யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: குழந்தை இறந்த சம்பவத்தில் கணவர் கைது

லோகநாதன் - கோமதி தம்பதியர்
படக்குறிப்பு, லோகநாதன் - கோமதி தம்பதியர்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் யூடியூப் மூலமாக மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதைத்தொடர்ந்து லோகநாதனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து நெமிலி காவல் நிலைய போலீசார் கூறுகையில், "லோகநாதன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302(2) பிரிவின் கீழ் கைது செய்துள்ளோம்," என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு நடந்ததை மூவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் மறுப்பதாகக் கூறுகிறது காவல்துறை. என்ன நடந்தது?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு வயது 32. இவருக்கு கோமதி (வயது 28) என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், கருவுற்றிருந்த கோமதிக்கு கடந்த 13-ம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்பிருப்பதாக, மருத்துவர்கள் நாள் கொடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. பின்னர், 18-ம் தேதி மாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூட்யூபை பார்த்து பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

யூடியூப் பார்த்து பிரசவம்

குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் மணிமாறன் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

"கடந்த 18-ம் தேதி மாலை நான்கு மணியளவில் அவர்களுக்கு பிறந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. மேலும், தாய்க்கு ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக புன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்த மருத்துவர் மோகன் அப்பெண்ணுக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைத்தார். பின்னர் லோகநாதன் வீட்டுக்கு அருகே விசாரணை செய்ததில் யூ-டியூப் பார்த்து சிகிச்சையளித்து தெரிந்தது," என்றார்‌ ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் மணிமாறன்.

YouTube

பட மூலாதாரம், Getty Images

"13-ம் தேதி கோமதிக்கு குழந்தை பிறக்கும் என்று குறிப்பிட்ட தேதியில், கிராம சுகாதார மருத்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். அதற்கு வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு 17 மற்றும் 18ஆம் தேதி செவிலியர்கள் சென்று கேட்டபோது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்."

"இதையடுத்து, இவர்களிடம் விசாரணை செய்ததில், யூடியூபை பார்த்து லோகநாதன் மற்றும் அவரது சகோதரி கீதா இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர் என்று தெரிந்தது. இதில், குழந்தை உயிரிழந்துள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டோம்," என மணிமாறன் தெரிவித்தார்.

யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்தோம் என லோகநாதன், அவரது மனைவி கோமதி மற்றும் சகோதரி கீதா மூவரும் எங்களிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிமாறன்‌ கூறுகிறார்.

இதையடுத்து, அவர்கள் எங்கு சிகிச்சை எடுக்கிறார்கள், என்ன சிகிச்சை மேற்கொள்கிறார், என்பதை அறிய தொடர்ந்து முயன்றும் மருத்துவக் குறிப்புகளை காண்பிக்கவில்லை என்றார் மணிமாறன்.

'கணவர் அளிக்கவில்லை என மறுக்கும் மனைவி' - காவல் துறை

இந்த விவகாரம் தொடர்பாக, நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிரஞ்சீவுலு கூறுகையில், "குழந்தை தலை வெளியே வரத்தொடங்கியதை அடுத்து குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன் பின்னர்தான் அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்றோம். யூடியூப் பார்த்து எனக்கு எந்த சிகிச்சையும் கணவர் அளிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.

வீட்டிலேயே பிரசவம் - அந்தக் காலத்தில் செய்ததை ஏன் இப்போது செய்யக்கூடாது?

யூடியூப் பார்த்து பிரசவம் செய்வது என்பது எவ்வளவு தவறானது என்பது தொடர்பாக பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா மணி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா மணி
படக்குறிப்பு, பிரசவம் பார்ப்பது குறித்து யூடியூபில் காணொளி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா மணி

அது குறித்து அவர் கூறுகையில், "யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இவை அனைத்துமே சிறிய விஷயங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. குறிப்பாக ஒரு நோயாளி மருத்துவரின் ஆலோசனை பெற வருகிறார் என்றால் அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது, என்ன அறிகுறிகள் இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு என அனைத்தையும் இணையம் மற்றும் யூ-ட்யூப் வாயிலாக பார்த்துவிட்டு மருத்துவரிடம் வருகிறார்கள். எங்களிடம் வரும்போது இவர்களுக்கு என்ன அறிகுறி, என்பதை சொல்வதில்லை அவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது, இந்த பிரச்னை உள்ளது என்று அவர்களே தீர்மானித்து கொள்கின்றனர்," என்றார்.

