சிறுபான்மையினர் உரிமை தினம்: இந்தியாவில் சிறுபான்மை மதங்களாக அறிவிக்கப்பட்ட 6 மதங்கள் எவை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாஸனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 18ஆம் தேதியன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
கலாச்சார ரீதியாக, மொழி, இன ரீதியாக, தேச ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்கிறது ஐ.நாவின் பிரகடனம். சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்துவது என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்றும் கூறுகிறது இந்த சாஸனம்.
இதையடுத்து இந்தியாவில் 1992ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள். 2014 ஜனவரி 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஜைனர்களும் மத சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தத் துறை செயல்பட்டு வந்த நிலையில், 2006ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையினர் உரிமைக்கென தனியாக அமைச்சகம், ஆணையம் ஆகியவை செயல்பட்டுவந்தாலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவது, தாக்கப்படுவது, கலவரங்களின்போது அவர்களது சொத்துகள் சூறையாடப்படுவது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன.
அரசுகள் சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசினாலும், அரசின் அமைப்புகள், காவல்துறை போன்றவை சிறுபான்மையினரை அணுகும் விதத்தில் பாரபட்சம் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. சிறுபான்மையினர், அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை என்கிற புகாரும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களின் சிறைகளில், அந்த மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினரின் சதவீதத்தைவிட அதிக அளவிலேயே சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகள் இருப்பதை தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில்தான் மதச்சார்பற்ற சக்திகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாகிறது என்கிறார் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்ஃபோன்ஸ்.
"ஜனநாயகத்தில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் அது எளிதில் பெரும்பான்மை வாதமாக மாறிவிடும் ஆபத்தையும் உள்ளடக்கியது என்பதுதான். எதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராக இருப்பவர்களை எதிரிகளாகச் சித்தரித்து பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் முயலும். அது நடந்தும் இருக்கிறது. இந்தப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என எல்லா கண்டங்களிலும் நடந்துவருகிறது.
ஆனால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என்பதுதான் கவலைப்பட வைக்கிறது. மதச் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள். வேறு விதங்களில் சிறுபான்மையினராக இருப்பவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள்" என்கிறார் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களிலும் சிறுபான்மையினரை அச்சுறுத்தவது நடக்க ஆரம்பித்துள்ளது என்று கூறும் பீட்டர் அல்ஃபோன்ஸ் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறார். "கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றக் கூட்டத் தொடர் பெலகாவியில் நடக்கும்போது, கிறிஸ்துவ தேவாலயங்களில் ஆராதனை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்கள். கர்நாடக அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக மதமாற்றத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கிறார். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதுகூட சிக்கலானதாக மாறிவருகிறது. சமீப காலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்கள் போன்றவற்றில் சில பிரிவினர் உட்புகுந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Tuul & Bruno Morandi
ஆனால், இதற்கு அரசியல் ரீதியான கோணமும் இருக்கிறது என்கிறார் பீட்டர் அல்ஃபோன்ஸ். "பெரும்பான்மை மதத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்க மாட்டார்கள். ஆகவேதான் இதுபோன்ற பிரச்சனைகள் எழுகின்றன. ஆகவே மதச் சார்பற்ற சக்திகளும் அரசியல் கட்சிகளும் இதனை மதரீதியான சிக்கலாக அணுகாமல் அரசியல் பிரச்சனையாகவே அணுக வேண்டும்" என்கிறார் அவர்.
ஆனால் பொதுவாகவே உலகம் முழுவதும் சிறுபான்மையினராக இருப்பதென்பது ஒரு அரசியல் ஊனம்தான்; ஆகவேதான் பெரும்பான்மையினர் அதிகாரத்தை வைத்துக்கொள்ளட்டும். சிறுபான்மையினருக்கு வாழ்வதற்கான உரிமையைக் கொடுங்கள் என்று கூறுகிறோம் என்கிறார் பீட்டர்.
ஆனால், பல தருணங்களில் வாக்கரசியலுக்காக சிறுபான்மையினருக்கு சலுகைகள் அதீதமாக அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் உண்டு. "முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி இதற்கு ஒரு சரியான விளக்கத்தை அளித்திருக்கிறார். ஒரு தாயைப் பொறுத்தவரை நான்கைந்து குழந்தைகளில் சற்று நலிந்த குழந்தை மீது அதிகம் கவனம் செலுத்துவது போலத்தான் அது என்றார் அவர். அதுவே சரியான விளக்கம்" என்கிறார் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
ஜனநாயகத்தில் ஆட்சி என்பது பெரும்பான்மையினரால் தேர்வுசெய்யப்படலாம். ஆனால், அங்கே உள்ள சிறுபான்மையினரின் மகிழ்ச்சிதான் அந்த ஜனநாயகத்தின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது அதைத்தான்.
பிற செய்திகள்:
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












