ஆப்கன் டிரோன் தாக்குதல்: 'அமெரிக்க துருப்புகள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்படமாட்டார்கள்' - பென்டகன்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு எந்த அமெரிக்க ராணுவத்தினரையோ, அதிகாரிகளையோ பொறுப்பாக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறத் தொடங்கிய பிறகு தாலிபன், அந்நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றினர். அப்போதுதான் அமெரிக்கா இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது.
அத்தாக்குதலில் ஒரு சமைரி அஹ்மதி என்ற ஒரு தொண்டூழிய சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உதவியாளரின் கார், இஸ்லாமிக் அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடைய ஓர் உள்ளூர் அமைப்போடு தொடர்பில் இருந்ததாக அமெரிக்க உளவுத் துறை நம்பியது.
ஆனால் அமெரிக்காவின் மத்திய கமாண்டின் ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் "ஒரு சோகமான தவறு" என பின்னர் பொதுவெளியில் கூறினார்.

கடந்த மாதம் ஓர் உயர்மட்ட உள்விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், டிரோன் தாக்குதல் தொடர்பாக எந்த வித தவறான நடவடிக்கையோ, புறக்கணிப்போ இல்லை, எந்த வித சட்ட விதிமுறைகளும் மீறப்படவில்லை. எனவே எந்தவித ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் எடுக்கத் தேவை இல்லை என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் லாய்ட் ஆஸ்டினால் திங்கட்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கர்கள் உட்பட பல தரப்பு மக்களை மீட்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் எனப்படும் கடும்போக்குவாத அமைப்பு ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
சமைரி அஹ்மதியின் காரை பின் தொடர்ந்தது அமெரிக்க உளவுத் துறை. மேலும் விமான நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அவரது வீட்டருகில் நிறுத்திய போது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த கார், இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் அமைப்போடு தொடர்புடைய வளாகம் ஒன்றில் காணப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அக்காரின் நகர்வுகள் ஐ.எஸ். அமைப்பு காபூல் விமான நிலையத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பான உளவுத் துறை செய்திகளோடு ஒத்துப்போயின.
டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கார் இரண்டாவது முறையும் வெடித்தது. அதுவே காரில் வெடிமருந்து இருந்ததற்கான சாட்சி என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது, சமைரியின் வீட்டில் காரின் பாதையில் இருந்த ப்ரொபேன் டேங்க் வெடித்ததால் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?
- மூன்றாம் அலையை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?
- காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது தீவிரவாத தாக்குதல், இருவர் உயிரிழப்பு
- மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை?
- சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது பொருளாதார நெருக்கடியால் தான் டாக்சி ஓட்டியதை நினைவுகூர்ந்த புதின்
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திடீர் சிங்கப்பூர் பயணம் ஏன்?
- வனநிலத்தில் ஆதியோகி சிலையா? - ஆர்.டி.ஐ பதிலும் ஈஷா யோக மையம் சர்ச்சையும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








