மாரிதாஸ் என்ற யூடியூபர் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

பட மூலாதாரம், @MaridhasAnswers twitter handle
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ் என்ற யூடியூபர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு.
மாரிதாஸ் என்ற யூடியூபர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து, மாரிதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாரிதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து அது சம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்திய முப்படைத் தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகலைப் பதிவிட வேண்டாம் என ட்விட்டரில் தெரிவித்தேன்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர். என் மீது வழக்குப் பதிவுசெய்வதிலும் கைது நடவடிக்கையிலும் சட்டத்தைப் பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, "அவரது ட்விட்டரில் முப்படைத் தலைமைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது" என்ற வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே" என்று கூறினார்.
பிறகு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டதால், அவரது கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார். புகார் அளித்த பாலகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாரிதாஸ் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் "மாரிதாஸைப் பலர் பின்தொடர்கிறார்கள். இந்த வழக்கு இப்போது துவக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தத் தருணத்திலேயே இதனைத் தடைசெய்யக்கூடாது. இது விசாரணையைப் பாதிக்கும்" என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோலப் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
அனைத்துத் தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது செல்லாது என்று கூறி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தவிர, மோசடியாக போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
பிற செய்திகள்:
- இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?
- மூன்றாம் அலையை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?
- காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது தீவிரவாத தாக்குதல், இருவர் உயிரிழப்பு
- மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை?
- சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது பொருளாதார நெருக்கடியால் தான் டாக்சி ஓட்டியதை நினைவுகூர்ந்த புதின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








