குடும்பப் பொருளாதாரம்: இறந்த கணவரின் நிதி விவரம் தெரியாமல் நெருக்கடியில் சிக்கும் பெண்கள் - என்ன செய்ய வேண்டும்?

பெண்

பட மூலாதாரம், Getty Images

விபத்தாலோ வேறு காரணங்களாலோ கணவர் திடீரென இறந்து விட்டால், அந்த உணர்வு ரீதியிலான இழப்பையே தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கும் பெண்களுக்கு, உடனடியாக கூடவே வந்துவிடுகிறது பொருளாதார நெருக்கடி. இதை அவர்கள் தவிர்ப்பது எப்படி?

மதுரையைச் சேர்ந்த 40 வயதான அகிலாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்படியொரு நாள் வந்தது. அவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் அடிவேரை கொரோனா அசைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அகிலாவின் கணவர். மறுநாளே மரணமடைந்து விட்டார்.

"அப்படிப்பட்ட இழப்புக்கு அகிலா தயாராக இருக்கவில்லை." என்கிறார் பல ஆண்டுகளாக பெண்களுக்கான வாழ்வியல் ஆலோசனைகளைக் கூறிவரும் நிபுணரான ப்ரியா தாஹிர்.

அகிலாவின் கணவர் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி, கூடுதலான வட்டிக்குக் கடன் கொடுத்து வந்திருக்கிறார். அவரது மரணத்துக்குப் பிறகு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் அதற்கான ஆவணங்களுடன் அகிலாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதே நேரத்தில் கணவர் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருந்தார் என்ற விவரம் அகிலாவிடம் இல்லை. எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறார், எங்கெல்லாம் இடங்களை வாங்கியிருக்கிறார் என்பதும் தெரியாது.

இந்திய குடும்பங்களில் வீட்டுப் பொருளாதாரம் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே இருப்பதும், வீட்டுச் செலவுகளுக்கான பணம் மட்டுமே பெண்களிடம் வழங்கப்படுவதும், சில குடும்பங்களில் அந்தப் பொறுப்பையும் ஆண்களே எடுத்துக் கொள்வதுமே நடைமுறையில் காணப்படும் யதார்த்தம்.

அகிலா இப்படியொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அதனால் கணவரின் தொழிலில் அவர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், தனியாக வேலைக்கும் செல்லவில்லை. குடும்பத்துக்கு என்ன தேவை, மாதந்தோறும் என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்பது பற்றிய அனுபவமும் இல்லை.

"தன்னம்பிக்கையே முக்கியம்"

பெண்

பட மூலாதாரம், Getty Images

கணவரை இழந்த தொடக்க நாள்களில் மன அழுத்தத்தாலும், எதிர்காலம் பற்றிய அச்சத்தாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே இருந்திருக்கிறார் அகிலா.

"கோவிட் காலத்தில் கணவர்களை இழந்த பெண்களுக்கு ஆலோசனை வழங்கும்போது, அவர்களில் 90 சதவீதம் பேருக்கு கணவரின் வருமானம், குடும்பச் செலவு தவிர முதலீடோ, சேமிப்போ இருக்கிறதா என்பதைப் பற்றித் தெரியவில்லை. படித்து வேலைக்குச் செல்லும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல," என்கிறார் ப்ரியா தாஹிர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதுடன் வாழ்க்கை பற்றிய அச்சத்தைப் போக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்துவதும் அடிப்படை என்கிறார் ப்ரியா தாஹிர்.

"அகிலா போன்ற பெண்களுக்கு குறுகியகால மற்றும் நீண்ட கால பொருளாதார தீர்வு தரும் ஆலோசனைகளை வழங்குகிறோம். பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலைகள், ஆன்லைன், வாட்ச்ஸ் ஆப் மூலம் பொருள்களை விற்பது போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கிறோம். சிலருக்கு அலுவலகங்களில் வேலைக்குச் செல்வது பற்றிய தகவல்களைத் தருகிறோம். பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், தன்னம்பிக்கையை அளிப்பதே இதில் முக்கியத்துவம் பெறுகிறது."

"சம்பாதிக்கும் பெண்களுக்கும்..."

ப்ரியா தாஹிர்

பட மூலாதாரம், Priya Thahir

படக்குறிப்பு, ப்ரியா தாஹிர், உளவியல், வெற்றிக்கான பயிற்சியாளர்

ஆண்களைச் சுற்றியே பொருளாதாரம் இருக்கும் வீடுகளில், பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், திடீர் மரணங்கள் ஏற்படும்போது பெரும் பொருளாதார பிரச்னைகள் ஏற்படுகின்றன.

"சம்பாதிக்கும் பெண்களில் பலரும் அதை அப்படியே கணவரிடமோ அல்லது வீட்டில் மற்றவர்களிடமோ கொடுத்துவிட்டு, பொருளாதார விவகாரங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். கணவர் மரணமடைந்தால், அவர்களும் பெரும் அதிர்ச்சியிலும் நெருக்கடியிலும் சிக்குகிறார்கள்," என்கிறார் ப்ரியா தாஹிர்.

"குடும்பத் தொழில், வர்த்தகம் செய்யும் குடும்பங்களிலும் இந்தச் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் குடும்பத் தொழிலைக் கற்றுக் கொள்வதில்லை. அப்படிக் கற்றுக் கொண்ட பெண்களையும், கணவர் இறந்தபிறகு, பிற குடும்ப உறுப்பினர்கள் அந்தத் தொழிலில் ஈடுபட அனுமதிப்பதில்லை."

பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பது எப்படி?

பணம் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பணம் - கோப்புப் படம்

குடுபத்தில் பொருளாதார விவகாரங்களைக் கவனிக்கும் கணவரோ, மனைவியோ திடீரென இறந்துவிடும் நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தவிர்ப்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் ரேணு மகேஸ்வரி பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

"கொரோனா காலம் வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆபத்து எப்போதுமே இருப்பதுதான். ஆனால் கோவிட் இன்னும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மன அமைதி மற்றும் நிதிப் பாதுகாப்பின் தொடர்ச்சியை உறுதிசெய்ய குடும்பங்கள் சரியான நீண்டகாலத் திட்டம், அவசரகாலத் திட்டம் வைத்திருப்பது அவசியம்" என்கிறார் ரேணு மகேஸ்வரி.

கணவனும் மனைவியும் நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியம், இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால் வாழ்க்கைத் துணை நெருக்கடியில் சிக்காமல் இருப்பார்.

திடீர் மரணத்தின்போது நிதி நெருக்கடியைத் தவிர்க்க கீழ்கண்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளலாம்:

பெண்

பட மூலாதாரம், Getty Images

1. அனைத்து முதலீட்டு விவரங்களும் ஒரே இடத்தில் தொகுக்கப்பட வேண்டும். முழுமையான குடும்ப நிதி ஆலோசகர் அதைச் செய்ய அவர்களுக்கு உதவ முடியும். ஆலோசகருடனான விவாதங்களில் மனைவியும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

2. அனைத்து காப்பீட்டு பாலிசிகள் மற்றும் க்ளெய்ம் நடைமுறை பற்றி மனைவி அறிந்திருக்க வேண்டும். பாலிசிகள் முகவரிடம் இருந்து வாங்கப்பட்டால், அவரது விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

3. அனைத்து முதலீடுகளும் கூட்டாகவோ அல்லது உயிருடன் இருப்பவர் அல்லது மனைவி நாமினியாக இருக்கும் வகையிலோ அமைய வேண்டும். கணக்கு வைத்திருப்பவர் மரணம் ஏற்பட்டால் கணக்குகளை எளிதாக மாற்றுவதற்கு இது உதவுகிறது.

4. மின்னணு கணக்குகள், மின்னஞ்சல் போன்றவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். LastPass போன்ற சில ஆன்லைன் செயலிகளை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தலாம்.

5. குறைந்தபட்சம் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு உயில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி எழுதப்பட்டிருக்கும் உயில் குடும்பம் அணுகக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.

எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளாத கணவர் திடீரென இறந்துவிட்டால் என்ன செய்வது?

உயிரிழப்பு - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழப்பு - கோப்புப் படம்

வாழ்க்கைத் துணை திடீரென மரணமடைந்து விட்டால், நிதி ஆவணங்களை மீள் கட்டமைப்பது மிக முக்கியமான படியாகும்.

தகவல்களின் முதல் ஆதாரம் மொபைல் போன். அடுத்தது மின்னஞ்சல். இறந்தவரின் செல்போன் மற்றும் மின்னஞ்சல்களைப் பார்ப்பது நிதிப் பதிவுகளை மீட்பதற்கு உதவும். இறந்தவருக்கு நம்பிக்கைக்குரிய நிதி ஆலோசகர் இருந்தால், அவரிடம் அனைத்துப் பதிவுகளும் இருக்கும். வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், காப்பீட்டு ஆவணங்கள், மியூச்சுவல் ஃபண்ட் பதிவுகளை பெற முடியும்.

செல்போனில் உள்ள குறுஞ்செய்திகள், வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க உதவும். ஒரு வங்கிக் கணக்கு அறிக்கை கிடைத்தால், அனைத்து நிதிச் சொத்துகள் பற்றிய தகவலின் ஆதாரமாக அது இருக்கலாம். NSDL மற்றும் CAMS அறிக்கைகள் மூலம் பங்குச் சந்தை மற்றும், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய முதலீடுகளைப் பெற முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: