உத்தர பிரதேசம்: சொந்த சகோதரியையே திருமணம் செய்த நபர் - அரசு திட்டத்தின் கீழ் பணம் பெற அரங்கேற்றிய நாடகம்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 18.12.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
அரசு திட்டத்தின் கீழ் வரும் பணத்தை பெற நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் அம்மாநில சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியோருக்கு மாநில அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். இதில், 20 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும். எஞ்சிய தொகை பணமாகவும், பரிசுப்பொருட்களாகவும் வழங்கப்படும்.
இதற்கிடையில், இந்த திருமண திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த திருமண திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக, ஒருவர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
அம்மாநிலத்தின் பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா பகுதியில் அரசின் திருமண திட்டத்தின் கீழ் கடந்த 11-ம் தேதி 51 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் மற்றும் அவர்கள் அளித்த ஆவணங்களை அந்தந்த கிராம மக்களின் உதவியுடன் சரிபார்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு தம்பதியின் புகைப்படத்தை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை கிராம மக்கள் அடையாளம் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் பணத்தை பெற சொந்த சகோதரியையே திருமணம் செய்த அந்த நபர் மீது போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரது சகோதரியின் பெயர்களை அதிகாரிகள் தரப்பில் வெளியிடவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு எட்டு லட்சம் ரூபாய் அபராதம் - என்ன பிரச்சனை?

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரா நாவி மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்துவரும் பெண்ணுக்கு, தெருவோர நாய்களுக்கு உணவளித்ததற்காக 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
குடியிருப்பு வளாகத்திற்குள் தெருவோர நாய்களுக்கு உணவளித்த காரணத்தினால் குடியிருப்பு சங்கத்தின் நிர்வாகக் குழு அபாரதம் விதித்துள்ளதாக அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
என்ஆர்ஐ என்ற அந்த குறிப்பிட்ட வளாகத்தில் கிட்டத்தட்ட 40 குடியிருப்புகள் அமைந்துள்ளன. தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவாக பேசிய அன்ஷு சிங், "வளாகத்திற்குள் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. குப்பைகளை கொட்டுவதாகக் கூறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை எனது ஒட்டுமொத்த அபராதத் தொகை 8 லட்சத்தை தாண்டியுள்ளது.
குடியிருப்பு வளாகத்திற்குள் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது அபாரதம் விதிக்க வேண்டும் என்ற முடிவை குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாக குழு எடுத்தது. இந்த நடைமுறை கடந்த ஜூலை மாதம் முதல் அமலில் உள்ளது. குடியிருப்பு வளாகத்திற்குள் பல தெருநாய்கள் சுற்றி திரிகின்றன" என்றார்.
இதுகுறித்து குடியிருப்பு வளாகத்தில் வசித்துவரும் லீலா வர்மா என்பவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர், மக்களை பின்தொடர்ந்து சென்று நாய்களுக்கு உணவளிப்பவர்களின் பெயரை குறித்து வைத்து கொள்கிறார். பின்னர், நிர்வாகக் குழுவுக்கு இது தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அபராத தொகையை கணக்கிடுகின்றனர்" என்றார்.
இதுகுறித்து குடியிருப்பு வளாகத்தின் செயலாலர் வினிதா ஸ்ரீநந்தன் கூறுகையில், "மாலை நேர பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகள் நாய்களை துரத்திச் செல்கின்றனர். அச்சம் காரணமாக முதியவர்கள் சுதந்திரமாக நடக்க முடிவதில்லை.
வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பிற பகுதிகளில் நாய்கள் மலம் கழிப்பது தொல்லையை தருகிறது. இதனால் தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இரவு முழுவதும் நாய்கள் குரைப்பதால் பொதுமக்கள் சரியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். நாய்கள் வராமல் இருப்பதற்கு அடைப்பு உருவாக்கப்பட்டது. இருப்பினும், சிலர் நாய்களுக்கு திறந்தவெளியில் உணவளித்துவருகின்றனர்" என்றதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகிறது தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை: அமைச்சர் க.பொன்முடி தகவல்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்துக்கான மாநில கல்விக்கொள்கை விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளதாக இந்து தமிழ்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,000 பழங்குடி மர இனங்களின் கன்றுகளை நடும் விழா நேற்று நடைபெற்றது. கிண்டி ரோட்டரி கிளப் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார்.
அப்போது மாணவர்களிடையே "மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என நான் ஏங்கியது உண்டு. இந்திய அளவில் சிறப்புமிக்க கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்வியைத் தாண்டி விளையாட்டு, சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
கல்லூரியில் தற்போது 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால், இங்குப் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் கல்லூரி மொத்தமும் அழகிய வனமாகிவிடும்.
தமிழகம் இருமொழிக் கொள்கையைக் கொண்டுள்ளது. தமிழ்பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் ஆங்கிலத்துடன் தமிழ்மொழியையும் நன்றாகப் படிக்கவேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பை முழுமையாகப் பெற முடியும்." என்றார்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் "தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப் படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராவணன், கல்லூரி முதல்வர் ராமன், கிண்டி ரோட்டரி கிளப் தலைவர் மோதிஷ், எக்ஸ்னோரா தலைமை நிர்வாக அதிகாரி செந்தூர் பாரி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












