தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'

தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம், Tamil Tech

படக்குறிப்பு, தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

(செய்திகளும் தகவல் தொடர்பும் உலகை ஒன்றிணைந்துள்ளன. பலரும் இந்த இரு அறிவு சார்ந்த வழிகளைப் பயன்படுத்தி, தங்கள் கனவு உலகத்தைப் படைத்திருக்கிறார்கள். அப்படி சமூக வலைதளங்களின் மூலம் சாதித்தவர்களின் கதைகளை இத்தொடரில் வழங்குகிறது பிபிசி தமிழ்.)

வாழ்வின் முக்கியமான கட்டத்தில் நம் காதுகளில் விழக்கூடிய ஒரு சொல், நம் வாழ்வையே திருப்பிப் போட்டுவிடும். அத்தகைய ஊக்கம் மிக்கச் சொற்கள், சரியான சூழலில் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். தமிழ்செல்வனுக்கு அவருடைய அம்மாவிடமிருந்து கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, அதுவரை ஆங்கிலத்தில் தொழில்நுட்பம் தொடர்பான யூடியூப் சேனலை நடத்தி வந்தவர், "தமிழ் டெக்" தமிழ் மொழியில் தொழில்நுட்பம் சார்ந்த சேனலைத் தொடங்கினார்.

பத்து பேர் பார்த்தாலும்கூடப் போதும் தேவையானவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சேனலை தொடங்கினார். இன்று தமிழ் டெக் யூடியூப் சேனல் வழியாக, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் கைகளில் தமிழ்செல்வன் தயாரிக்கும் காணொளிகள் தவழ்ந்து வருகின்றன.

கிருஷ்ணகிரியில் பிறந்து பெங்களூருவில் எம்.டெக்-ஐ.டி படித்தார். அவர் யூடியூப் சேனலைத் தொடங்கும்போது தனக்குத் தெரிந்ததை அனைவருக்கும் பகிரவேண்டும் என்ற ஒரேயோர் எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது. ஃபேஸ்புக், ஆர்குட் பக்கத்தைப் போல, யூடியூபிலும் தன் பெயரிலேயே உருவாக்கிய கணக்கிலிருந்துதான் தமிழ்செல்வனின் யூடியூப் பயணம் தொடங்கியது.

"சிறுவயதில் இருந்தே தொழில்நுட்பங்களின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு, எனக்குத் தெரிந்தவற்றை சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்க விரும்புவேன். அதே நோக்கத்தில் கல்லூரியில் படிக்கும்போது, இணையதளத்தில் ஒரு வலைப்பதிவாளராக எனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி எழுதத் தொடங்கினேன்.

தொழில்நுட்பங்கள் தொடர்பாக அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்போது, என்னிலேயே சில மாற்றங்களை உணர்ந்தேன். அதிகமாக வாசிப்பது குறைந்தது. காணொளிகளாகவே அதிக விஷயங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

படிப்பது குறைந்தது, பார்ப்பது அதிகமானது

என்னைப் போலவே சுற்றியிருக்கும் அனைவரும் படிப்பதைக் குறைத்து, பார்ப்பதை அதிகப்படுத்தினார்கள். அப்போதுதான் யூடியூப் பிரபலமாகிக் கொண்டிருந்தது. ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் தொடங்குவதைப் போல் என் பெயரிலேயே யூடியூபில், 2014-ம் ஆண்டில் ஒரு கணக்கு தொடங்கினேன்," என்று கூறினார்.

பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கமின்றி, தனக்குத் தெரிந்ததை சுற்றியிருப்பவர்களுக்கும் கற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய முதல் யூடியூப் பக்கத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறார்.

தன்னுடைய முதல் காணொளிக்காக, நண்பர் ஒருவர் வாங்கிய புதிய ஸ்மார்ட்ஃபோனை முழுமையாகப் பரிசோதித்து, அதை ஒரு காணொளியாக உருவாக்கி யூடியூபில் பதிவேற்றினார். "எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பத்தில்தான் அந்தக் காணொளியைச் செய்தேன். தமிழ்செல்வன் என்று என் பெயரிலேயே ஒரு யூடியூப் கணக்கைத் தொடங்கி அதில் பதிவேற்றினேன்.

எங்கள் ஊரில் நண்பர்கள் பலருக்கும் நான் தான் இணைய வர்த்தகத்தின் மூலம் பொருள் வாங்கித் தருவேன். அப்படி ஒரு நண்பருக்கு வாங்கியபோது, அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு, இரண்டு நாட்களுக்கு வைத்து அவருக்காக வாங்கிய ஸ்மார்ட் ஃபோனை முழுமையாக அலசிப் பார்த்து அந்தக் காணொளியை உருவாக்கினேன்.

தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம், Tamil Tech

காணொளியைப் பதிவேற்றிய முதல் சில நாட்களிலேயே ஆயிரம் பேருக்கு மேல் பார்த்தார்கள். பிறகு, நான் எதிர்பார்க்காத வகையில் 20,000 பேர் வரை அதைப் பார்த்தார்கள். சிலர் சந்தேகங்களும் கேட்டிருந்தார்கள்.

அது மிகவும் பிடித்துப் போனது. அடுத்து மேலும் ஒரு சில காணொளிகளை அதில் செய்தேன்," என்று கூறியவர் தன்னுடைய பெயரிலேயே தொடங்கப்பட்ட அந்த சேனலை மேற்கொண்டு செல்லவில்லை. அதற்குப் பதிலாக ஆங்கிலத்தில், 'ஹவ் இஸ் இட் (How is it?)' என்ற தொழில்நுட்பம் சார்ந்த ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.

தமிழ் மொழியில் தொடங்கும் முடிவு

"முதல் சேனலில் நான்காவது காணொளியைப் போடும்போதே, யூடியூபிலிருந்து ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் என்று பணம் கிடைக்கத் தொடங்கிவிட்டது. அப்போதுதான், இதை வருமானத்திற்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கலாம் என்று சிந்திக்கவே தொடங்கினேன்.

2014-ல் எம்.டெக்-ஐ.டி படித்துக் கொண்டிருக்கும்போதே, தனியாக லோகோ வைத்து முறையாக ஆங்கிலத்தில் 'ஹவ் இஸ் இட்,' என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினேன். அதுதான் என்னுடைய முதல் அதிகாரப்பூர்வ டெக் சேனல். அதில் 1000 சப்ஸ்கிரைபர்களைப் பெறுவதற்கு ஓராண்டுக் காலம் பிடித்தது.

சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 1000 பேரைத் தாண்டிய பிறகுதான் எனக்குள், நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. அதன்பிறகே தமிழிலும் தனியாக தொழில்நுட்பங்களுக்கென ஒரு சேனலைத் தொடங்கினேன்," என்கிறார் தமிழ்செல்வன்.

அதிலிருந்து தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு சேனல்களிலும் அவர் தன்னுடைய காணொளிகளை வெளியிட்டு வருகிறார். ஆங்கில சேனலுக்காகச் செலவழித்த ஓராண்டுக் காலம் தான் தமிழில் தொடங்கியபோது பெருமளவு உதவியாக இருந்ததாகச் சொல்கிறார்.

"2016-ம் ஆண்டில் நான் தொடங்கிய நேரத்தில், தமிழ் மொழியில் பெரியளவு போட்டியாளர்கள் இருக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் அதிகப் போட்டிகள் இருந்தன. அதற்கு ஈடுகொடுத்து ஓடுவதற்காகக் கற்றுக்கொண்ட அனைத்தையும் தமிழில் கொண்டுவந்து இறக்கினேன்," என்று கூறியவருக்கு ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் களமிறங்க முடிவு செய்தபோது, தமிழில் தொடங்குவதற்கான சிந்தனையே எழவில்லை என்கிறார்.

தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம், Tamil Tech

"அதற்குக் காரணம், நான் பெங்களூருவில் படித்தேன். அதிகமாக ஆங்கிலத்தில் தான் பேசுவோம். அதோடு, இதுமாதிரியான சேனல்களை ஆங்கிலத்திலேயே பார்த்திருந்ததால் அந்த மொழியிலேயே செய்ய வேண்டுமெனத் தோன்றியது.

ஆனால், தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் பலரும் காணொளியைப் பார்த்துவிட்டு பல சந்தேகங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குத் தமிழில் சொல்லும்போது இன்னும் எளிமையாகப் புரிந்தது. அப்போதுதான் தமிழில் தொடங்கினால் என்னவென்ற எண்ணமே தொடங்கியது.

அதோடு, இதுபோன்ற தொழில்நுட்ப சேனல்களை இந்தி மொழியில் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியில் அதற்கான பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் தமிழிலும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது," என்றவர் இதைப் பற்றித் தன் அம்மாவிடம் பேசியுள்ளார்.

அம்மாவும், "நல்ல யோசனையாக உள்ளது. தாராளமாகச் செய், இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் பார்ப்பார்கள்," என்று ஊக்கமளித்தார். அந்த ஊக்கத்தை உறுதுணையாகக் கொண்டு தமிழ் டெக் யூடியூப் சேனலைத் தொடங்கினார் தமிழ்செல்வன்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் கிடையாது

"தமிழில் இந்த யூடியூப் சேனலைத் தொடங்கும்போது என்னுடைய நோக்கம் ஒன்று மட்டும்தான். 10 பேர், 100 பேர் என்று பார்த்தாலும்கூடப் போதும். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகம் எழுபவர்களுக்கு, இதெல்லாம் தேவைப்படுபவர்களுக்கு இந்தத் தகவல்கள் கிடைக்கவேண்டும்.

ஆனால், தேவையான தகவலைச் சரியாகக் கொடுக்கும்போது மக்கள் எந்தளவுக்கு வரவேற்பார்கள், என்பதை தமிழ் டெக்கிற்குக் கிடைத்த வீச்சு உணர வைத்தது."

தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம், Tamil Tech

இப்படியாக ஆங்கிலம், தமிழ் என்று தொடங்கியவர், ஆரம்பக்கட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், என்று ஒவ்வொரு சாதனத்தையும் புதிதாக வாங்க முடியாது. அதற்கான நிதி அவரிடம் கிடையாது. ஆகவே, நண்பர்களுக்கு அவர் இணைய வர்த்தகத்தில் வாங்கித் தரும் பொருட்களை 2 அல்லது 3 நாட்களுக்கு வைத்து, காணொளி எடுத்துவிட்டுக் கொடுப்பார்.

"பல நண்பர்கள் ஆரம்பக்காலத்தில் உதவினார்கள். அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் என் நண்பருக்கு நான் கிருஷ்ணகிரியில் ஆர்டர் போட்டு பொருளை வாங்குவேன். அந்தப் பொருளை வைத்து, மதிப்பாய்வு, அலசல், பயன்பாடு என்று அனைத்து காணொளிகளையும் அதை வைத்து எடுத்துவிட்டு, அவருக்கு அனுப்பி வைப்பேன்.

உள்ளூர் நண்பர்களுக்கு என் முகவரியிலேயே பொருளை வர வைப்பேன். அதில் வரும் புதிதாக வெளியான தொழில்நுட்ப சாதனஙக்ளை, அவர்களின் அனுமதியோடு சில நாட்கள் வைத்து, காணொளியாகப் பதிவு செய்துவிட்டு அவர்களுக்கு அனுப்புவேன். அதுபோக, பெங்களூரு, சென்னை என்று வெளியூர்களில் இருக்கும் சில நண்பர்களிடம், நேராகச் சென்று அவர்களுடைய தொழில்நுட்பச் சாதனங்களை வாங்கி வந்து, வேலையை முடித்துவிட்டுத் திரும்பச் சென்று கொடுப்பேன்," என்கிறார் தமிழ்செல்வன்.

இவ்வளவு தூரம் முயன்று அவர் அப்போது இந்த காணொளிகளைச் செய்தாலும், அதை சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலுமே செய்ததாகச் சொல்கிறார். அதோடு, கருத்துப் பெட்டிகளில் பார்வையாளர்கள் தெரிவிக்கும் சந்தேகங்களுக்கும் அதனாலேயே மதிப்பளித்து, அவற்றை விளக்குவதாகவும் சொல்கிறார்.

அவருடைய முயற்சியின் விளைவாக 8 மாதங்களுக்குப் பிறகு 1,000 சப்ஸ்கிரைபர்கள் தமிழ் டெக் சேனலுக்குக் கிடைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்களில் 5,000 பேர் வந்தார்கள். அதற்கடுத்த சில மாதங்களில் 10,000 பேர், 50,000 பேர், ஒரு லட்சம் பேர் என்று வளர்ந்த தமிழ் டெக் சேனல் இன்று முப்பது லட்சம் சப்ஸ்கிரைபர்களோடு யூடியூபின் முன்னணி டெக் சேனலாக வளர்ந்து நிற்கிறது.

வெற்றிக்காக பணத்தின் பின்னால் ஓடவில்லை

தமிழ் டெக் இதுவரை கடந்து வந்த பாதையில், இருபது லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வரும்வரை தமிழ்செல்வன் தனி ஒருவராக அதை நிர்வகித்து வந்தார். 2020-ம் ஆண்டு முதல் அவருக்குக் கீழே இரண்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம், Tamil Tech

"நான் தொடங்கிய நேரத்தில், தமிழில் வெளியிடும் ஒரு காணொளியை 1000 பேர் பார்த்தாலே வெற்றியடைந்துவிட்டதாக நினைப்பேன். ஏனெனில், அப்போதெல்லாம் 50, 100 என்றே பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும். அன்று எதிர்கொண்ட போராட்டங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், விழுந்த அடிகள் என்று கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

நேர்மறையாக, பலருக்கும் பயனுள்ள, நன்மைபயக்கூடிய ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறேன் என்று திருப்தியாக இருக்கிறது. தொழில்ரீதியிலான பார்வையோடு சேனலை அணுகவேண்டிய தவிர்க்கமுடியாத சூழலில்தான் இன்று இருக்கிறோம். ஆனாலும்கூட, கொடுக்கக்கூடிய தகவல்களில் அதிகக் கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கம்.

இன்று வரை ரம்மி போன்ற விஷயங்களை விளம்பரப் படுத்துவதைத் தவிர்த்து வருகிறேன். அதை மறுத்ததால் பல வருமானங்களை இழந்துள்ளோம். ஆனால், அதற்காக வருந்தவில்லை. ஏனெனில், தமிழ் டெக் தொடங்கிய காலத்தில் நான் எதிர்கொண்ட தடைகளுக்கு நடுவேகூட தகவல்களை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இருந்தேன். இனியும் அந்தப் பொறுப்பை உணர்ந்து அப்படித்தான் இருப்பேன்.

மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை, அவர்களுக்கு விரும்பிய வகையில், புதுமையாகக் கொடுக்கவேண்டும். பல்வேறு டிரெண்டுகளுக்கு நடுவே அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது ஆரம்பத்தில் கடினம் தான். ஆனால், அதையே புதுமையாகச் செய்யும்போது அவர்களுடைய வரவேற்பைப் பெறலாம்," என்கிறார்.

"என்னுடைய வெற்றிக்காக நான் பணத்தின் பின்னால் ஓடவில்லை. ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய முயலும்போது, அதன்மூலம் நமக்குக் கிடைக்கும் வளர்ச்சி தொடக்கத்தில் குறைவாகவே இருக்கும். ஆனால், மக்களிடம் அது சென்று சேரத் தொடங்கும்போது, நீங்கள் எதிர்பார்க்காத உயரத்தை அடைவீர்கள்."

தமிழ் டிரெக்கர் புவனி தரன்

(உங்கள் சாதனைகளை உலகுக்கு சொல்ல உங்களுக்கொரு வாய்ப்பு! தமிழ்செல்வன் போல நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ தங்கள் உலகை விரிவாக்கிக்கொண்டிருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்கண்ட விவரங்களை அனுப்புங்கள்:

முழு பெயர்:

வயது:

நீங்கள் யாரை பரிந்துரைக்கிறீர்கள் (தங்களை/ பிறரை):

பிறர் என்றால், உங்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபருக்கும் உள்ள உறவு:

உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:

உங்களை எங்கள் ஆசிரியர் குழு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:)

தமிழ் டிரெக்கர் புவனி தரன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: