வன்முறையைப் பயன்படுத்துகிறது. அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்கள் மத்தியில் உள்ள தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள ஐயூஎம்எல் முயற்சிக்கிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சிபிஎம்-ஐ ஆதரிக்கின்றனர், அக்கட்சியில் இணைந்துவிட்டனர். இதனைத் தடுக்க அவர்கள் வன்முறை அரசியலில் ஈடுபடுகின்றனர்," என்றார்.

"சமூகத்தில் தீவிரவாத சக்திகள் தோன்றுவதற்கு ஐயூஎம்எல் வாய்ப்பளிக்கிறது. ஐயூஎம்எல் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி, எஸ்டிபிஐ உடன் இணையவும் வாய்ப்புள்ளது" என, பேராசிரியர் பேபி குற்றம்சாட்டினார்.

ஐயூஎம்எல்-ஐச் சேர்ந்த பாத்திமா தஹ்லியா பிபிசி இந்தியிடம் பேசுகையில், "காவல் துறை மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என தெளிவாகத் தெரிகிறது. தீவிரவாதத்தை எதிர்க்க ஆளும் சிபிஎம், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையால் குடும்பங்கள் அழிவதை அனுமதிக்கக்கூடாது. ஆளும் சிபிஎம், தன் சொந்த கருத்தைவிட வேறு எந்த கருத்தௌதையும் விரும்பவில்லை. சகிப்புத்தன்மையே இல்லை," என்றார்.

"மாநில அரசியலில் மைய இடத்தை ஆக்கிரமிப்பதற்கான பாதையை அடிப்படைவாதிகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது," என்றார், மேத்யூ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: