முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு விவரம்

தங்கமணி

பட மூலாதாரம், @PThangamanioffl

படக்குறிப்பு, பி. தங்கமணி (கோப்புப்படம்)

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பி.தங்கமணிக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது முறையாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு அமைந்துள்ளது.

கடந்த வாரம் 15ஆம் தேதி அவரது வீடு மற்றும் அவரது மகன், மருமகன், நண்பர்கள் வீடு என மாநிலம் முழுவதும் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை முதல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர், நண்பர்கள் வீடு என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள முட்டை நிறுவன அதிபர் மோகனின் வீடு, மோகனூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் வீடு ஆகிய இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இவை தவிர, கொல்லிமலையில் உள்ள கட்டட ஒப்பந்ததாரருக்கு சொந்தமான பிஎஸ்கே தங்கும் விடுதி, பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூர் சண்முகம் என்பவரின் வீடு, எருமப்பட்டியை அடுத்துள்ள சரண்யா ஸ்பின்னிங் மில் உரிமையாளர் அசோக்குமார் வீடு மற்றும் அலுவலகம் என நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய செந்தில்நாதன் கோபாலகிருஷ்ணன் மற்றும் திண்டல் செல்லம்மாள் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் பாலசுந்தரம் ஆகியோர் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியிலுள்ள ஏவிஆர் ஸ்ரீ கோகுல் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 15ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட 69 இடங்களில் நடந்த சோதனையில் ₹2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தகவல் தெரித்திருந்தனர்.

தற்போது இரண்டாவது முறையாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வரும் சோதனை அதிமுக வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏற்கெனவே அ.தி.மு.கவைச் சேர்ந்த, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகிய நான்கு முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: