தஞ்சாவூர் மருத்துவமனை கழிவறையில் பிரசவம்: குழந்தையை விட்டுச் சென்ற பெண் கைது

பட மூலாதாரம், Getty Images
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக, அக்குழந்தையைப் பிரசவித்து விட்டு, அங்கிருந்து வெளியேறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில், பிறந்த பெண் சிசு, தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சிசிவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் அதிகாலை 2 மணி அளவில் கழிவறைக்கு சென்று விட்டு, சுமார் 30 நிமிடம் கழித்து வெளியே வருவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அப்பெண் யார் என போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது பெற்றோருடன் வந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், வயிறு வலி என தெரிவித்து சிகிச்சைக்கு சேர்ந்ததும், பின்னர் மருத்துவமனையில் தகவல் தெரிவிக்காமல் அவர் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து அந்தப் பெண்ணை இன்று காலை கைது செய்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்று தெரியவந்தது என்கின்றனர்.

திருமண உறவுக்கு வெளியே கருவுற்றதால், அவப்பெயருக்கு அஞ்சி இவ்வாறு செய்தார் என்றும் தெரியவந்ததாக காவல்துறையினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
அந்தப் பெண், மகப்பேறு காலம் வலி வந்த பிறகு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சாதாரண வயிறு வலி எனத் தெரிவித்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்ததும், பின்னர் கழிவறையில் சென்று குழந்தையை பெற்று, ஃபிளஷ் டேங்க்கில் போட்டு விட்டுச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது.
குற்றம்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யயப்பட்ட பெண்ணின் பெற்றோரிடமும் காவல்துறை இன்று விசாரணை நடத்தியது. அவர்களுக்கு இதற்கு முன்பே தங்கள் மக்கள் கருவுற்றிருந்த தகவல் தெரியாது என்றும் அவர்கள் கூறியதாக காவல்துறை கூறுகிறது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கான புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
"இளம் பெண்களுக்கு இச்சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதே சம்பவம் காட்டுகிறது. இது குறித்து ஒரு விழிப்புணர்வை அவ்வப்போது அரசு ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றத்தை செய்ய வைத்தது இந்த சமூகம்தான், மேலும் இது போன்ற பிரச்னைகளை கலைந்து அதற்கான தீர்வுகளை காண இந்த அரசு முன்வர வேண்டும்," என அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












