ரூ. 80 லட்சத்துக்கு விலைபோன எருமை - செல்ஃபிக்கு அலைமோதிய கூட்டம்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 20.12.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
கஜேந்திரா எருமை மாட்டின் எடையை பராமரிக்க, இந்த மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் கொடுப்பதாகவும், நான்கு வேலையும் கரும்பு, புல் உணவாக கொடுக்கப்படுவதாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
40,000 ஆண்டுகளாக, இந்தியர்களின் மரபணு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்

பட மூலாதாரம், Getty Images
இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் முன்னாள் ராணுவ வீரர்களை கெளரவிக்கும் வகையில் சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ராஸ்ற்றிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத், மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசை ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தவில்லை என தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் பேசிய அவர், "வெவ்வேறு நிர்வாகிகள், வெவ்வேறு கொள்கைகள், வெவ்வேறு வேலை முறைகளை மத்திய அரசு வைத்துள்ளது. எண்ணங்களும் பண்பாடுகளும் மட்டுமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தது. அது பயனுள்ளது. அரசில் உள்ள முக்கிய நபர்கள் ஆர்எஸ்எஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்.
அவர்கள் அப்படியே இருப்பார்கள். அத்தகைய உறவு மட்டுமே உள்ளது. ஊடகங்கள் சொல்வது போல 'ரிமோட்டின் மூலம் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கங்கள் எங்களுக்கு எதிராக இருந்திருக்கின்றன. எங்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் 96 ஆண்டுகளாக அனைத்து தடைகளையும் தாண்டி இயங்கி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் செய்த பணிகள், அவர்கள் நாடாளுமன்றத்தை மட்டும் நடத்தவில்லை, சமுதாய மக்களைத் தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். தன்னாட்சி பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறது.
விளம்பரம், பொருளாதார பலம், அரசு உதவி எதுவுமின்றி சமுதாயத்திற்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய மக்கள் அனைவரின் மரபணுவும் இன்றைய இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான். நம் அனைவரின் முன்னோர்களும் ஒன்றுதான். அந்த முன்னோர்களால்தான் நம் நாடு செழித்தது, கலாச்சாரம் தொடர்ந்தது" என்றார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
திருப்பூரில் ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ்திசையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள இடுவயில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தைச் சேர்ந்த கீதா (45) என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷுக்கு மாணவ - மாணவியர் புகார் அளித்தனர். தொடர்ந்து, சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்துக் சுத்தம் செய்ய வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், நேற்று முன் தினம் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புகார் தொடர்பாகப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளிடமும் தலைமை ஆசிரியர் கீதாவிடமும் விசாரணை நடத்தினார்.
இதனிடையே, விசாரணை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் கீதா மீது வந்த புகாரின் அடிப்படையில், பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியது, ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறையைக் சுத்தம் செய்ய வைத்த புகார் அடிப்படையில், தலைமை ஆசிரியர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கும் - எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்
- ஹேர்பின் உதவியால் வீடு வாங்கிய பெண் - சாத்தியமானது எப்படி?
- மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் பின்னணி என்ன?
- தமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் விடுத்த கோரிக்கை
- விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












