தமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் விடுத்த கோரிக்கை

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்த் மற்றும் ரஞ்ஜன் அருண் பிரசாத் (இலங்கையிலிருந்து)
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிக்க சென்ற 55 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பவில்லை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கருப்பையா, தென்னரசு, லியோன், ஆல்டன், பீட்டர், உள்ளிட்டோருக்கு சொந்தமான ஆறு விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜ் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன், எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்களை அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
தமிழக மீனவர்களுக்கு சிறைக்காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை வரும் 31-ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அருளனந்தம் மற்றும் சவரிராஜ் ஆகியோரது இரண்டு விசைப்படகுகளில் சென்ற சிலுவை, இன்னாசி, மைக்கேல், ராமநாதன், ஜாக்சன், அந்தோணி உள்ளிட்ட 12 மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தில்; சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடு போவதாகவும், திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 50 ஆயிரம் மீனவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
"இந்தாண்டு மீனவர்களுக்கு கருப்பு கிறித்துமஸ்"
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, "நேற்று மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் கண்டனத்திற்குறியது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கை நிகழ்வாக உள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வர இருக்கும் நேரத்தில் படகையும், மீனவர்களையும் கைது செய்து அழைத்து சென்றால் மீனவர்களின் குடும்பங்கள் பண்டிகையை எப்படி கொண்டாட முடியும். மீனவர்கள் இந்த ஆண்டு கிறித்துமஸ் பண்டிகையை கருப்பு தினமாக தான் கொண்டாட முடியும். துரித நடவடிக்கை எடுத்து படகுடன் மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இலங்கை கடற்படையின் இந்த தொடர் பிரச்னையால் மீன் பிடி தொழில் அழியும் நிலை ஏற்படும். எனவே உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்," என்றார்.
தந்தை மகன் இருவர் கைது
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர் காளிமுத்துவின் மனைவி செல்லம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எனது கணவருக்கு 65 வயது ஆகிறது. உடல் முடியாதவர் அவரால் உழைக்க முடியாத சூழலில் என்னுடைய மூத்த மகனுடன் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தினசரி எனது கணவர் மற்றும் மகனின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த என் குடும்பம் இருவரும் சிறையில் இருந்து திரும்பி வரும் வரை சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை," என்றார்.
விரைவில் மீனவர்கள் சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு
ஒரே நாளில் 55 மீனவர்கள் கைது செய்து இலங்கைக்கு பிடித்து சென்றது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நாளை டெல்லி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர அனைத்து ஏற்படுகளையும் முதலமைச்சர் துரிதப்படுத்துவார். முதலமைச்சர் மத்திய அரசை தொடர்பு கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம்; இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீடட்பது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார்,
வறுமையில் வாடும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து நிவாரணம் வழங்கப்படும். மேலும் மீன் வளத்துறையின் அதிகாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து முழு உதவிகளும் செய்வார்கள்," என தெரிவித்தார்.
"யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை தமிழக மீனவர்கள் நிறுத்த வேண்டும்" - டக்ளஸ் தேவானந்தா
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களிடம் பகிரங்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
யுத்தத்தினால் அனைத்தையும் இழந்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை, கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக உறவுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் கைது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கடல் வளங்கள் எந்தளவிற்கு அநியாயமாக அழிக்கப்படுகின்றன என்பதற்கு, இன்று கைது செய்யப்பட்ட 6 இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்தும் கைப்பற்றப்பட்ட பல மெட்ரிக் டன் மீன் குஞ்சுகளே சாட்சிகளாக இருக்கின்றன,'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், படகிலிருந்து கைப்பற்றப்பட்ட மீன் குஞ்சுகளின் படங்களையும், கடற்றொழில் அமைச்சு இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டது.
இவ்வாறு பெருந்தொகையான மீன்வளம் யாருக்கும் பயனற்ற முறையில் நாள்தோறும் அழிக்கப்படுவதாக கூறிய அவர், இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகளையும் நாள்தோறும் இந்திய மீன்பிடிக் படகுகள் அறுத்து நாசம் செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்.
இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார பிரச்னைகளை எதிர்கொள்வதோடு, இலங்கையின் கடல் வளமும் நாசமாக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
சட்டவிரோத இழுவை வலை பயன்படுத்தப்பட்டால் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைக்குடாப் பிரதேசத்தில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அழிக்கப்படுகின்றன.
இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எதிர்காலச் சந்ததிக்கும் வாழ்வாதாரமான கடல் வளம் இல்லாத சூழல் உருவாக்கப்படுகின்றது.
அதேவேளை, இந்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளுகின்ற சட்ட ரீதியான நடவடிக்கை காரணமாக, அப்பாவி தமிழக கடற்றொழிலாறர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது என அவர் கூறுகின்றார்.
எனவே, இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் சிறந்த வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய ஆழ்கடல் தொழிலில் ஆர்வத்தை செலுத்தி நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களின் பாதுகாப்பு நிச்சயம் உறுதி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
- வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












