பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?

திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் என்பவர், நான்காவதாக 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்தார். மாணவியின் தாய் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் அது. தற்போது அச்சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார். இச்சம்பவம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தெரியவந்ததையடுத்து, ராதாகிருஷ்ணனும், சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டனர். சிறுமி காப்பகத்தில் உள்ளார். வறுமையின் காரணமாக சிறுமியை அத்தாய் திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய எடுத்துக்காட்டு இது. குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்ற போதிலும், திருமணத்தின் மீதான இந்திய சமூகத்தின் பார்வை, சமூக-அரசியல்-பொருளாதார சூழல், சமூக சீர்திருத்த திட்டங்கள் கடைக்கோடியை சென்றடையாதது, விழிப்புணர்வின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றளவும் இந்தியாவின் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் தினந்தோறும் நடந்தேறி வருகின்றன.

மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில்

2019-ம் ஆண்டில் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக இருக்கும். உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகளில் பாதிக்கும் மேலானோர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள். குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாக கூறுகிறது யுனிசெஃப்.

இந்நிலையில்தான், ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரும் வகையில், இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மத திருமணங்களுக்கும் இது பொருந்தும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்களின் திருமண வயது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளதாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோதி. இது குறித்து ஆராய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இக்குழு, திருமண வயதுக்கும் குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால இறப்பு விகிதம், மொத்த கருவுறுதல் விகிதம், குழந்தைகள் பாலின விகிதம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.

இக்குழு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அக்குழுவின் அறிக்கை பொதுவெளியில் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த பரிந்துரையின் அடிப்படையில்தான் பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்பதே இந்த முடிவின் நோக்கம் என, ஜெயா ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "திருமணத்தைத் தவிர்த்துவிட்டு ஒவ்வொரு துறையிலும் பாலின சமத்துவத்தைப் பேச முடியாது. ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவள் என்பது, அவள் கல்லூரி செல்வதற்கான வாய்ப்பைப் பறிக்கிறது. ஆனால், ஆணுக்கு திருமண வயது 21 ஆக இருப்பதால், ஆண் வாழ்க்கைக்குத் தயாராவதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வாய்ப்பு ஏற்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணங்களால் ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் தாக்கங்கள், குழந்தைபேறினால் ஏற்படும் இறப்புகள் உள்ளிட்டவற்றை குறைக்கும் நோக்கில், இந்த மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

திருமணம்

பட மூலாதாரம், EYESWIDEOPEN

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த முடிவுக்கு, ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை உயர்த்தியதில் சமத்துவம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், படிப்பை இடைநிறுத்திவிட்டு செய்யப்படும் இளவயது திருமணங்கள் தடுக்கப்படும் என்பது ஆதரவு குரலாக உள்ளது.

"சமத்துவத்திற்கான படி"

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் இயல் துறை பேராசிரியர் மணிமேகலை இது பற்றி பிபிசி தமிழிடம் கூறுகையில், "பெண்களின் திருமண வயதை உயர்த்தி கட்டாயம் சட்டம் கொண்டு வர வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் சட்டம் மட்டுமே உதவவில்லை என்பதைத்தான் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், சட்டத்திற்கு பயந்தாவது குழந்தைத் திருமணங்கள் ஓரளவுக்குக் குறையும். யாராவது கண்காணிக்க இல்லையென்றால் இந்த தவறை செய்யலாம் என்கிற மனநிலை மக்களிடையே உண்டு. அதனால்தான் குழந்தைத் திருமணங்கள் கொரோனா ஊரடங்கு காலங்களில் அதிகமானதை பார்த்தோம்.

திருமணத்திற்கான வயதில் பெண்களின் வயதை அரசே 18 வயது என குறைத்து வைத்திருப்பது, அரசே ஏற்றத்தாழ்வுடன் யோசிப்பது போன்று இருக்கிறது. திருமணம், கர்ப்பமடைதல் ஆகியவற்றில், பெண்ணின் வயது ஆணைவிட குறைவாக இருந்தால்தான் நல்லது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பெண்ணின் திருமண வயதை 18 ஆகவும், ஆணின் திருமண வயதை 21 ஆகவும் வைத்திருப்பது, பெண்ணைவிட ஆண் அதிகமாக படித்திருக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலானது. பெண்ணின் வயதை 21 ஆக அதிகமாக்கினால் குறைந்தது கல்லூரிப் படிப்பை முடித்துப் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்படலாம்" என தெரிவித்தார்.

அதேபோன்று, படிப்பை இடைநிறுத்திவிட்டு காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள், தற்போது 21 வயது வரை காத்திருந்து திருமணம் செய்வார்கள் என, வழக்குரைஞர் நிலவுமொழி செந்தாமரை தெரிவிக்கிறார்.

"சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு தேவை என்பதால், திருமணம் செய்ய உரிய வயது வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். இப்போது 18 வயது வரை காத்திருக்கின்றனர். இந்த சட்டம் வந்தால் 21 வயதுவரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வயதில் திருமணம் என்பதே வரவேற்கப்படக்கூடிய விஷயம்" என்றார்.

ஆதரவுக்குரல்களுக்கிடையில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

"வயதை மட்டும் உயர்த்துவது கண் துடைப்பாகத்தான் இருக்கும்"

வழக்குரைஞர் அஜிதா
படக்குறிப்பு, "பெண்களுக்கான வாய்ப்பையும், அவர்களின் சமூக உற்பத்தியையும் அதிகரிக்காமல், வயதை மட்டும் உயர்த்துவது கண் துடைப்பாகத்தான் இருக்கும்": அஜிதா

இது தொடர்பாக, பிபிசியிடம் பேசிய வழக்குரைஞர் அஜிதா, "ஒரு சட்டை எல்லோருக்கும் பத்தாது" என பழமொழி உண்டு. மிகவும் ஏற்றத்தாழ்வுமிக்க இந்திய சமூகத்தில் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதில் பல்வேறு விஷயங்களையும் பார்க்க வேண்டும். 14 வயது வரை தான் அடிப்படைக் கல்வியை நமது அரசு உத்தரவாதம் கொடுக்கிறது. 14 வயது முதல் 21 வயது வரை அனைத்துப் பெண்களுக்கும் வேலை கிடைக்குமா என்பதும் உத்தரவாதம் இல்லை.

அப்படிப்பட்ட சமயத்தில், பள்ளிப்படிப்பு முடித்த பின் திருமணம் என்பது பெண்களின் பாதுகாப்பாக இருக்கும் என பெற்றோர்கள் கருதுகின்றனர். 21 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சரியான விஷயம் தான். ஆனால், 21 வயதுக்குட்பட்ட திருமணங்களை அரசு எப்படி கையாளப் போகிறது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.

யுனிசெஃப் புள்ளிவிவரப்படி, இன்றைக்கும் இந்தியாவில் 43 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்குக் கீழ் திருமணம் நடைபெறுகிறது. குழந்தைதைத் திருமணங்கள் குறித்த சரியான தரவுகளை அரசு தருவதில்லை. தங்களின் மதிப்பை மட்டுமே கவனத்தில் கொள்ளும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. பெண்ணியவாதிகள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதில்லை என கூறும் ஒரு கட்சியின் அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் இது என்பதுதான், இது தேர்தலுக்கான நோக்கமா என கேள்வி கேட்க வைக்கிறது.

அதனால், பெண் கல்வி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு, இதனை அரசு உறுதி செய்ய வேண்டும். விவசாய கூலி வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலானோர் ஒற்றை குடிசையில் வாழ்கின்றனர். அப்போது 16-17 வயதுள்ள பெண்களை ஒற்றை குடிசையில் வைத்திருப்பது அவர்களின் தனிவாழ்வை பாதிக்கக்கூடியதாக உள்ளது. எனவே, அவர்களுக்கு வாழ்விடத்துக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

ஏழைகள் மிகுந்த நாட்டில், இத்தகைய சட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்குமா? இல்லை, அடிப்படையாக அவர்களின் வாழ்வை மாற்றுமா?

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், 21 வயது வரை அப்பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோமா என்றால், 14 வயதுக்கு மேல் அவர்களின் கல்வியையே உத்தரவாதப்படுத்த முடியாது. இந்தியாவில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஏழ்மையில் இருக்கின்றனர். சமச்சீரற்ற ஒரு நாட்டில் இவற்றை கவனத்தில் கொண்டார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

இதனை கேலிக்கூத்தாகிவிடக்கூடாது என்பதே எங்களின் அக்கறை. பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இல்லாத சமூகத்தில், இதனை பெற்றோர்கள் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு சிறியளவில் இருக்கிறது. பெண்களுக்கான வாய்ப்பையும், சமூக உற்பத்தியையும் அதிகரிக்காமல், வயதை மட்டும் உயர்த்துவது கண் துடைப்பாகத்தான் இருக்கும்" என்றார்.

"மக்களின் மனதை மாற்ற வேண்டும்"

மக்களின் மனதை மாற்றாமல், திருமண வயதை உயர்த்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்கிறார், வழக்குரைஞர் சுதா ராமலிங்கம்.

வழக்குரைஞர் சுதா ராமலிங்கம்
படக்குறிப்பு, "மக்களின் மனதை மாற்ற வேண்டும்": வழக்குரைஞர் சுதா ராமலிங்கம்

"குழந்தைத் திருமணச் சட்டம், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறைக்கு வந்து எத்தனை ஆண்டுகளாகிவிட்டன. இன்றும் திருமண மண்டபங்களில் வரதட்சணையை பெருமையாக காட்சிப்படுத்துகின்றனர். இதனை சமூகத் தீங்காகத்தான் பார்க்க வேண்டும். எனவே, இதனை சமூகவியல் ரீதியாக மட்டுமே மாற்ற முடியும். குற்றவியல் சட்டத்தால் மட்டும் இதனைத் தடுக்க முடியாது.

மக்களின் மனதை மாற்ற வேண்டுமே தவிர எல்லாவற்றையும் குற்றமாக பார்ப்பது சரியல்ல. கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யாமல் திருமண வயதை உயர்த்துவது எந்த பலனையும் தராது. 21 வயதுக்குக் கீழ் நடைபெறும் திருமணங்களை குற்றமாக கருதினால், அந்த திருமணங்களை என்ன செய்வார்கள்? எத்தனை திருமணங்களை குற்றமாக கருதுவார்கள்? பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .

பெண் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தினால் இது தானாக மாறும். பெண்களுக்குக் கல்வி தர வேண்டும். அவர்களை அதிகாரப்படுத்த வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டால் அதனை சட்டம் இல்லாமலேயே, மக்கள் தன்னார்வத்துடன் பின்பற்றுகின்றனர்.

இன்னொன்று, இது முழுவதும் தனிப்பட்ட விவகாரம். தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசு எந்தளவுக்கு நுழைய முடியும் என பார்க்க வேண்டும். இதனை எப்படி அமல்படுத்தப் போகின்றனர்?" என்கிறார்.

"சாதி, மத சக்திகளுக்கு ஆதரவாக அமையும்"

சாதி, மத ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக்கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

"இந்த அறிவிப்பு பல்வேறு மோசமான விளைவுகளை உருவாக்கும். பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தங்கள் கடமையாக பெற்றோர்கள் கருதுகின்றனர். மகன்கள் என்றால் அவர்களை படிக்க வைப்பதை கடமையாக கருதுகின்றனர். கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். இது சட்டமானால், 18 வயதில் பெண்களை திருமணம் செய்து வைப்பவர்களை குற்றவாளிகளாக மாற்றும் போக்கு அதிகமாகும். முதலில் கிராமங்களில் நிலவும் குடும்ப வறுமையை போக்க வேண்டும்.

மதம் மாறிய திருமணங்களை தடுக்கவும், சாதிய ரீதியாக 'சாதி மறுப்புத் திருமணங்களை' தடுக்கவும் இதில் உள்நோக்கம் இதில் உண்டு. சாதிய, மதவாத சக்திகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் இருக்கக்கூடும்.

வயதாக ஆக, பெண்களுக்கு சாதிய உணர்வை வளர்த்து தங்கள் சொந்த சாதிகளில் திருமணத்தை இதன்மூலம் செய்துவைக்கலாம். ஏனெனில், இயல்பாகவே குடும்ப கௌரவத்தை பெண் குழந்தைகள் மீது ஏற்றிவைக்கும் சமூகம் இது.

மேலும், பொது சிவில் சட்டத்தையும் கொண்டு வர முயற்சிக்கின்றனர். முஸ்லிம் திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 என இருக்கிறது. இதன்மூலம், முஸ்லிம்களை குறிவைக்கின்றனர். நீண்டகால விளைவாக அவர்களின் மக்கள்தொகையை குறைப்பதற்கான, இந்துத்துவ நோக்கமும் இதில் உள்ளது.

மற்றொன்று, இயல்பாகவே இன்று பெண்களின் திருமண வயது அதிகரித்துவிட்டது. ஜப்பானில் பெண்களின் திருமண வயது 35 என்ற அளவில் உள்ளது. ஆனால், சட்டத்தில் குறைவாக உள்ளது. கியூபாவிலும் திருமண வயது அதிகரித்துள்ளது. பெண்களே விரும்பி 21 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்" என்றார்.

இளம்வயது பெண்களிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை பிரச்சினைகளை தீர்க்க சமூக நல திட்டங்களையும் உணவு பாதுகாப்பையும் நோக்கி நகர்வதே தீர்வாக இருக்கும் எனக்கூறுகிறார் ரவீந்திரநாத்.

"மருத்துவ ரீதியான காரணங்களை சொல்வது ஏமாற்றும் திட்டம். இந்தியாவில் 50 சதவீத கர்ப்பிணி பெண்கள் ஏன் ரத்தசோகையுடன் உள்ளனர்? அதனை ஏன் சரிசெய்யவில்லை. பேறுகால இறப்புகளை ஏன் தடுக்கவில்லை. பிரசவத்தின் போதும், அதற்கு பின்னும் ஏற்படும் ரத்தப்போக்கினாலேயே பெண்கள் இறக்கின்றனர். 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடையே ரத்தசோகையை சரிசெய்யாமல், எப்படி 21 வயதில் மட்டும் சரிசெய்வார்கள்?

சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திருமணத்திற்கு உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் திட்டம் போன்று, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்தினால் பெண்கள் படிப்பு முடியும் வரை பெற்றோர்கள் காத்திருப்பார்கள். உயர்கல்வி வரை படிப்பு இலவசம் என்பதை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பையும் புரதச்சத்து சரியான விகிதத்தில் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட காலமாக நிலவும் பாலின அசமத்துவமும், பெண் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததும் தான் இப்பிரச்சினைக்குக் காரணம்.

பள்ளிப்படிப்பு மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் மாநில அரசுகள் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். காலை உணவையும், மாலை சுண்டல் உள்ளிட்டவற்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாயை முதலாளிகளுக்கு வழங்கும்போது ஏன் படிக்கும் குழந்தைகளுக்கு செய்யக்கூடாது?" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: