டாட்டூ சடலம்: மாணவிகள் தொடர்புடைய வழக்கில் ஐவர் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட செங்கல்பட்டு கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவிகள் காவல்துறையை அணுகியிருக்கலாம். இந்த வழக்கு பல்வேறு நிலைகளில் எங்களுக்கு சவாலாக இருந்தது," என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஓபுளாபுரம் என்ற ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஈச்சங்காட்டுமேடு என்ற பகுதியில் வயல்வெளி ஒன்று உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமையன்று ரத்தக் கறை ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கவனித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து ஆரம்பாக்கம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வருவாய்த்துறையினரின் முன்னிலையில் ரத்தக்கறை காணப்பட்ட பகுதியில் இறந்து கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் இறந்த நபர் தொடர்பான விவரங்கள் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக காணாமல் போன நபர்கள் குறித்து காவல்நிலையங்களுக்கு வந்த புகார்களை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற கல்லூரி மாணவரை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் இறந்த நபரின் உடலில் இருந்த டாட்டூ உள்ளிட்ட அடையாளங்களை வைத்து கொல்லப்பட்டது பிரேம்குமார் என்ற கல்லூரி மாணவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த மாணவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.
மாணவிகளுக்கு மிரட்டல்

இது தொடர்பாக, நடந்த தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் இருவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. அந்த மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவிகளின் செல்போன் பேச்சு மற்றும் அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி பிரேம்குமார் தங்களை மிரட்டி வந்ததாக மாணவிகள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அந்தவகையில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஒரு லட்ச ரூபாய் வரையில் மாணவிகளிடம் அவர் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில், பிரேம்குமார் குறித்து திருவள்ளூரை சேர்ந்த தனது ஆண் நண்பர் அசோக்கிடம் மாணவிகள் இந்த விவரத்தைத் தெரிவித்ததாகவும் அவரது ஆலோசனையின் பேரில் செங்குன்றம் பகுதிக்கு வந்தால் பணம் தருவதாகக் கூறி, பிரேம்குமாரை வரவழைத்துள்ளனர். அப்போது மாணவிகளும் அங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பிரேம்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கைதான ஐவர் கும்பல்
இதன் தொடர்ச்சியாக, ஈச்சங்காடுமேடு பகுதியில் உள்ள வயல்வெளிக்கு பிரேம்குமாரை அழைத்துச் சென்று வெட்டிக் கொன்றதாக கைதான கும்பல் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில், சோழவரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், ஜெகநாத், தமிழ், பிரவீன்குமார் ஆகியோரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அசோக், பூச்சி என்கிற லெவின் ஆகிய இருவரின் பெயர்களைத் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், வழக்கறிஞர்களின் உதவியோடு சம்பந்தப்பட்ட இருவரும் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
``என்ன நடந்தது?'' என கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரீத்துவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
``இது திட்டமிட்ட சம்பவம் கிடையாது. பிரேம்குமார் என்பவர், இதேபோல் வேறு சில பெண்களையும் ஏமாற்றியுள்ளார். இந்த மாணவிகளிடம் அவர் பேசிப் பழகியுள்ளார். அதை வாய்ஸ் ரெகார்டிங் செய்தும் அவர்களைப் புகைப்படம் எடுத்தும் மிரட்டியுள்ளார். `எனக்குப் பணம் கொடு' என கேட்டதால், மாணவிகளும் வீட்டில் திருடி பணம் கொடுத்துள்ளனர்.
அப்போது சமூக ஊடகம் மூலம் வேறு ஒரு பையனுடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும் கடந்த ஒன்றரை மாதமாக அவருடன் மாணவிகள் பேசி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பிரேம்குமாரைப் பற்றி அந்த நண்பரிடம் கூறியபோது, உங்களை மிரட்டாமல் பார்த்துக் கொள்கிறேன் என அந்த நபர் உறுதி கொடுத்துள்ளார். கொலையில் அந்த மாணவிகள் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை,'' என்கிறார் டிஎஸ்பி ரீத்து.
கஞ்சா போதை; குற்ற வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
``மாணவிகளுக்கு 15 வயதுதான் ஆகிறது. `அவனை மிரட்டி விட்டு விடு' என ஆண் நண்பரிடம் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட நபர் தரப்பில் உள்ளவர்களும் கைதானவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட நபர்களில் சிலர், காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள்தான். இவர்கள் மீது பெரிய வழக்குகள் எதுவும் இல்லை. மாணவிகளின் செல்போன் அழைப்பு விவரங்களை எடுத்துப் பார்த்தால்தான் இதர விவரங்கள் தெரியவரும்'' என்றும் டிஎஸ்பி ரீத்து கூறினார்.
மேலும், ``மாணவியின் பெற்றோர் மிகவும் சாதாரண நிலையில் உள்ளவர்கள்தான். வேறு ஊர்களில் இருந்து பிழைப்புக்காக வந்துள்ளனர். பிரேம்குமாருக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் மாணவிகள் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்று அவர் கூறினார்.
``இந்த கொலை வழக்கில் மாணவிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம்.
``அதை மேலிடம்தான் முடிவு செய்யும். இந்த விவகாரத்தில் மாணவிகள் போலீஸை அணுகியிருக்கலாம். கைது செய்யப்பட்டவர்களும், காவல்துறையில் அந்த மாணவரை ஒப்படைத்திருக்கலாம். பிரேம்குமாரின் நண்பர்களில் சிலர், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். அவர்களை வைத்தும் மாணவிகளை மிரட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது'' என்றார் ரீத்து.
சந்தேக நபர்கள் பிடிபட்டது எப்படி?
``இந்த வழக்கில் காவல்துறைக்கு சவாலாக இருந்தது எது?'' என்றோம்.
``முதலில் உடல் கிடப்பது தொடர்பாக உள்ளூர் நபர் ஒருவர் தெரிவித்தார். அது காலியாக உள்ள ஓர் இடம். அது யார் என தெரியவில்லை. கொல்லப்பட்ட நபர், வட மாநிலத்தவரா, தென் மாநிலத்தவரா என தெரியவில்லை. மார்பிலும் கையிலும் பச்சை குத்தியிருந்தார். அதை புகைப்படம் எடுத்து காவல்நிலையங்களுக்கு அனுப்பி, காணாமல் போனவர்கள் விவரத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது. அதன்பிறகு விசாரணையை துரிதப்படுத்தினோம். வழக்கில் தொடர்புடைய சிலர் ராமநாதபுரம் சென்றுவிட்டனர். அவர்களையும் செல்பேசி கோபுர சிக்னலை வைத்து கைது செய்தோம். இந்த வழக்கை எஸ்.பி நேரடியான கண்காணித்தார். எங்களுடைய குற்றப்புலனாய்வுக் குழுவில் உள்ளவர்களும் கடுமையாக உழைத்தனர். சற்று சவாலாகவே இந்த வழக்கு இருந்தது'' என்கிறார் டிஎஸ்பி ரீத்து.
``பாலியல் தொல்லைக்காக கொலை வரையில் மாணவிகள் செல்வதை எப்படி எடுத்துக் கொள்வது?'' என மூத்த மனநல மருத்துவர் சிவநம்பியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

``கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை என்பதெல்லாம் அதிகப்படியாக பேசப்படுகிறது. அதாவது ஏற்கெனவே நடந்து கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் ஊடகங்களின் வாயிலாக வெளியில் வருகின்றன. இதன்மூலம் குற்றங்கள் பெருகத்தான் செய்கின்றன. போக்சோ சட்டத்தில் கடுமையான தண்டனை உண்டு என்பது தெரிந்தும் தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. `நாம் தப்பித்துக் கொள்ளலாம்' என்ற மனநிலையில் சிலர் இருப்பதுதான் காரணம்'' என்கிறார் மருத்துவர் சிவநம்பி.
சிக்கல்களை ஆராய்வதில்லை
சமூக ஊடகங்களின் மூலம் பெண்களுக்கு நண்பர்களின் வட்டாரம் அதிகரிப்பதும் முக்கியக் காரணமாக உள்ளதாகக் கூறும் சிவநம்பி, `` ஒரேநேரத்தில் இரண்டு, மூன்று நண்பர்களை துணையாக்கிக் கொள்வதன் மூலம் வளரிளம் பருவத்துக்குரிய பொறாமைக் குணங்கள் தலைதூக்குகின்றன. இதன்மூலம், பெண்களிடம் பணம் பறிக்கும் வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அண்மையில் சென்னையை சேர்ந்த சாமியார் ஒருவர், 16 வயதில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்த பிறகும் மிரட்டிப் பணம் பறித்த சம்பவமும் நடந்தது.
மேலும், `எனக்குப் பணம் கொடுக்காவிட்டால் சமூக ஊடகத்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்' எனக் கூறி மிரட்டுவதும் தொடர்கிறது. `எப்படிக் கொலை செய்வது?' என யூடியூப் பார்த்துத் தெரிந்து கொள்வதாக கைதாகும் சிலர் தெரிவிக்கின்றனர். `பிரசவம் பார்ப்பது எப்படி?' யூடியூப் வீடியோ மூலம் பார்த்து செய்ததாக கைதான ஒருவர் தெரிவிக்கிறார். இதற்கெல்லாம் சமூக ஊடகங்களின் வரைமுறையற்ற செயல்பாடுகள்தான் காரணம். பணம் கேட்டு மிரட்டும்போது, சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களது ஆண் நண்பர்களிடம் உதவி கேட்கின்றனர். இதனால் வரக்கூடிய சிக்கல்களை அவர்கள் பார்ப்பதில்லை'' என்கிறார்.
கொலை வரையில் செல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசுகையில், ``தொழில்முறையிலான குற்றவாளிகளுக்கு மட்டுமே, தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்பது தெரியும். அதையும் அறிந்தே ரிஸ்க் எடுப்பார்கள். கும்மிடிப்பூண்டி சம்பவம் என்பது திட்டமிடப்படாத ஒரு கொலைதான். இந்த விவகாரத்தில் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு சம்பவத்தை நிகழ்த்துவதை சில இளைஞர்கள் சாதனையாக பார்க்கிறார்கள். இதற்கு சினிமாவும் ஒரு காரணம். பெண்களுக்கு தைரியம் அவசியம்தான். ஆனால், அவை நல்ல விஷயங்களுக்காக இருக்க வேண்டும். தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வைத்து ஒருவர் மிரட்டுகிறார் என்றால், காவல்துறையில் புகார் கொடுக்கலாம். அதற்காக `கொலை செய்' என்று சொல்வது தைரியம் அல்ல, அவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளதாகத்தான் அர்த்தம்'' என்கிறார்.
மேலும், குடும்ப உறவுகளுக்குள் கலந்துரையாடல் இல்லாமல் போனதே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என விவரிக்கும் சிவநம்பி, ``நமது பிள்ளைகள் நல்லபடியாக இருப்பதாகத்தான் பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தால்தான், அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பது தெரியும். ஒருகட்டத்தில் பெற்றோர் கவனத்துக்கு சில தகவல்கள் தெரியவரும்போது அதிர்ச்சியடைகிறார்கள்.
வீட்டிலும் ஆளுக்கு ஒருவர் செல்போனை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, குடும்ப கலந்துரையாடல் என்பதே அருகிப் போய்விட்டது. அதனால் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இணையவழிப் பயன்பாடுகளும் சினிமாக்களும் வேண்டாத வளர் இளம் பருவத்தினருக்குத் தைரியத்தை ஊட்டுகின்றன. அதனால் வீண் விளைவுகளை சந்திக்கிறார்கள்'' என்கிறார்.
பிற செய்திகள்:
- 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம்
- தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்: இணையத்தில் வைரலாகும் படங்கள், காணொளி
- ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? சீறும் சீமான்
- 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம்
- தடுப்பூசி போட்டால் மதுவுக்கு 10% தள்ளுபடி, இலவச எண்ணெய்: மக்களை கவருமா ஊக்கப்பரிசுகள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