"என்ன நோய் உள்ளது என்பதை மருத்துவர் முடிவு செய்ய வேண்டியது. ஆனால் வரும் நோயாளிகள் அவர்களுடைய நோயை அவர்களே கூறுகின்றனர். அப்போது அதற்கு மாறுதலாக மருத்துவர்கள் சொல்லும் போது அதை ஏற்க மறுக்கின்றனர். மேலும் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்கு எந்த மாதிரியான சிகிச்சை மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்ற மருத்துவர் ஆலோசனையில் நோயாளிகள் தலையிடுகின்றனர்," என்கிறார் அவர்.

இதுபோன்ற சிறிய சிறிய பிரச்னைகள் யூடியூப் பார்த்து மருத்துவம் எடுத்துக்கொள்வதுதான் போகப் போகப் பிரசவம் பார்க்கும் அளவிற்கு வந்துள்ளதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.

"பிரசவம் என்பது ஓர் உயிரைக் காப்பாற்றி, இன்னொரு உயிரைக் கொண்டுவருவது. இதனால் இரண்டு உயிரைக் காப்பாற்றுகிறோம். ஆனால் அதை ஒரு சுலபமான வழியில் யூ-ட்யூப் பார்த்து செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது."

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

"பிரசவம் பார்க்கும்போது தாயின்‌‌ நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், கருப்பை எந்த அளவிற்கு சுருங்கி விரிகிறது, ரத்தப் போக்கு இருக்கிறதா என பவற்றைப் பார்க்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தையின்‌ இதயத் துடிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இவை அனைத்தையுமே கருவிகள் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது, செய்யவும் கூடாது," என மருத்துவர் நித்யா மணி வலியுறுத்துகிறார்.

"மேற்கொண்டு தாயாருக்கு போதுமான வலி இல்லையென்றால் அந்த வலியை அதிகப்படுத்த மருந்துகள் உள்ளன. அதை கொடுக்கும்போது தாய் மற்றும் குழந்தையின் இதயத் துடிப்பை நிலையாகப் பராமரிக்க வேண்டும். "

"இவற்றில் எந்த மாறுதல்கள் வந்தாலும் அதற்கேற்ப மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும். இவை எல்லாம் இல்லாமல் ஒருவருக்கு பிரசவம் பார்க்கவே முடியாது," என்கிறார் ‌மருத்துவர் நித்யா மணி.

"குறிப்பாக அந்த காலத்தில் வீட்டில் இருந்தபடி பிரசவம் பார்த்தார்கள் என்றால் அப்போது என்ன சிக்கல்கள் ஏற்பட்டது என்று யாருக்குமே தெரியாது. அப்போது தாய், குழந்தை இறந்தால் கூட, அதை பிரசவத்தில் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்களே தவிர எதனால் உயிரிழந்தனர் என்பது யாருக்கும் தெரியாது."

"ஆகவே முறையான வழியில் சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே நல்லது நடக்கும். அதை தவிர்த்து இணையம் மற்றும் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் செய்து கொள்வது செய்யக்கூடாத ஒன்றாகும்."

"பிரசவம் எப்படி பார்ப்பது, எப்படி அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்ப்பது, அதற்கு என்னென்ன‌ வழி முறைகள் என்பது குறித்து யூ-ட்யூப்பில் வெளியிடக் கூடாது. அப்படி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவை அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் நித்யா மணி.

தமிழ்நாட்டில் 99.8% பிரசவங்கள் மருத்துவமனையில்..

"சில தனிநபர்கள் தன்னிச்சையாக இதுபோன்று முடிவை எடுக்கிறார்கள். இது எதிர்பாராத விதமாக நடத்த ஒரு நிகழ்வு. இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கப்பட்டாலும், இது போன்று நடக்காமல் தவிர்க்கவும், பிரசவ நாட்களில் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசு சார்பில் தொடர்ந்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் சட்ட விரோதமாக பிரசவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். "

"தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவம் மருத்துவமனையில் நிகழ்கிறது. இவற்றில் தற்செயலாக நடக்கும் பிரசவம் கூட உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது. ஒருவேளை தனிமைப்படுத்தப்பட்ட பிரசவமாக இருந்தாலும் எங்களால் அதை சாதாரணமாக எடுக்கக்கொள்ளாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயளாலர் ராதா கிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: