அரியலூரில் 8ஆம் வகுப்பு மாணவியை 4ஆவது திருமணம் செய்த நபர்: சிறுமி மீட்கப்பட்டது எப்படி?

குழந்தைத் திருமணம் சித்தரிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

அரியலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான ராதாகிருஷ்ணன், அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார். ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருந்தும் இவருக்கு வாரிசு இல்லை எனக் கூறப்படுகிறது.

சிறுமியோடு நான்காவது திருமணம்

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். தனது கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் அந்தப் பெண் வறுமையில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராதாகிருஷ்ணனின் பின்புலத்தை அறிந்த அந்தப் பெண்மணி, கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி எட்டாம் வகுப்பு படித்து வந்த தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்தத் திருமணமானது, சிறுமியின் தாய், ராதாகிருஷ்ணனின் தாயார் ஆகியோர் முன்னிலையில் கோயிலில் நடைபெற்றுள்ளது.

இந்தத் திருமணம் தொடர்பாக, அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கிடைக்கவே, தற்போது ராதாகிருஷ்ணனும் சிறுமியின் தாயாரும் போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாரிசுக்காக நடந்த திருமணமா?

``ராதாகிருஷ்ணனுக்கு வாரிசுகள் இல்லாததால் சொத்துகளைப் பெறுவதற்காக இந்த சிறுமியை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பேருந்தில் பயணிக்கும்போது ராதாகிருஷ்ணனோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழுவினரால் மீட்கப்பட்ட அந்தச் சிறுமியை இல்லத்தில் தங்கவைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்'' என்கிறார், அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன்.

``நடத்துநரின் மூன்று மனைவிகளில் யாரும் புகார் அளிக்கவில்லையா?'' என்றோம். `` அவர்கள் யாரும் புகார் தரவில்லை. குழந்தையின் தாயார், தனது தேவைக்காக ராதாகிருஷ்ணனை பயன்படுத்திக் கொண்டுள்ளார். வாரிசு வேண்டும் என்றால் வேறு யாரையாவது அந்த நபர் திருமணம் செய்திருக்கலாம். சிறுமியை திருமணம் செய்ததன் மூலம் அந்த நபரின் நோக்கமே தவறாக உள்ளது. போக்சோ சட்டப்பிரிவு 5, 6 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்.

மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் `அச்சம் தவிர், எதிர்த்து நில், துணிந்து நில்' என்ற முழக்கத்தை மாவட்ட நிர்வாகம் மூலமாக முன்னெடுத்து வருவதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

ஆர்.டி.ஐ சொல்லும் அதிர்ச்சி

இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன், `` அரியலூர் விவகாரத்தில் அரசு நடத்துநரின் மீதுதான் முழுத் தவறும் உள்ளன. ஓர் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதே சட்டப்படி தவறானது. அவர் ஏற்கெனவே மூன்று பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு நான்காவதாக ஒரு குழந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார். சொத்து, வாரிசு என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. ஒரு குழந்தை, எப்படியொரு இன்னொரு குழந்தையை சுமக்க முடியும். அந்தக் குழந்தையின் தாயை குறை சொல்லிப் பலனில்லை. அவரது குடும்பச் சூழல் அப்படிப்பட்டதாக உள்ளது'' என்கிறார்.

தேவநேயன்
படக்குறிப்பு, தேவநேயன்

தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக பெறப்பட்ட ஆர்.டி.ஐ தகவல்களை பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.

அதன்படி, 2015 முதல் 2020 வரையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, வண்டலூரை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ளார். அவருக்குக் கடந்த 28.7.21 அன்று சமூக நலத்துறையிடம் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட 11,553 திருமணங்கள்

அதன்படி, தருமபுரியில் இந்தக் காலகட்டங்களில் 902 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் - 683, கரூர் - 402, நாமக்கல் - 449, பெரம்பலூர் - 674, சேலம் - 720, தேனி - 734, திருவண்ணாமலை - 712, அரியலூர் - 82 எனக் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.

இதில் குழந்தைத் திருமணச் சட்டத்தின்படி 586 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதே காலகட்டத்தில் 11,553 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`` குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் தி.மு.க அரசு நல்லமுறையில் வேலை செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரே நேரடியாக ஆய்வு நடத்தினார். வரும் வாரங்களில் சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து `ஜீரோ சைல்டு மேரேஜ்' என்ற இலக்கைத் தீர்மானித்துள்ளனர். அரசாங்கம் தீவிரமாக வேலை செய்தாலும், சட்டங்களால் மட்டுமே இதனைத் தடுக்க முடியாது. கலாசாரத்தில் மாற்றம் வேண்டும். பெண் குழந்தை என்றாலே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு பெற்றோர் வந்துவிடுகின்றனர்'' என்கிறார் தேவநேயன்.

திண்டுக்கல்லில் அதிகம்

தொடர்ந்து பேசுகையில், `` அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல (NFHS) சர்வேயின்படி, திண்டுக்கல்லில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவலின்படி பார்த்தால், தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் 11,500 திருமணங்கள் என்பதே சற்று அதிகம்தான். பள்ளிக்கு ஒரு பெண் குழந்தை ஒரு வாரம் வராமல் இருந்தாலே மாவட்ட சமூக நல அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

குழந்தைத் திருமணத்திலிருந்து பள்ளி மாணவி காப்பாற்றப்பட்டது எப்படி?

கிராமக் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் கடந்த 2012 முதல் 2020 வரையில் இயங்கவேயில்லை. தற்போது இதனை இயங்க வைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் தொடர் கண்காணிப்புகள் அவசியம். இந்த விவகாரத்தில் வறுமையும் வாழ்வாதாரமும்தான் முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. குழந்தைத் திருமணங்கள் நடக்கக் கூடிய குடும்பங்களைக் கிராமக் குழுக்கள் கண்டறிந்து அரசுத் திட்டங்களை அங்கே கொண்டு செல்ல வேண்டும்'' என்கிறார்.

`` ஒரு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடப்பது என்பதை அவமானமாகப் பார்க்க வேண்டும். வளர் இளம் குழந்தைகள் காதல்வயப்பட்டு ஓடிப் போவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இளவயதில் ஓடிப் போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் சுயசாதியில் திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. பெண் குழந்தைகள் விளையாடக் கூடிய இடங்களையும் பார்க்க முடிவதில்லை. குழந்தைகளை போட்டிகளில் பங்கேற்ப வைப்பதன் மூலம் அவர்களை மடைமாற்ற முடியும். தண்டனை மட்டும் குழந்தைத் திருமணங்களை தடுக்காது. `என்னுடைய கிராமத்தில் குழந்தைத் திருமணம் இல்லை' என்பதை கிராமங்கள் அறிவித்தால் அவர்களைக் கொண்டாட வேண்டும். அப்படியொரு சூழல் வரவேண்டும்'' என்கிறார் தேவநேயன்.

பள்ளி திறப்புக்குப் பிறகும் அதிகரிப்பு

குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, தமிழ்நாடு சமூக நலத்துறையின் இணை இயக்குநர் சுந்தரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கொரோனா தொற்றுக்குப் பிறகு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன.

பள்ளி திறப்பு

பட மூலாதாரம், BBC / நிகிதா தேஷ்பாண்டே

இதனைத் தடுக்கும் வகையில் மண்டலவாரியாக அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தொலைபேசியில் அழைப்பு வந்தாலே திருமணத்தை நிறுத்த வேண்டும், இதைப் பற்றிய செய்தியை நாளேடுகளில் பகிரங்கமாக வெளியிட்டால் மட்டுமே மற்றவர்களுக்கு அச்சம் வரும் என்பதால் அதற்கான பணிகளை துரிதப்படுத்துகிறோம். தற்போது தீவிர நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் அதிகப்படியான புகார்கள் வருகின்றன'' என்கிறார்.

பள்ளிகள் திறந்த பிறகும் ஏராளமான புகார்கள் வருவதாகக் குறிப்பிட்ட சுந்தரி, `` புகார்களின்பேரில் பெரும்பாலும் திருமணங்களை நிறுத்திவிடுகிறோம். தாமதமாக தகவல் வெளிவந்த இடங்களில் எல்லாம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணைத் தவிர, புதிதாக ஒரு வாட்ஸ்அப் எண்ணையும் அறிவிக்க வைக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அந்த வாட்ஸ்அப்பில், ஒரு வரி தகவல் சொன்னாலே நாங்கள் உதவிக்கு வருவோம்'' என்கிறார்.

15 மாவட்டங்களில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு யுனிசெஃப் அமைப்பு உதவி செய்து வருவதாக சுந்தரி தெரிவித்தார்.

மேலும், `` பெரம்பலூர், திருப்பூர், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. திருப்பூரில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் புகார்கள் வருகிறதா எனத் தெரியவில்லை. திண்டுக்கல்லில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக இருப்பதால் புகார்கள் வருகிறதா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் தாலியைக் கட்டிக் கொண்டே மாணவிகள் பள்ளிக்கு வருவதையும் பார்க்க முடிகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. ஆனாலும், புகார்கள் வந்து கொண்டுதான் உள்ளன'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: